Published : 08 Nov 2019 05:41 PM
Last Updated : 08 Nov 2019 05:41 PM

பட்டாசு, பட்டம், புகைப்படம் எதுவுமே வேண்டாம்: தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

பட்டாசு, பட்டம், புகைப்படம் எதுவுமே வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திரைப்படங்களில் நாயகனாக நடித்துக்கொண்டே, திமுக இளைஞரணியின் செயலாளராகப் பணிபுரிந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தேர்தல்களில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம், போராட்டம் எனத் தொடர்ச்சியாக அரசியல் களத்திலும் பணியாற்றி வருகிறார்.

இதனிடையே தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக் கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''மதவெறி கூட்டத்துக்குத் தமிழ் மண்ணில் அறவே இடமில்லை என்பது நாம் அறிந்ததே. இது, அந்தக் கூட்டத்துக்கும் தெரியும். ஆனால் நம் பெருமித அடையாளங்கள் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களைத் திரித்து பிரச்சாரம் செய்வதன் மூலம் இங்கு தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதுபோன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளனர். இதற்கு மாநிலத்தில் ஆளும் கையாலாகாத அடிமை அரசும் துணை போவதுதான் வேதனை.

இந்த சூழலில் பொய் பிரச்சாரம் செய்யும் மதவெறி கும்பலுக்கு நாமும் தீனி போட்டுவிடக்கூடாது என்பதே என் வேண்டுகோள். சில தொலைக்காட்சிகளில், ‘திமுக சம்பந்தப்பட்ட சுவரொட்டிகளில் மூத்த தலைவர்களின் புகைப்படங்களைவிட உதயநிதியின் புகைப்படமே பிரதான இடம்பிடிக்கிறது. இதற்கு யார் காரணம்’ என்று பரபரப்பாக விவாதிக்கிறார்கள்.

இதுபோன்ற செய்திகள், இந்த ஆட்சிகளின் அவலத்தைத் திசை திருப்ப நடக்கும் வேலையே தவிர, இதில் ஆக்கபூர்வமான அறிவு புகட்டும் பணி துளியும் இல்லை என்பது உங்களுக்கே தெரியும்.இருந்தாலும் நாமும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது அவசியம். இது, உங்களுக்கு நான் ஏற்கெனவே சொன்னதுதான். இருந்தாலும் உறுதியாகவும் இறுதியாகவும் மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

இனி, நான் சம்பந்தப்படாத, நான் கலந்துகொள்ளாத நிகழ்ச்சி பற்றிய நாளிதழ் அறிவிப்புகளிலோ, சுவரொட்டிகளிலோ, அழைப்பிதழ்களிலோ என் புகைப்படத்தைக் கழகத்தினர் யாரும் பயன்படுத்தக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், கழகத் தலைவர் போன்ற நம் முன்னோடிகளின் புகைப்படங்கள்தான் இடம்பெற வேண்டும்.

இதேபோல், ‘முத்தமிழறிஞர் கலைஞர்’ என்பவர் ஒரே ஒருவர்தான். அப்படியொரு பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைக்கு நிகராக வேறொருவரை நம்மால் காட்டிட முடியுமா? உண்மை இப்படியிருக்கையில் என் பெயருக்கு முன்னால், ‘மூன்றாம் கலைஞர், திராவிடக் கலைஞர், திராவிடத் தளபதி, இளம் தலைவர்’ போன்ற பட்டப்பெயர்கள் இடுவதை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. இப்படி பட்டப்பெயரிட்டு விளிப்பதால், ‘நாளையிலிருந்து நான் என்ன கலைஞராகி விடப்போகிறேனா? கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே, நம் தலைவருக்கு நிகர் தலைவர் மட்டுமே!

இனி, இதுபோன்ற தர்மசங்கடங்களுக்கு என்னை ஆளாக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். நான், ‘உங்களில் ஒருவனாக, உங்களின் மனதுக்கு நெருக்கமான உதயநிதியாகவே எப்போதும் இருக்க விரும்புகிறேன். அதனால் தயவுசெய்து பட்டப்பெயர்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இதேபோல, நான் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் நிறுத்தவேண்டும். என் வருகையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் செலவு செய்தே ஆகவேண்டும் என நீங்கள் நினைத்தால், பட்டாசு வாங்க ஆகும் பணத்தை என் முன்னிலையில் ஏழை எளிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கொடுத்து உதவுங்கள். அதுவே நம் மனதுக்கு நிறைவான கொண்டாட்டமாக அமையும்.

மேலும் கழகக் கொடி கட்டுவதைக்கூட காவல்துறையின் அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

‘ஃப்ளக்ஸ் பேனர்களை அறவே தவிர்க்கவும்’ என்ற நம் கழகத் தலைவரின் அறிவுறுத்தலைக் கடைக்கோடி தொண்டர்கள்வரை கட்டளையாக ஏற்றுக் கடைபிடிப்பதை நினைத்துப் பெருமையடையும் நான், மேற்கண்ட என் வேண்டுகோள்களையும் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்.

‘ஏற்கெனவே பேனர் வேணாம்னு சொல்லிட்டீங்க. இப்ப, பட்டாசு கூடாதுங்குறீங்க. பட்டப்பேரையும் தவிர்க்கச் சொல்றீங்க, கூடுதலா போட்டோவே வேண்டாம்ங்கிறீங்க. நீங்க வர்றதை அப்புறம் நாங்க எப்படித்தான் கொண்டாடுறது?’ என்று உரிமையுடன் கேள்வி எழுப்பும் உங்களின் மனக்குரலை என்னால் கேட்க முடிகிறது.

உங்களைப் பற்றி நானும் என்னைப் பற்றி நீங்களும் புரிந்துகொள்ள, பகிர்ந்துகொள்ள இந்த பட்டாசு, பட்டம், புகைப்படம் போன்றவை தேவையா என்ன?

பொய்யர்களின் இரைச்சல் அதிகரித்துள்ள இந்த விஷச்சூழலில் சமூக நீதியை, இனத்தை, பண்பாட்டை, மொழியைக் காக்க வேண்டிய இடத்திலுள்ள நாம், இதுபோன்ற தேவையற்ற விளம்பரங்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமாகக் கடமையாற்றுவோம்''.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x