Published : 16 Nov 2019 07:21 PM
Last Updated : 16 Nov 2019 07:21 PM
எல்லா அவமானங்களையும் தாங்கிக்கொண்டு ‘சங்கத்தமிழன்’ படத்தை ரிலீஸ் செய்துள்ளோம் என படத்தை வெளியிட்ட லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘சங்கத்தமிழன்’. ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் நாசர், சூரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.
முதலில் தீபாவளி வெளியீடாக இருந்த இந்தப் படம், அதிலிருந்து பின்வாங்கி நவம்பர் 15-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றிய லிப்ரா புரொடக்ஷன்ஸ், சென்னை, கோவை, திருநெல்வேலி என தனித்தனியாக விநியோக உரிமைகளை விற்று, விளம்பரப்படுத்தும் பணிகளையும் துரிதப்படுத்தியது. ஆனால், அறிவித்தபடி நேற்று இந்தப் படம் வெளியாகவில்லை.
‘வீரம்’ படத்தின்போது வரிச்சலுகை பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் 7ஜி சிவா என்பவர் புகார் அளித்தார். சம்பளம் உள்ளிட்ட சில பிரச்சினைகளும் ஒன்றிணைந்து சுமார் 5 கோடி ரூபாய் வரை இருந்தால் மட்டுமே படம் வெளியாகும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இது தொடர்பாக கடந்த 4 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல் 3 நாட்களிலும் பேச்சுவார்த்தை இழுபறியாக, ஒருவழியாக நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில், “எல்லா அவமானங்களையும் தாங்கிக்கொண்டு ‘சங்கத்தமிழன்’ படத்தை ரிலீஸ் செய்துள்ளோம்” என படத்தை வெளியிட்ட லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் வேதனையுடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “கிட்டத்தட்ட 48 மணி நேரம், பல பொய் குற்றச்சாட்டுகள், பல பொய்யான தகவல்கள் என் மீதும், என் லிப்ரா நிறுவனம் மீதும். இவையனைத்துக்கும் பதிலும் உண்மையும் தெரிந்தும், எதையும் பேசாமல், எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல், எல்லா அவமானங்களையும் தாங்கிக்கொண்டு, விஜயா புரொடக்ஷன்ஸுக்கு நான் செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற, பிரமாண்ட முறையில் விளம்பரப்படுத்தி 350க்கும் மேற்பட்டத் திரையரங்குகளில் வெளியிட்டுள்ளோம்.
ரவீந்தர் சந்திரசேகரன்: கோப்புப் படம்
இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் சுந்தர் மற்றும் பாரதி ரெட்டிக்கும், இயக்குநர் விஜய் சந்தருக்கும் எங்கள் நன்றிகள். இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணனாக உதவிய பெடரேசன் தலைவர் அருள்பதி, அவருடன் சேர்ந்து உதவிய ஜேஎஸ்கே சதீஷ், தேனாண்டாள் முரளி, எச்.முரளிக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.
இதுவரை இல்லாத அளவு இந்தப் படத்தை மிகப் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யலாம் எனப் போராடிக் கொண்டிருக்கும்போதே படத்துக்கு நெல்லையில் தடை, லிப்ரா கடனில் உள்ளது, இடையே விஜய் சேதுபதியின் என்றும் தீராத பிரச்சினையான பேட்டிகளுக்கு நேரம் ஒதுக்குவது... இவற்றுக்கு இடையே எங்களுடைய ஒரே நோக்கம், படத்தை வெளிக்கொண்டு வருவது மட்டுமே.
ஒவ்வொரு முறை விழுந்து எழுந்து மேலே வரும்போதும் எத்தனை இடைஞ்சல்கள், கேலிகள், அவமானங்கள், புறக்கணிப்புகள். ஆனால், எது நடந்தாலும், இந்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் கொண்ட கருத்தில் மாறப்போவது இல்லை.
ஒருவர் மீது எளிதாகக் குற்றம் சுமத்தி, கேலி செய்துவிட்டுப் போய்விடலாம். ஆனால், அவர்களுக்கான பதிலை காலம் நின்று சொல்லும் என்ற நம்பிக்கை எப்போதும் எங்களுக்கு உள்ளது. எங்களுடைய ஒரே நோக்கம், எடுத்த வேலையை ஒழுங்காகச் செய்து, அதை சரியான இடத்துக்குக் கொண்டு செல்வது மட்டுமே. அதை எப்போதும் லிப்ரா செய்து கொண்டுதான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார் ரவீந்தர் சந்திரசேகரன்.