Published : 14 Nov 2019 01:04 PM
Last Updated : 14 Nov 2019 01:04 PM

‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவுக்கு 45 வயது! 

வி.ராம்ஜி


படத்தின் பெயரைச் சொல்லும்போதே, அந்தப் படத்தின் மிக முக்கியமான, ஆணிவேராகத் திகழும் கேரக்டரின் பெயரையும் சொன்னால்... அந்தப் படம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த படம் என்பதை பளிச்சென்று சொல்லிவிடலாம். அப்படி, படத்தையும் கேரக்டர் பெயரையும் நாம் சொல்கிற படங்கள் ஏராளம். அந்த வகையில்... கவிதா... நம்மால் மறக்கவே முடியாதவள். காரணம்... நம்மூர்ப் பெண். நம் ஏரியாவில் இருப்பவள். நம் தெருவில் நாம் பார்த்த பெண். நம் வீடுகளில் இன்றைக்கும் உலவிக் கொண்டிருப்பவள் அவள்!


எம்.எஸ்.பெருமாளின் கதையை மூலக்கதையாக வைத்துக்கொண்டு, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து, அவர் ஆடிய ஆட்டம்... ருத்ரதாண்டவம். இதன் பிறகு, பெண் சுதந்திரம், முன்னேற்றம், பெண் வளர்ச்சி, சிந்தனைப் புரட்சி என்றெல்லாம் பல படங்கள் வந்திருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் ஆரம்பப்புள்ளிதான் ‘அவள் ஒரு தொடர்கதை’.


ஓடிப்போன கணவனை நினைத்துக் கொண்டிருக்கிற அம்மாக்காரி, அக்காவுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டு விதவையாக நிற்கும் தங்கை, இன்னொரு தங்கை, பொறுப்பில்லாத குடிகார அண்ணன். அவனை நம்பி காலக்குப்பையைக் கொட்டிக்கொண்டிருக்கும் அண்ணி, அவர்களின் குழந்தைகள், பார்வையற்ற தம்பி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடம். அந்த மொத்த வடத்தையும் இழுத்துப் பிடித்து, பிடித்து இழுத்து, குடும்பத்தேரோட்டியாக, சாரதியாக கவிதா.


தலையில் இவர்களையும் மனதில் திலக் எனும் காதலனையும் சுமந்துகொண்டிருக்கிறாள். எப்போதும் கறார்; எதற்கெடுத்தாலும் கோபம். சுள்ளென்று, வெடுக்கென்று பேசும் கேரக்டர். ஒருகட்டத்தில், காதலன் திலக் கல்யாணத்துக்கு அவசரப்படுத்துகிறான். ஓடிப்போன அப்பா பொருள் தராமல், ஆண்டிக்கோலத்தில் வந்து அருளை மட்டுமே தருகிறார்.


அலுவலக மேலதிகாரி இவளின் செயல்களைக் கண்டு பிரமித்து மரியாதை தருகிறார். உடன் வேலை செய்பவனோ வயது வந்தும் கூட திருமணமாகாததால் இவளை அடையத் துடிக்கிறான். ஒருகட்டத்தில், தன் விதவைத் தங்கைக்கு தன் காதலனே வாழ்வளிக்க முனைகிறான். அதை ஏற்று, திருமணம் நடத்திவைக்கிறாள்.


வயதாகிக் கொண்டே இருந்தாலும் சபலத்துக்கு ஆளாகாத கவிதாவுக்கு இளம் வயதில் கட்டுக்குள் அடங்காமல் திரியும் தோழி. அந்தத் தோழிக்கு இளம் விதவை. அவர்களுக்குள் ஏற்படும் உறவுச் சிக்கல். வாய்ப்பு வராதா என்று ஏங்கித் தவிக்கும் விகடகவிக் கலைஞன். வாய்ப்பு வந்தாலும் சோம்பேறியாய் இருக்கும் குடிகார அண்ணன். தன் சுகமே முக்கியம் என்று நினைக்கிற மோசமானவன் என நறுக்குத் தெறித்தாற் போல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் செதுக்கித் தந்திருப்பார் இயக்குநர்.


அதேபோல், நல்ல மனம் கொண்ட மேலதிகாரியைத் திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளும் வேளையில், அண்ணனும் திருந்திவிட்ட அற்புதத் தருணத்தில்... அங்கே நேருகிற துக்கத்தில் இருந்து மீண்டு வருகிறாள். மீண்டும் வருகிறாள்... கவிதா ஒரு தொடர்கதையாக!


