Published : 09 Nov 2019 01:31 PM
Last Updated : 09 Nov 2019 01:31 PM

நடிகர் சங்க விவகாரம்: எதிரணியை கடுமையாகச் சாடிய விஷால்

நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமனம் செய்திருப்பது தொடர்பாக எதிரணியைக் கடுமையாகச் சாடியுள்ளார் விஷால்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகள் சமீபமாக நடைபெறவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது தமிழக பதிவுத்துறை. இதனால், முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக நாசர், கார்த்தி உள்ளிட்ட முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, ‘சிறப்பு அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிப்போம். ஆனால், நீதிமன்றத்தில் முறையிடுவோம்’ என்று குறிப்பிட்டனர்.

'துப்பறிவாளன் 2' படப்பிடிப்புக்காக லண்டனில் இருந்ததால், நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார் விஷால். நேற்று (நவம்பர் 8) 'ஆக்‌ஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக சென்னை வந்திருந்தார் விஷால். அந்தச் சந்திப்பு முடிவடைந்தவுடன், விஷாலிடம் நடிகர் சங்க விவகாரம் தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விஷால் அளித்த பதில்கள் பின்வருமாறு:

நடிகர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து இருக்கிறார்களே...

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு இடையே அரசாங்கத்தில் இருந்து சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வரும்வரை சிறப்பு அதிகாரி கவனிப்பார் எனச் சொல்லியிருக்கின்றனர். நாங்கள் எந்த வகையிலும் தப்பு பண்ணவில்லை, யாருக்கும் கெடுதல் பண்ணவில்லை. இந்த வழக்குக்காக வீண் செலவு செய்யவில்லை. எங்களிடம் அவ்வளவு பணமுமில்லை. நாங்கள் செய்தது கட்டிடம் கட்டியது மட்டுமே. அதை, யார் வேண்டுமானாலும் போய்ப் பார்க்கலாம். நடிகர் சங்கத்தில் யார் வேண்டுமானாலும் கட்டிடம், கணக்கு வழக்குகளைப் பார்க்கலாம். ஏனென்றால், இணையத்தில் வங்கிக் கணக்குகளை வெளியிட்ட ஒரே சங்கம், நடிகர் சங்கம்தான்.

ஒரு நீதிபதியை தீர்ப்புக்காக நிர்பந்தித்து 10 லட்ச ரூபாய் அபராதம் கட்டினார் ஒரு நபர். அவருக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியாது. கடந்த 3 ஆண்டுகள் எப்படி உறுப்பினர்களைப் பார்த்துக் கொண்டோமோ, அப்படித்தான் இனியும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தேர்தலை நடத்தினோம். விதிமுறைகளின்படியே தேர்தல் நடந்தது. எந்தவித விதிமுறையும் மீறப்படவில்லை. எப்போது வாக்குகளை எண்ணலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பு வந்து, வாக்குகள் எண்ணப்படும். அப்போது உறுப்பினர்கள் என்ன நினைத்துள்ளனர் என்பது தெரிந்துவிடும்.

சிறப்பு அதிகாரி நியமனம், ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. அவர்களுக்கென்று விதிமுறைகள் இருக்கலாம். கடவுள் மாதிரி நீதிமன்றத்தை நம்புகிறேன். உண்மை வெல்லும்.

தனிப்பட்ட இந்த மாதிரியான எதிர்ப்புகள், விஷாலை முடக்குவதற்கான முயற்சியா?

முதலில் ஆர்.கே. நகர் தேர்தலில் நின்றேன். தயாரிப்பாளர் சங்கத் தேர்தல், பின்பு மீண்டும் நடிகர் சங்கத் தேர்தலில் நின்றேன். இப்போது மறுபடியும் ஒரு தேர்தலில் நின்று, அங்கும் இப்படி நடந்தால் பதில் சொல்கிறேன். நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை, நாசர், கார்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என அனைவரையும் வைத்துக்கொண்டு ஊழல் பண்ண வேண்டும் என்ற அவசியமே இல்லை. நடிகர் சங்க நிலத்தை மீட்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று எங்களுக்குத் தெரியும். கடந்த 3 மாதங்களாக நிதியுதவி நின்று போனதற்கு என்ன காரணம்? வாக்குப் பெட்டிகளைத் திறந்து வாக்குகளை எண்ணிவிட்டால் தோற்றுப்போய் விடுவோம் என்று பயமா? நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பை வைத்துத்தான் தேர்தல் நடத்தினோம். அதில் என்ன பிரச்சினை?. நீதிமன்றத்தை நம்பி நிற்போம். செய்த நல்லதுக்கும் உண்மைக்கும் நேர்மைக்கும் வெற்றி கிடைக்கும்.

இதனால் விஷாலின் அரசியல் பயணம் தடைபடுமா?

என்றைக்கு உங்கள் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து மற்றொருவருக்கு உதவி செய்கிறீர்களோ... அன்றே நீங்கள் அரசியல்வாதிதான். நல்லது செய்வதுதான் அரசியல். இதெல்லாம் தடையாக நான் பார்ப்பதில்லை. ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால், 3 மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்காமல் இருக்கின்றனர். கட்டிடம் இந்நேரம் முடிந்திருக்கும். இப்போதும் சொல்கிறேன். யாரிடமும் பணம் வாங்காமல் நாங்களே கட்டிடத்தை முடித்துவிடுவோம் என்று ஐசரி கணேஷ் சொல்லியிருக்கிறார். தயவுசெய்து கட்டி முடியுங்கள் என்று மறுபடியும் சொல்கிறேன். நீங்கள் பதவியிலிருந்துதான் முடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எங்களிடம் பணமிருந்தால் கண்டிப்பாகச் செய்திருப்போம். சொன்ன வார்த்தையில் நின்று கட்டிடம் கட்டினால் சூப்பர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x