Published : 08 Nov 2019 10:57 AM
Last Updated : 08 Nov 2019 10:57 AM

 ’பில்லா’ வெற்றியால் ரஜினிக்கு வந்த ‘ரீமேக்’ ப்ளான்;  முதலில் ‘எரிமலை’... பிறகு ‘பொல்லாதவன்’


வி.ராம்ஜி


’பில்லா’ படத்தின் வெற்றி,ரஜினியை யோசிக்கவைத்தது. இதேபோல், வேற்றுமொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்யலாமே என்று திட்டமிட்டார். அதன் படி, கன்னடத்தில் இருந்து உரிமை பெற்று, ரீமேக் செய்யப்பட்டு தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுதான் ‘பொல்லாதவன்’.
1980-ம் ஆண்டு, ரஜினி மளமளவென ஹிட் படங்களைக் கொடுத்தார். அதில் அவரின் கேரியரையே உயர்த்திய படம்... ‘பில்லா’. கே.பாலாஜியின் தயாரிப்பில், கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான இந்தப் படம், இந்திப் படமான ‘டான்’ படத்தை ரீமேக் செய்து எடுக்கப்பட்டது. அமிதாப் நடித்த கேரக்டரில் ரஜினி நடித்திருந்தார். ஸ்ரீப்ரியா, பிரவீணா, ஆர்.எஸ்.மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், ஏவிஎம்.ராஜன், மனோரமா, தேங்காய் சீனிவாசன் முதலானோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அப்போது விவிதபாரதியில் இந்தப் படத்தின் பாடலை அடிக்கடி ஒலிபரப்புவார்கள். படத்தின் ‘மை நேம் இஸ் பில்லா’வும் ‘வெத்தலையைப் போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி’ பாடலும் திரும்பத் திரும்ப ஒலிபரப்பு செய்யப்பட்டது. இந்தப் பாடல்களும் ரஜினியின் அசால்ட்டான நடிப்பும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தன. படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். ரஜினியின் திரைப் பயணத்தில், ‘பில்லா’ படத்துக்குப் பிறகு ரசிகர்களின் எண்ணிக்கை கூடியது என்று பதிவிடுவதுதான் சரியாக இருக்கும்.
இந்த சமயத்தில், முக்தா பிலிம்ஸில் ரஜினியின் கால்ஷீட் கேட்கப்பட்டது. அங்கே சொன்ன கதை பிடித்திருந்தாலும், ‘ரீமேக் படம் பண்ணலாமே’ என்றார் ரஜினி. ‘அதாலத்’ ரீமேக் வாங்குங்களேன். பண்ணுவோம்’ என்றார். அதன்படி, முக்தா சீனிவாசனும் அவரின் சகோதரர் முக்தா ராமசாமியும் ‘அதாலத்’ படத்தின் உரிமையைப் பெறுவதற்காகச் சென்றார்கள். அவர்கள் ஏற்கெனவே படம் பார்த்திருந்தார்கள். அவர்களுக்கும் பிடித்துப் போயிருந்தது. ஆனால், பத்மாலயா நிறுவனம் முதல்நாள்தான் உரிமையை வாங்கிவிட்டிருந்தது.
அந்த சமயத்தில், கன்னடத்தில், ’பிரேமத காணிக்கா’ என்றொரு படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்திருந்தார். இந்தப் படம் குறித்து ரஜினி சொல்லவே, அந்தப் படத்தின் உரிமை வாங்கப்பட்டது.
படத்துக்கு ‘எரிமலை’ என்று டைட்டிலை பதிவு செய்தார்கள். ‘வேற டைட்டில் யோசிங்களேன்’ என்றார் ரஜினி. பிறகு வைத்ததுதான் ‘பொல்லாதவன்’ எனும் தலைப்பு. இந்தத் தலைப்பைச் சொன்னவர்... ரஜினிகாந்த்.

லட்சுமி, ஸ்ரீப்ரியா, சிவசந்திரன், டெல்லிகணேஷ், சுருளிராஜன் முதலானோர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள், அதில் சிம்லாவில் எடுக்கப்பட்டிருக்கும். இதில், காஷ்மீரில் எடுத்தார்கள். படத்தில், தாடியுடனும் கூலிங்கிளாஸுடனும் இருப்பார் ரஜினி. இதுவும் ரஜினியின் ஐடியாதான் என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் முக்தா ரவி.
நூறு நாட்களைக் கடந்து ஓடியது இந்தப் படம். நல்ல வசூலையும் கொடுத்தது. இந்தப் படத்துக்கு ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் என்று முக்தா ரவியிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்...
‘’ரெண்டரை லட்சமோ மூணு லட்சமோ... சரியா ஞாபகம் இல்லை. ஆனா இந்த அளவுதான் சம்பளம் கொடுத்ததா நினைவு’’ என்றார்.
80-ம் ஆண்டு ‘பில்லா’வும் அதன் பிறகு ’அன்புக்கு நான் அடிமை’யும் இதையடுத்து ‘பொல்லாதவன்’ படமும் பின்னர் ஏவிஎம்மின் ‘முரட்டுக்காளை’யும் வெளியானது. மற்ற படங்கள் வந்திருந்தாலும் இந்த நான்கு படங்களும் ரஜினியின் இன்றைய வளர்ச்சிக்கு பெரிதும் அஸ்திவாரம் போட்ட படங்களாக அமைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x