Published : 07 Nov 2019 05:13 PM
Last Updated : 07 Nov 2019 05:13 PM

கமலைப் பிடிக்கக் காரணம் என்ன? - ரகசியம் பகிரும் பிரபலங்கள்

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவம்பர் 7) தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு கமலை ஏன் பிடிக்கும் என்பதற்கான காரணத்தை இங்கு சில பிரபலங்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பிரேம் குமார், இயக்குநர் - ஒளிப்பதிவாளர்

நான் இயக்குநராகக் காரணம் மணிரத்னம்தான். ஆனால் சினிமா என்ற கலையை நான் புரிந்துகொண்டது கமல்ஹாசனிடமிருந்து. எனது சொந்த ஊர் தஞ்சாவூரில் நான் பள்ளிச்சிறுவனாக இருந்த போது காக்கி சட்டை படம் பார்த்தது நினைவில் இருக்கிறது. அந்த வயதில் கூட கமலிடம் ஏதோ ஒரு வித்தியாசத்தைக் கவனித்தேன். கமல் சார் ஒரு இளம் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பார். போலீஸாக காட்ட அவர் உடற்கட்டை ஏற்ற முயற்சித்திருப்பது தெரியும். அவரது அனைத்து படங்களுமே எனக்கு பைபிள் போல. முக்கியமாக விருமாண்டி. அது தீவிரமான படம். ஆனால் அதில் எளிமையான காட்சிகள் எனக்குப் பிடித்திருந்தது.

காளை மாடு தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கும் போது விருமாண்டியும் - அன்னலட்சுமியும் பேசுவார்கள். அதில் வசனங்களைக் கவனித்தீர்கள் என்றால், அவர் மெயில் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார். அது அந்தக் காலத்தையும், பகுதியையும் குறிக்கும் வார்த்தை. இது போன்ற யதார்த்தமான காதல் காட்சியை முதல் முறையாக அப்போதுதான் தமிழ் சினிமாவில் பார்த்தேன். எதிர்பாராத இடங்களிலிருந்து இந்தப் படத்தின் நகைச்சுவை எழுதப்பட்டிருக்கும். பல்வேறு அடுக்குகள் கொண்ட திரைக்கதை. ஆனால் கமல் சாரைப் பொறுத்தவரை அவர் படங்கள் மூலம் பாடம் எடுத்ததில்லை. விருமாண்டியோ, ஹேராமோ. அதுதான் கலைஞன் என்பதற்கு

ஷான் ரால்டன், இசையமைப்பாளர்

நான் வளரும்போது கமல்ஹாசனின் பல படங்களைப் பார்க்கவில்லை. ஆனால் ஹே ராம் பார்த்தபோதுதான் அவர் யார் என்று எனக்குப் புரிந்தது. நயமான சினிமா என்றால் என்ன என்று அது சொல்லியது. எனக்குள் எதையோ செலுத்தியது. சாகேத் ராம் கதாபாத்திரத்துக்கு பல தன்மைகள், நிறங்கள் இருந்தன. அவனுக்குள் இருக்கும் தவிப்பை, அவனுக்குள் இருக்கும் கோபம் எப்படி மெதுவாக வளர்கிறது என்பதைப் படம் சித்தரித்திருந்தது.

தனது மனைவி இறந்தவுடன் அதுல் குல்கர்னியை அவர் சந்திக்கும் காட்சி. அவர் குரலில் இருக்கும் பதட்டம், அவர் என்ன உணர்கிறார் என்பதை விளக்க முடியாத நிலை. நீங்கள் தீவிரமான ஒரு சூழலில் இருக்கும்போது என்னவென்று விளக்க உங்கள் சக்தி இருக்காது. கமல் அதை நம்பமுடியாத ஒரு நடிப்பின் மூலம் காட்டியிருப்பார். நான் படத்தைப் பல நூறு முறை பார்த்திருக்கிறேன். அந்த காட்சியும், ஷாரூக் கானுடன் அவர் சித்தாந்தம் பற்றிப் பேசும் காட்சியும்தான் இதை தலைசிறந்த படைப்பாக மாற்றுகிறது.

எஸ்.ஜே.சூர்யா - இயக்குநர், நடிகர்

தேவர் மகன் படத்தின் முதல் நாள் முதல் காட்சி. படத்தின் கதை என்னைத் திக்குமுக்காட வைத்தது நினைவிருக்கிறது. அப்போது ஸ்ட்ரீமிங் தளங்கள் கிடையாது. பல முறை படங்கள் பார்க்கும் வசதி கிடையாது. ஒவ்வொரு முறை நான் திரையரங்குக்குச் சென்ற போதும் கையில் ஒரு நோட்டை வைத்துக் குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். ஏனென்றால் இந்திய சினிமாவில் மிகச்சிறந்த திரைக்கதைகளில் தேவர்மகனும் ஒன்று.

ஒரு திரைக்கதை எப்படி இருக்க வேண்டும் என்ற திட்ட வரைவு போலவே அது இருந்தது. திரைக்கதையைப் பற்றி மட்டும்தான் பேசுகிறேன். கதாபாத்திரங்கள், நடிப்பு பற்றிப் பேச ஆரம்பித்தால் இன்னும் ஒன்றிரண்டு மணிநேரங்கள் தேவை.

- ஸ்ரீனிவாச ராமானுஜம், ஸ்ரீவத்சன் (தி இந்து ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x