Published : 14 Nov 2019 04:58 PM
Last Updated : 14 Nov 2019 04:58 PM

'ஹீரோ' படத்துக்கான இடைக்காலத் தடை விவகாரம்: கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தரப்பு விளக்கம்

'ஹீரோ' படத்துக்கான இடைக்காலத் தடை விவகாரம் தொடர்பாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்து வருகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கிய 10 கோடி கடன் தொடர்பாக டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரத்தில் 'ஹீரோ' படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மையம் உத்தரவிட்டது. இதனால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் இருக்கும் எனச் செய்திகள் வெளியாகின.

சிவகார்த்திகேயன் படம் என்பதால் பலரும் இந்தச் செய்தியைப் பகிரத் தொடங்கினார். இது தொடர்பாக 'ஹீரோ' படத்தைத் தயாரித்து வரும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பதிவில், "டிவி, ரேடியோ, செய்திகள் என எங்கே திரும்பினாலும் நம்ம செய்தி தான். இந்த இலவச விளம்பரத்துக்கு நன்றி. நமக்கு ரசிகர்கள் எல்லா பக்கமும் இருக்காங்க போல. ரசிகர்களுக்கு - எவ்வித கவலையும் வேண்டாம். படம் கண்டிப்பாக டிசம்பர் 20-ம் தேதி வருது" என்று தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கார்த்திகேய பாலன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இதனால் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் ’ஹீரோ’ தமிழ் திரைப்படம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸால் தயாரிக்கப்பட்டுள்ளது. வேறெந்த தயாரிப்பு நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை.

சமூக ஊடகங்களில் சில பொய்யான தகவல்களைப் பார்த்தோம். அதில் ’ஹீரோ’ என்று பெயரிடப்பட்ட தமிழ்ப் படத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது என்ற விஷயம் முற்றிலும் பொய்யானது. அந்தத் தகவல்களில் படம் 24 ஏ.எம். புரொடக்‌ஷன்ஸால் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறே. இத்தனைக்கும் ’ஹீரோ’ என்ற படத்தில் தாங்கள் சம்பந்தப்படவே இல்லை என 24 ஏ.எம். புரொடக்‌ஷன்ஸ் முன்னதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

இந்த நபர்கள், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், ’ஹீரோ’ படத்தின் பெயர், டிரேட் மார்க், டொமைன் பெயர் மற்றும் லோகோவை அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றனர். எங்கள் திரைப்படம் ’ஹீரோ’ தொடர்பாக, 24 ஏ.எம். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமோ, டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமோ எங்களுக்கு எந்த விதமான தொடர்பும், ஒப்பந்தமும் இல்லை என்பதைப் பொதுமக்களுக்குக் கூற விரும்புகிறோம்.

இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். இப்படித் தூண்டுபவர்களை ஊக்குவிக்க வேண்டாம் என கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கடுமையாக வலியுறுத்துகிறோம். இப்படியான மோசடி நிகழ்வு அல்லது எங்கள் திரைப்படம் ’ஹீரோ’ தொடர்பாக எந்தத் தவறான தகவல் வந்தாலும், அப்படியான ஏமாற்று வேலைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்.

அப்படித் தவறு செய்பவர்களுக்கு எதிராகவும், எங்கள் ’ஹீரோ’ திரைப்படத்தின் பெயரை முறையான அனுமதியின்றி பயன்படுத்தும் டி.எஸ்.ஆர் ஃபிலிமிஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையை தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் "’ஹீரோ’ படத்துக்காக நாங்கள் செய்துள்ள அனைத்து கடின உழைப்பும், ஒரு சமூகப் பொறுப்புள்ள நல்ல பொழுதுபோக்குப் படத்தை உங்களுக்குத் தர வேண்டும் என்பதால்தான். இரவு பகலாக அதற்காக உழைத்து வருகிறோம். எங்களையும், ரசிகர்களையும் தவிர இந்தப் படத்துக்கு யார் உரிமை கொண்டாடினாலும் அது பொய்யே. திட்டமிட்டபடி ’ஹீரோ’ டிசம்பர் 20 முதல் திரையில்" என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x