Published : 15 Nov 2019 12:00 PM
Last Updated : 15 Nov 2019 12:00 PM

புதுசு புதுசாய் பாதை போடும் பார்த்திபன்!  - இன்று பார்த்திபன் பிறந்தநாள்

வி.ராம்ஜி

குருவின் பெயரைக் காப்பாற்றும் வகையிலான சிஷ்யர்கள் இருப்பார்கள். குருவையே மிஞ்சுகிற சிஷ்யர்களும் இருப்பார்கள். இவர், ஒவ்வொரு குறும்பிலும் குசும்பிலும் நக்கலிலும் நையாண்டியிலும் குருவைக் கொண்டிருப்பவர். சமீபத்திய படைப்பின் மூலமாக, குருவையே மிஞ்சியவர். ‘என் சிஷ்யன்ங்கறதுல ரொம்பவே பெருமையா இருக்கு. இந்தப் படத்தின் மூலமா, குருவை மிஞ்சின சிஷ்யாயிட்டாரு’ என்று சமீபத்தில் இவரின் குருநாதர் மேடையிலேயே பேசிப் பாராட்டினார். அந்த குரு... பாக்யராஜ். சிஷ்யர்... ஆர்.பார்த்திபன்.


பார்த்திபன் என்றால் அற்புதமான சிந்தனையாளர். பார்த்திபன் என்றால் சிறந்த திறமைசாலி. பார்த்திபன் என்றால் நல்ல ரைட்டர். பார்த்திபன் என்றால் அட்டகாசமான டைரக்டர். பார்த்திபன் என்றால் பிரமாதமான படைப்பாளி. இவையெல்லாம் தமிழ் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டாடிச் சொல்லிக்கொண்டிருக்கும் ஏகப்பட்ட விஷயங்கள். ஆனால் இவையெல்லாம் அவ்வளவு சுலபமாகக் கிடைத்துவிடவில்லை. இந்த உயரத்தைத் தொடுவதற்கு முன்னே, அவர் பட்ட அவமானங்களும் காத்திருப்புகளும் அலைக்கழிப்புகளும் ஏராளம்.


முதல் படத்துக்கு, மூன்று பட வேலைகளைக் கொடுத்தது பார்த்திபனாகத்தான் இருக்கும். முதலில் ‘முதல் பார்வை’ என்று பெயர் வைத்தார். படம் நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும் பட வேலைகள் தொடங்கின. ஆனால் அதுவும் நின்றது. ‘இந்தப் படத்துல யாரோ நடிக்கறதை விட, நீயே நடியேன்’ என்று தயாரிப்பாளர் பச்சைக்கொடி காட்டியதுதான், நடிகர் பார்த்திபனுக்குக் கிடைத்த முதல் அங்கீகாரம். பாராட்டு.


பிறகு வந்த ‘புதியபாதை’யும் அதனால் அவருக்கும் சினிமாவுக்கும் கிடைத்த ‘புதியபாதை’யும் நாம் அறிந்ததுதான்.
‘கெடுத்தவனையே கல்யாணம் பண்ணிக்கறதுல என்னப்பா இருக்கு புதுமை’ என்று கேட்கலாம். ஆனால், அதை புதுமையாய்த் தந்ததுதான் பார்த்திப சாகசம்.


பார்த்திபனின் படங்கள் தோல்வியைத் தழுவியிருக்கலாம். ஆனால் அப்படியான தோல்விப்படங்களிலும் கூட, தன் முத்திரைகளைப் பதிக்கத் தவறியதே இல்லை. இரண்டாவது படமான ‘பொண்டாட்டி தேவை’யில், சின்னச்சின்னதாய் ஜாலம் காட்டியிருப்பார். காட்சிகளிலும் வசனங்களிலும் கலக்கியெடுத்திருப்பார். ஆக, அந்தவகையில் பார்த்திபனுக்குத் தோல்விப் படங்கள் இருக்கலாம். தோல்வி என்பதே இல்லை.
அவ்வளவு ஏன்... ‘உள்ளே வெளியே’ என்று கெட்ட ஆட்டம் போட்டதில் கூட, பார்த்திபக் குறும்புகளை தெறிக்கவிட்டிருப்பார். அம்மா கேரக்டர் சொல்லும்போது, கதறவிட்டிருப்பார். இது அவரின் எல்லாப் படங்களுக்குமே பொருந்தும்.


