Published : 08 Nov 2019 07:54 PM
Last Updated : 08 Nov 2019 07:54 PM

ரஜினிகாந்த் பாஜகவின் முன் முகமாவும், பின் முகமாகவும் இருக்கக்கூடாது: இயக்குநர் அமீர் ஆசை

ரஜினிகாந்த் பாஜகவின் முன் முகமாவும், பின் முகமாகவும் இருக்கக்கூடாது என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

இன்று (நவம்பர் 8) காலை சென்னையில் கமல் அலுவலகத்தில் நடைபெற்ற, மறைந்த இயக்குநர் பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஜினி. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவுடன், தன் வீட்டு வாசலிலிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி.

அப்போது "திருவள்ளுவர் மீதும், தன் மீதும் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது. அவரும் சிக்கமாட்டார். நானும் சிக்கமாட்டேன். தமிழகத்தில் ஆளுமைக்கான வெற்றிடம் இருக்கிறது” என்று பேசினார் ரஜினி. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

ரஜினியின் இந்தக் கருத்துகளுக்கு இயக்குநர் அமீர் கூறியிருப்பதாவது:

முதலில் ரஜினி சாருக்கு வாழ்த்துகளையும், தமிழக மக்கள் சார்பாக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்ன காரணத்திற்காக என்றால், தமிழகத்தில் எந்த மாதிரியான அரசியலை பாஜகவினர் முன்னெடுத்து வைக்கிறார்கள் . மக்கள் மத்தியில் என்ன திணிக்கிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக முதல் முறையாக ரஜினிகாந்த் வாயால் உதிர்த்ததிற்காக என் மனமார்ந்த நன்றி.

இதைத் தான் நாம் நீண்ட நெடிய காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ரஜினிகாந்த் என்ற மனிதரை நேசிக்கும் மக்களாகவே தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அதனால் தான் அவர் நீண்ட காலமாகவே சூப்பர் ஸ்டாராக உட்கார வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள். இன்றைக்கும் அவருடைய படங்கள் முதல் நாள் வசூலைக் குவிக்கிறது என்றால், அவரை அந்த இடத்தில் வைத்துத் தான் பார்த்து வருகிறார்கள்.

ரஜினியை ஒரு மதச்சார்பற்ற நடிகராகப் பார்ப்பது தான் தமிழக மக்களின் விருப்பம். மதச்சார்பற்ற மனிதராகப் பார்ப்பது தான் என்னைப் போன்றவர்களுக்கும் விருப்பம். ஆனால், கிட்டதட்ட அவரை தங்களுடைய கட்சியின் அடிப்படை உறுப்பினர் போல் இழுத்துக் கொண்டே இருக்கும் போது, அவரும் பாஜகவுக்கு ஆதரவாகக் கருத்துக்கள் வெளியிடும் போது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அதை இல்லை என்று மறுக்க முடியாது.

புத்தக வெளியீட்டு விழாவில் பீஷ்மர் - கிருஷ்ணர் என்று பிரதமர் மோடி - அமித்ஷாவைப் பேசும் போது நடுநிலையான மக்களுக்கு ஒரு அச்சம் ஏற்பட்டது. ரஜினிகாந்த்தின் தனிப்பட்ட அரசியலை நான் எதிர்ப்பதில்லை. ஆனால், அவர் பாஜகவின் முன்முகமாவும், பின் முகமாகவும் இருக்கக்கூடாது என்பது என் ஆசை.

பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இருந்து கொண்டு தமிழிசை அவர்கள் அரசியல் செய்யும் போது அவரை நாங்கள் வெறுக்கவில்லை. விமர்சனம் தான் செய்தோம். அந்தச் சாயத்தை முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொள்வதை விரும்பவில்லை. அதை இன்று ரஜினிகாந்த் தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர்கள் என்ன மாதிரியான அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களுக்குச் சொன்ன காரணத்திற்காக, நான் எப்போதும் நேசிக்கும் ரஜினிகாந்த்தை மீண்டும் மனதார வாழ்த்துகிறேன்

இவ்வாறு இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x