Published : 04 Nov 2019 03:41 PM
Last Updated : 04 Nov 2019 03:41 PM

’ராக்கி’ அப்டேட்: வில்லனாக நடித்துள்ள பாரதிராஜா

வசந்த் ரவி நடித்துள்ள 'ராக்கி' படத்தில் வில்லனாக நடித்துள்ளார் பாரதிராஜா.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ராக்கி'. தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.ஏ ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. காட்சியமைப்புகளுக்கும், ஒளிப்பதிவுக்கும் பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பாலிவுட் நடிகர் வருண் தவண் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் பகிர்ந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தப் படத்தில் வில்லனாக பாரதிராஜா நடித்திருப்பதாக வசந்த் ரவி தெரிவித்துள்ளார். முதலில் நடிக்கத் தயங்கிய பாரதிராஜா, முழுக்கதையையும் கேட்டுவிட்டு நடித்துள்ளார். அனைத்துப் பணிகளும் முடித்து முழுப்படத்தையும் பார்த்துவிட்டு, இது தான் நான் வில்லனாக நடிக்கும் கடைசிப் படம். இனிமேல் வில்லனாக நடிக்கப் போவதில்லை என பாரதிராஜா தெரிவித்ததாக வசந்த் ரவி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 'ராக்கி' படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x