பொதுவாக படம் போட்ட பத்தாவது இருபதாவது நிமிடத்தில் இருந்துதான் இயக்குநர் தன் திறமைகளையெல்லாம் காட்டி அசத்துவார். பின்னுவார். பிரமிக்கச் செய்வார். ஆனால் படத்துக்குப் பூஜை போட்ட நாளிலிருந்தே தன் அலப்பறையை ஆரம்பித்துவிடுவார். அழைப்பிதழே பார்த்திப ஸ்டைலைக் காட்டி ரசிக்கவைத்துவிடும். பேசவைத்துவிடும். ‘புதிய பாதை’ தொடங்கி இந்த நெடும்பயணம் முழுக்கவே இப்படியான சுவாரஸ்யங்களை, வித்தியாசங்களைச் செய்வதுதான் பார்த்திபனை இன்னும் இன்னும் புதுமையாக்கிக்கொண்டே இருக்கிறது.


திடீரென்று புத்தகம் எழுதி வெளியிடுவார். அதற்குக் ‘கிறுக்கல்கள்’ எனப் பெயர் வைப்பார். சட்டென்று புதுப்படத்தை அறிவிப்பார். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்று பெயர் வைத்து விட்டு, கீழே... ‘கதையே இல்லாத படம்’ என்று அறிவிப்பார். இப்படி, ஜாலியும் கேலியுமாக, ரசனையும் ரகளையுமாக ரவுசு பண்ணிக்கொண்டே இருப்பார் பார்த்திபன்.


பார்த்திபனைத் தெரியத் தொடங்கிய காலம் முதல் இப்போது வந்த ‘ஒத்தசெருப்பு’ வரைக்கும் இவர் வைத்த ஒவ்வொரு அடியும்... ஒவ்வொரு புதுமையாக அலங்கரித்தபடி இருந்தது. இருக்கிறது.


இரண்டு மணி நேர சினிமாவில், படத்தில் வருகிற கேரக்டர் ஒரு பத்து நிமிடம் பேசிக்கொண்டேஇருந்தால் ‘அறுக்குறான்யா’ என்போம். ஆனால் படம் முழுக்க ஒருத்தர், ஒரேயொருத்தர் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டே இருந்தால்....? அதை முழுக்க முழுக்க ரசிக்க வைத்தது... பார்த்திபனுக்கே உண்டான கைவந்தக் கலை. இதை வேறு யார் செய்திருந்தாலும் இவ்வளவு ஈர்த்திருக்குமா? தெரியவில்லை.


‘ஒத்த செருப்பு’... ‘ஒத்த கேரக்டர்’... ‘ஒரே ஆக்டர்’... ஆனால் படத்தின் எல்லாக் கதாபாத்திரங்களையும் காட்சிப்படுத்தாமல், நம் கண்ணுக்கு எதிரே நிற்கவைத்திருப்பதுதான் பார்த்திபன் கனவு; அவரின் அட்டகாச வெற்றி.


ராஜாவின் இசையிலும் மயங்கி, ரஹ்மானின் இசையிலும் லயித்து, வேறொரு இசையமைப்பாளருடன் படம் பண்ணுகிற பரந்த மனமும் இயல்பான குணமும் பார்த்திபனுக்கே உண்டான சொத்து.


பார்த்திபன் மாதிரியானவர்... ‘மாதிரி’ ஆனவர். இன்றைய இளைய இயக்குநர்களுக்கு அவர் ஸ்டைலில் எப்போதும் பாடம் நடத்திக் கொண்டே இருப்பவர். ‘அப்டேட்’டில் இருந்தபடி, புதுசுபுதுசாய் ‘புதியபாதை’ போட்டுக்கொண்டே இருப்பவர்.


அவர் இன்னும் இன்னும் படைப்புகளை வழங்க வேண்டும். ‘ஒத்தசெருப்பு’ கொண்டு உலகை திரும்பிப் பார்க்கவேண்டும் . மனசுக்கு வயசே ஆகாத பார்த்திபனுக்கு இன்று (15.11.19) பிறந்தநாள்.


வாழ்த்துகள் பார்த்திபன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x