Published : 15 Nov 2019 05:28 PM
Last Updated : 15 Nov 2019 05:28 PM

முதல் பார்வை: ஆக்‌ஷன்

சி.காவேரி மாணிக்கம்

இந்தியாவில் பல நாச வேலைகளைச் செய்த தீவிரவாதி, பாகிஸ்தான் அரசு உதவியுடன் அந்நாட்டில் தங்கியிருக்கிறான். அங்குள்ள அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி அவனை ஹீரோ எப்படி இந்தியாவுக்குக் கொண்டு வந்தார் என்பதுதான் ‘ஆக்‌ஷன்’.

தமிழக முதல்வர் பழ.கருப்பையாவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் ராம்கி, துணை முதல்வர். இளையவர் விஷால், ராணுவத்தில் கர்னலாகப் பணிபுரிகிறார். ராம்கியை முதல்வர் வேட்பாளராக நிறுத்திவிட்டு, அரசியலில் இருந்து விலக நினைக்கிறார் பழ.கருப்பையா.

அதை அறிவிக்கும் பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்து, தேசியக் கட்சியின் மூத்த தலைவர் இறந்து விடுகிறார். அந்தப் பழி ராம்கி மேல் விழுகிறது. எதிர்பாராத விதமாக ராம்கி தற்கொலை செய்து கொள்கிறார். ராம்கி மேல் விழுந்த பழியைத் துடைக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் அவதாரமே படத்தின் மீதிக்கதை.

ஒரு கட்டிடத்தில் இருந்து இன்னொரு கட்டிடத்துக்குத் தாவுவது; யாரும் செல்ல முடியாத இடத்துக்குக்கூட எளிதில் செல்வது; படிக்கட்டு, மொட்டை மாடி, வீடு, உயர்ந்த கட்டிடங்கள் என எல்லா இடங்களிலும் பைக் ஓட்டுவது, குழந்தைகள் மீது மோதுவது போல அதிவேகமாகச் செல்லும் காரை கண நேரத்தில் நிறுத்துவது என விஷாலை சூப்பர் ஹீரோ ஆக்குவதற்காக முயற்சி செய்துள்ளார் சுந்தர்.சி.

அந்த முயற்சி, சில இடங்களில் மட்டுமே ‘ஆஹா’ சொல்ல வைக்கிறது. படத்தில் ஏகப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கின்றன. அதற்காகப் பாடுபட்ட விஷாலின் கடின உழைப்பைப் பாராட்டியே ஆகவேண்டும்.

தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி என இரண்டு ஹீரோயின்களுக்கும் ஆளுக்குக் கொஞ்சம் காட்சிகள் எனப் பிரித்துக் கொடுத்துள்ளார் சுந்தர்.சி. வழக்கமான ஹீரோயினாக மட்டுமின்றி, சண்டைக் காட்சிகளில் அதிரடியாக நடித்துள்ளார் தமன்னா. ஆனால், ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் ஏன் முகத்தை அப்படிக் கடுமையாக வைத்திருக்கிறார் எனத் தெரியவில்லை. கொஞ்ச நேரமே வந்தாலும், ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. வில்லியாக நடித்துள்ள அக்கன்ஷா, அழகிய ராட்சசியாக மனதில் நிற்கிறார்.

படத்தில் பாராட்ட வேண்டிய விஷயம், சண்டைக் காட்சிகள். அன்பறிவ் வடிவமைப்பில் சண்டைக் காட்சிகள் பரபரவென்று இருக்கின்றன. அதிலும், இடைவேளையின்போது வரும் சண்டைக் காட்சி, அசத்தல். டட்லியின் ஒளிப்பதிவும், ஹிப் ஹாப் ஆதியின் இசையும் சண்டைக் காட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.

இஷ்டத்துக்கு எங்கெல்லாமோ செல்லும் திரைக்கதை, படத்தின் மிகப்பெரிய பலவீனம். பாதுகாப்பு மிகுந்த முதல்வர் இல்லத்துக்குள் ஒரு பெண் நுழைந்து கொலை செய்வது, பாகிஸ்தான் ராணுவத்தையே ஏமாற்றி தீவிரவாதியை விஷால் இந்தியா அழைத்து வருவது என லாஜிக் இல்லாத காட்சிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

சில விஷயங்களுக்கு ‘கட்’ சொல்ல வேண்டிய ‘ஆக்‌ஷன்’ இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x