Published : 15 Nov 2019 03:23 PM
Last Updated : 15 Nov 2019 03:23 PM

விஷாலின் 'சக்ரா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'சக்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'ஆக்‌ஷன்' திரைப்படம் இன்று (நவம்பர் 15) வெளியாகியுள்ளது. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷா, கபீர் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர்.

'ஆக்‌ஷன்' படத்தில் தனது பணிகளை முடித்தவுடன், புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார் விஷால். தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்தார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கியது.

இந்தப் படத்தின் கதைக்களத்துக்கு முதலில் 'இரும்புத்திரை 2' என்றுதான் தலைப்பிட்டார்கள். தற்போது அதனை மாற்றி 'சக்ரா' என்று பெயரிட்டுள்ளனர். 'ஆக்‌ஷன்' வெளியாகியுள்ள இந்த வேளையில் 'சக்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் கதைக்களம் தொடர்பாக இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன், "குடும்ப உணர்வுகளோடு, தொழில்நுட்பம் சார்ந்த ஆக்‌ஷன் த்ரில்லரை தேசபக்தியுடன் சொல்லியிருக்கும் படம்தான் சக்ரா'. தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் மூளைக்கு வேலை கொடுக்கும் படமாகவும் இருக்கும்.

ஒரு இயக்குநராக 'சக்ரா' படத்திற்குக் கதை எழுதும்போதே இந்த மிலிட்டரி அதிகாரி கதாபாத்திரத்திற்கு முதலில் தோன்றியது விஷால்தான். விஷால் எதற்காக மிலிட்டரி அதிகாரியாக இருக்கிறார் என்பதற்கு முக்கியக் காரணம் படத்தில் இருக்கும். கதையோடு சேர்ந்து ஒரு புள்ளியில் இணையும். அது படம் பார்க்கும் போதுதான் புரியும். மேலும், பெண் காவல்துறை அதிகாரியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார்.

பொதுவாக ஒரு இயக்குநருக்குக் கதை எழுதும் போது அப்படியே அதைக் காட்சியாக்குவது எளிதானது அல்ல. எனக்கும் அப்படித்தான். ஆனால், எனது ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் ஒவ்வொரு காட்சியும், நான் எழுதியதை அப்படியே காட்சிப்படுத்திய தருணங்கள் மறக்க முடியாதவை. சென்னையில் நடக்கும் க்ரைம் கதை என்பதால் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. 2020-ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார் எம்.எஸ்.ஆனந்தன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x