Published : 14 Nov 2019 01:20 PM
Last Updated : 14 Nov 2019 01:20 PM

'பொன்னியின் செல்வன்' அப்டேட்: தாய்லாந்தில் மணிரத்னம்

'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்தில் இடங்களைத் தேர்வு செய்து வருகிறார் இயக்குநர் மணிரத்னம்

'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கவுள்ளது.

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, அமலாபால் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதில் நடிக்கவுள்ளவர்கள் அனைவரையும் பெரிதாக முடி வளர்க்கச் சொல்லியுள்ளார் மணிரத்னம். மேலும், பிரதான கதாபாத்திரங்களுக்குக் குதிரை பயிற்சி, வாள் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

நீண்ட நாட்களாக முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக தாய்லாந்தில் இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். உதவி இயக்குநர்கள் ஏற்கெனவே இடங்களைத் தேர்வு செய்துவிட்டாலும், அதனைப் பார்த்து இறுதி செய்வதற்காகவே மணிரத்னம் சென்றுள்ளதாக படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தாய்லாந்தில் சண்டைக் காட்சிகளின் வடிவமைப்பாளர் ஷாம் கவுசலுடன் மணிரத்னம் படகில் பயணிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தி திரையுலகில் உருவான பல முன்னணி வரலாற்றுப் படங்களுக்குச் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துப் பிரபலமானவர் ஷாம் கவுசல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் தாய்லாந்தில் படப்பிடிப்பு என்று படக்குழு தரப்பில் கேட்டதற்கு, அங்குள்ள கோயில்கள் பல சோழ நாட்டு நாகரிகத்தின் பின்னணியிலே இருக்கும். அது படத்தின் கதைக்களத்துக்கு நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்று குறிப்பிட்டனர். மேலும், இந்தோனேசியாவிலும் சில காட்சிகளைப் படமாக்கவுள்ளனர்.

'பொன்னியின் செல்வன்' படத்தின் கலை இயக்குநராக தோட்டா தரணி, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியராக வைரமுத்து ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x