Last Updated : 18 Nov, 2019 12:24 PM

 

Published : 18 Nov 2019 12:24 PM
Last Updated : 18 Nov 2019 12:24 PM

’’கமலுடன் சேர்ந்து அரசியல் செய்யுங்கள் ரஜினி'' - கமல் 60 விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு

’’கமலும் ரஜினியும் சேர்ந்து அரசியல் செய்தால், கலையுலகமே பின்னால் திரண்டு வரும்’’ என்று கமல் 60 விழாவில், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

கமல் திரைக்கு வந்து 60-ம் ஆண்டை முன்னிட்டு, ‘உங்கள் நான்’ எனும் விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷங்கர், மணிரத்னம், கார்த்தி, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:

நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் என்று இங்கே கேட்கிறார்கள். இது எனக்குப் புரியவே இல்லை. ஒரு டாக்டர் அரசியலுக்கு வரலாம். ஒரு வக்கீல் அரசியலுக்கு வரலாம். ரியல் எஸ்டேட்காரர் அரசியலுக்கு வரலாம். ஆனால் நடிகர் மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது. ஏன் இப்படிச் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை.

அவர்களுக்குத் தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான் நம்மை ஆண்டுகொண்டிருந்தார்கள். அறிஞர் அண்ணா திரைப்படத்தில் வசனம் எழுதிவிட்டுத்தான் அரசியலுக்கு வந்தார். எம்ஜிஆர், சினிமாவில் நடித்துவிட்டுத்தான் அரசியலுக்குள் வந்தார். கலைஞர் கருணாநிதி, திரைப்படங்களில் வசனம் எழுதிவிட்டுத்தான் வந்தார். அப்படி இருக்கும்போது, இப்போது புதிதாக வருவது போல் நடிகர்கள் ஏன் வருகிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கமலை வைத்து படம் பண்ண வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்று கதை சொல்லி, ஓகேயாகி, சம்மதம் சொல்லி அது ஏனோ மிஸ்ஸாகிவிட்டது.

ரஜினியை வைத்து ‘நான் சிகப்பு மனிதன்’ பண்ணினேன். ஒரு ரசிகனாக இருந்துதான் அந்தப் படத்தை இயக்கினேன். அவரிடம் ’நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்’ என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். அவர் இன்னும் வரவில்லை. ஆனால் கமல் துணிச்சலுடன் அரசியலில் இறங்கிவிட்டார்.

அரசியலுக்கு வருவதற்கு துணிச்சல் வேண்டும். கமலுக்கு இருக்கும் துணிச்சலை நாம் முதலில் பாராட்ட வேண்டும். அவர் அரசியலில் நிச்சயமாக விஸ்வரூபம் எடுத்துவிட்டார். அதில் சந்தேகமே இல்லை. அதேபோல, ரஜினியும் அரசியலுக்கு வரவேண்டும் என்று இப்போதும் கேட்டுக்கொள்கிறேன். நான் மட்டுமில்லை, கோடானுகோடி ரசிகர்களும் ஆசைப்படுகிறார்கள். தயவுசெய்து எங்களை ஏமாற்றிவிடாதீர்கள். சீக்கிரமாக வாருங்கள். சமீபகாலமாக நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

கமல், ரஜினி இருவரும் இரண்டு ஜாம்பவான்கள். அரசியலில், மிகப்பெரிய சாதனையைச் செய்வதற்கு கமல் ஆரம்பித்துவிட்டார். இதேபோல் ரஜினியும் வரவேண்டும். இவர்கள் இருவரும் சேர்ந்தால், தமிழ்நாட்டுக்கு நல்லது. தமிழர்களுக்கு நல்லது. இருவரும் இணைந்து அரசியல் செய்யவேண்டும் என்கிற என் ஆசையை, இந்த மேடையில் பகிரங்கமாகவே சொல்லிக்கொள்கிறேன்.

கமலும் ரஜினியும் கலையுலகின் மூத்த பிள்ளைகள். நீங்கள் இருவரும் இணைந்து அரசியலுக்கு வரும்போது, உங்கள் பின்னால் கலையுலகமே இருக்கும் என்று நம்புகிறேன். இளைஞர்கள் உங்களின் பின்னால் வருவார்கள் என்பது உறுதி.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x