Published : 11 Nov 2019 09:43 AM
Last Updated : 11 Nov 2019 09:43 AM

'பிகில்' படத்துக்காக விமர்சகர்களைச் சாடிய ஆனந்த்ராஜ்

'பிகில்' படத்தின் விமர்சனங்களில் இருந்த தனி மனிதத் தாக்குதல்களைக் கண்டித்துள்ளார் நடிகர் ஆனந்த்ராஜ்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'பிகில்'. ஏஜிஸ் நிறுவனம் தயாரித்த அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். நயன்தாரா, டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராஃப், வர்ஷா பொல்லாமா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர்.

அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தில் முதலீடு செய்த விநியோகஸ்தர்கள் அனைவருமே இன்னும் சில நாட்களில் லாபத்தை ஈட்டத் தொடங்கிவிடுவார்கள் என்று விநியோகஸ்தர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய்யின் நண்பராக நடித்திருந்தவர் ஆனந்த்ராஜ். இவர் நேற்று (நவம்பர் 10) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது பத்திரிகையாளர்களையும் சந்தித்தார். அப்போது, 'பிகில்' படத்தின் வெற்றி தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு ஆனந்த்ராஜ் கூறியிருப்பதாவது:

''வியாபாரத்துக்காக ஒரு படம் எடுக்கிறோம். பிடித்தவர்களுக்காக ஒரு விமர்சனம், பிடிக்காதவர்களுக்காக ஒரு விமர்சனம் என வருகிறது. இன்றைய சூழலில் 'பிகில்' ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம். வசூலில் பெரிய சாதனை செய்திருக்கிறது. எனது ஒரு தாழ்மையான வேண்டுகோள். என்ன வேண்டுமானாலும் விமர்சனம் பண்ணுங்கள். ஆனால், தனி மனித விமர்சனம் வேண்டாம். என்னைப் பொறுத்தவரை விஜய் என்ற ஒரே மனிதனுக்காக மட்டுமே படம் இந்த அளவுக்கு வெற்றியடைந்துள்ளது. விஜய் என்ற மந்திரச் சொல்லுக்காகவே இந்தப் படத்தை ஒரு முறை பார்த்தாக வேண்டும் என்றுதான் மக்கள் பார்க்கிறார்கள். அப்படியொரு மந்திரக் கலைஞர் விஜய்.

அப்படிப்பட்ட படத்தில் ஒருவர் குரல் கரகரவென்று இருக்கிறது. ஒரு ஹால்ஸ் வாங்கிக் கொடுக்க முடியவில்லையா என்று விமர்சனத்தில் சொல்கிறார்கள். 150 கோடி ரூபாய் போட்டு படம் எடுப்பவர்களைப் பார்த்து, ஒரு ஹால்ஸ் வாங்கிக் கொடுக்க முடியாதா என்று கூறுவது தனி மனித விமர்சனம் அல்லவா? இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுமாதிரி இனிமேல் விமர்சனம் பண்ணாதீர்கள் என்று தாழ்மையாகவும் கேட்டுக் கொள்கிறேன். நடிப்புத் தொழிலை விமர்சனம் செய்வதற்கு யாருக்கும் உரிமையில்லை''.

இவ்வாறு ஆனந்த்ராஜ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x