சுஜாதா, ஜெய்கணேஷ், ஜெயலட்சுமி, சோமன், வினோதினி, புஷ்பா ஏன ஏகப்பட்ட புதுமுகங்கள். கமல், விஜயகுமார், ஸ்ரீப்ரியா என வளர்ந்துகொண்டிருப்பவர்கள். இவர்களை வைத்துக் கொண்டுதான், மிக அழுத்தமாக செல்லுலாய்டில் கையெழுத்திட்டார் பாலசந்தர்... ‘அவள் ஒரு தொடர்கதை’யாக!


வசனங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய கிரேஸ் உண்டு. ரசிகர்கள் பிடித்திருந்தால் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். பக்கம்பக்கமாக வந்த வசனங்களில் இருந்து நான்கைந்து வரிகளே வசனங்களாக வரத் தொடங்கி, ஹிட்டடித்திருந்த எழுபதுகளில் மத்தியில்... இங்கே, இந்தப் படத்தில் வசனங்களுக்கு அப்படியொரு அப்ளாஸை அள்ளியள்ளிக் கொடுத்தார்கள் ரசிகர்கள்.


இறந்துவிட்ட கணவனின் பிறந்தநாளன்று அன்னதானம் செய்வது வழக்கம் என்று தங்கையின் மாமனார் வந்திருப்பார். ‘மாஜி மாமனார்’ என்பார் சுஜாதா. ‘ஒருநூறு ரூபா இருந்தாக் கொடு... கடனாத்தான்’ என்பார் ஸ்ரீப்ரியா. திட்டிக்கொண்டே தருவார். ‘இவ மேல யாருக்கு இரக்கம் இருக்கோ இல்லியோ...இந்த மாசத்துல ஏகப்பட்ட முகூர்த்தம்’ என்பார் அம்மா. ‘ஆமாக்கா. இந்த விதவைக்கு இந்த மாசம் நிறைய முகூர்த்தங்கள்’ என்பார் ஸ்ரீப்ரியா.


‘பஸ்ல போறதுக்கு லிஃப்ட் கேட்டு கார்ல போயிடலாம்’ என்பார் படாஃபட். காரை மறித்து லிஃப்ட் கேட்பார். அவன் வழிவான். ‘வாடி கார்ல போகலாம்’ என்றதும் ‘யாரது’ என்று கேட்பார் சுஜாதா. ‘யாருக்குத் தெரியும்.’என்பார். ‘உன்னைப் பாத்து சிரிக்கிறாரே’ என்று கேட்பார் சுஜாதா. ’பொண்ணுன்னா பொணம் கூட சிரிக்கும்’ என்பார் படாபட். ’பொணம் கூட பிரயாணம் பண்ண நான் தயாரா இல்ல’என்பார் சுஜாதா.
******************************
’என்ன... பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்ளோ கர்வமா இருக்கா’
‘கல்யாணத்துக்கு முன்னாடி கர்வமா இருக்கலாம். கர்ப்பமாத்தான் இருக்கக்கூடாது’’
*****************
விதவைத் தங்கையைக் காட்டி, ‘நீயே உன் கையால குங்குமத்தை வைச்சுவிடும்மா’ என்பார் சுஜாதா.
‘என்னால முடியாது. ஊரு ஒலகத்துல என்ன சொல்லுவாங்க தெரியுமா?’
‘ஊர்ல யாரும் சொல்லலேன்னா, உம் பொண்ண எதுவேணா செய்ய அனுப்பிச்சிருவியா?’
****************************************
’’பெட்டிஷன் கொடுக்கணும். குடும்பத்தலைவர் பேர் சொல்லுங்க’
‘மூர்த்தி’
‘வெறும் மூர்த்தியா?’
‘வெட்கம் கெட்ட மூர்த்தி’
*********************************************
’’ஒரு அம்மாவுக்கும் பொண்ணுக்கும் நடுவுல எந்தச் சண்டை வேணாலும் வரலாம். சக்களத்தி சண்டை மட்டும் வரக்கூடாது.
********************************************
குடிகார அண்ணனை வீட்டை விட்டு துரத்தியிருப்பார் சுஜாதா. பிறகு மன்னித்து ஏற்றுக் கொள்வார். அன்றிரவு, குழந்தை அழும் சத்தம் நிற்கவே நிற்காது. கத்திக்கொண்டே இருக்கும். உள் அறையில் இருந்து கணவனும் மனைவியுமாக வெளியே வருவார்கள்.
அப்போது கவிதா சொல்லுவாள்... ’’பணப்பசியைத் தீர்க்க ஒரு தங்கச்சி, வயித்துப் பசியைத் தீர்க்க ஒரு தாய், உடற்பசியைத் தீர்க்க ஒரு மனைவி... ச்ச்சீ மானங்கெட்ட ஜென்மம்’ என்று சொல்லிவிட்டு, தூங்கச் செல்வார்.


