Published : 14 Nov 2019 07:51 PM
Last Updated : 14 Nov 2019 07:51 PM

சிக்கலின்றி வெளியாகுமா 'சங்கத்தமிழன்'?

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சங்கத்தமிழன்' நாளை (நவம்பர் 15) சிக்கலின்றி வெளிக் கொண்டுவரப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தமிழன்'. விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர். தீபாவளி வெளியீடாக இருந்த இந்தப் படம், அதிலிருந்து பின்வாங்கி நவம்பர் 15-ம் தேதி வெளியீடு என அறிவித்தது.

இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ளது லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம். சென்னை, கோவை, திருநெல்வேலி என தனித்தனியாக விநியோக உரிமைகளை விற்று, படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளையும் துரிதப்படுத்தியது.

இந்நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு பல திரையரங்குகளில் இன்னும் தொடங்கப்படவே இல்லை. சென்னையில் ஐட்ரீம்ஸ் மற்றும் ஆல்பட் ஆகிய திரையரங்குகளில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதர திரையரங்குகளில் படம் வெளியாவது உறுதியானால் மட்டுமே தொடங்கப்படும் என தெரிகிறது.

'வீரம்' படத்தின் போது வரிச்சலுகை பிரச்சினைத் தொடர்பாக 7ஜி சிவா என்பவர் புகார் அளித்தார். இது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது வரை நடந்து கொண்டிருக்கிறது. மேலும், சம்பளம் உள்ளிட்ட சில பிரச்சினைகளும் ஒன்றிணைந்து சுமார் 5 கோடி ரூபாய் வரை இருந்தால் மட்டுமே படம் வெளியாகும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் கடந்த 2 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு இரவுக்குள் எட்டப்பட்டு, நாளை (நவம்பர் 15) வெளியாகும் என விநியோகஸ்தர்கள் தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது. ஆனால், இன்னும் பேச்சுவார்த்தையில் இன்னும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை என்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளவர்கள் தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x