நள்ளிரவு. தூங்கிக்கொண்டிருக்கும் கவிதாவை எழுப்புவாள் அண்ணி. ’அவர்கிட்ட எவ்வளவோ கெட்ட குணங்கள் இருக்கலாம். ஆனா பெண்கள் விஷயத்துல மட்டும் அவர் தப்பு பண்றதில்ல. அந்த நல்லகுணமும் போயிடக்கூடாதில்லையா. அதுக்காகத்தான் என்னை ஒரு எந்திரமா மாத்திக்கிட்டிருக்கேன். உடற்பசின்னு சொன்னியே... அது என்னிக்குமே எனக்கு இருந்ததில்லம்மா’ என்று அண்ணியின் மனநிலையை வெளிச்சமிட்டுக் காட்டியிருப்பார் பாலசந்தர்.


படத்தில் துணை கேரக்டர் என்றெல்லாம் நினைக்காமல், அந்தப் பெண் கதாபாத்திர மன உணர்வைத் துல்லியமாக நமக்குக் கடத்தியிருப்பார் இயக்குநர். அதுதான் பாலசந்தர் டச்.


இப்படி படம் நெடுக, பெண்களின் பார்வையில் படமாக்கியிருப்பதுதான் ‘அவள் ஒரு தொடர்கதை’யின் மிகப்பெரிய சக்ஸஸ். இந்தப் படம் வெளியாகி ஐந்தாறு வருடங்கள் கழித்து வெளியான ‘அவள் அப்படித்தான்’ மஞ்சு... ‘அவள் ஒரு தொடர்கதை’ கவிதாவின் தங்கச்சி.
கேமிரா கோணங்கள், கருப்பு வெள்ளையில் மாயாஜாலம், புதுமுக நடிகர்களை வைத்துக் கொண்டு, அவர்களிடம் இருந்து கொண்டு வந்த தேர்ந்த நடிப்பு. படாபட் ஜெயலட்சுமி, ஜெய்கணேஷ், கமலஹாசன், ஸ்ரீப்ரியா என எல்லோரின் முத்திரை நடிப்பு, எம்.எஸ்.வி.யின் இசையில் ‘தெய்வம் தந்த வீடு’, ‘கண்ணிலே என்ன உண்டு கைகளாஅறியும்’, ‘அடி என்னடி உலகம்’, ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ என எல்லாப் பாடல்களும் இன்றைக்கும் மறக்கமுடியாதவை. படத்தை இப்போது ஒருமுறை பாருங்கள். ஏதோ சுஜாதா, ஏகப்பட்ட படங்கள் பண்ணிவிட்டு, இந்தப் படம் நடித்தது போல் இருக்கும். பின்னிப்பெடலெடுத்திருப்பார்.


‘அவள் ஒரு தொடர்கதை’ என்று டைட்டில் வைத்துவிட்டு, ஒவ்வொரு விதமாக கதை நகரும்போதும், அத்தியாயம் 2, அத்தியாயம் 3 என்று போட்டுக்கொண்டே வருவார் பாலசந்தர். அதை காலண்டர் தேதி, லிப்ட் எண் என்றெல்லாம் கொண்டு ஜாலம் காட்டுவார். புதுமையாகவும் புரட்சியாகவும் தந்த ‘அவள் ஒரு தொடர்கதை’ 1974-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி வெளியானது. கிட்டத்தட்ட படம் வெளியாகி, 45 வருடங்களாகின்றன.


இன்னும் எத்தனை வருடங்களானாலும் கவிதாவையும் கவிதாவை நமக்குத் தந்த கே.பாலசந்தரையும் மறக்கவே முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x