Published : 02 Nov 2019 08:02 PM
Last Updated : 02 Nov 2019 08:02 PM

தமிழகத்தில் 'பிகில்' படத்தின் வியாபார முறை: ஸ்கிரீன் சீன் நிறுவனம் விளக்கம்

தமிழகத்தில் 'பிகில்' படத்தின் வியாபார முறை குறித்து ஸ்கிரீன் சீன் நிறுவனம் அளித்த பேட்டியொன்றில் விளக்கமளித்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியது. தமிழகத்தில் மட்டும் ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் மொத்த வசூலில் தாண்டிவிட்டாலும், எந்தவொரு தகவலையுமே அதிகாரபூர்வமாக தெரிவிக்காமல் அமைதி காத்தது படக்குழு.

இந்நிலையில், ஸ்கிரீன் சீன் நிறுவனத்தைச் சேர்ந்த சுந்தர் ஆறுமுகம் முதல் முறையாக 'பிகில்' படம் எப்படி தமிழகத்தில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு வசூல் என்பதை 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இது விஜய் படம் என்பதே வாங்குவதற்கு போதுமான காரணமாக இருந்தது. அதே நேரத்தில் நான் இதை அவுட்ரைட் முறையில் மட்டுமே வாங்க வேண்டும் என்று நினைத்தேன். பணம் கொடுத்து வாங்கினேன். அவுட்ரைட் முறையில் வாங்கி விற்கும்போது தயாரிப்பாளர் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

நான் மாநிலம் முழுவதும் பல விநியோகஸ்தர்களுக்கு படத்தை விற்றுவிட்டேன். அவர்களுக்கான லாப விகிதம் குறைவாக இருந்தாலும் அவர்கள் வசூல் செய்யும் பணம் மொத்தமும் அவர்களுக்குத்தான். இதுவரை படம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் 100 கோடி வசூலைத் தாண்டிவிட்டது. ஒவ்வொருவருக்கும் லாபகரமாக அமைந்துள்ளது.

சினிமா என்பது வேட்கை போல. அதில் சிலசமயம் துரிதமாகச் சம்பாதிக்கவும் முடியும். உங்கள் படம் ஆறு மாதங்களிலோ, ஒரு வருடத்திலோ ஹிட் ஆகும்போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. அப்படியான வெற்றிக்குப் பிறகு (யோசிக்காமல்) இரண்டு மூன்று படங்களை ஒப்பந்தம் செய்து சிலர் குழம்பிப் போவார்கள்.

சிலர் நடிகர்களை வைத்து படம் எடுத்தால் படம் வெற்றி அடையும் என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. எப்போதுமே நல்ல கதை வெற்றி பெறும். அடுத்தடுத்து நிறையப் படங்கள் எடுக்க நாங்கள் விரும்பவில்லை. ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு மேல் செய்ய விருப்பமில்லை

இவ்வாறு ஸ்கீரின் சீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், தேவி திரையரங்கில் 'பிகில்' காட்சி ரத்தான விவகாரம் தொடர்பான கேள்விக்கு, "100 சதவீத ரசிகர்களில் 70 சதவீதத்தினர் ஏற்கனவே 'பிகில்' படத்தை முதல் வாரம் பார்த்து விட்டனர். அப்படியென்றால் கண்டிப்பாக சில காட்சிகள் ரத்தாகத்தான் செய்யும். இது வழக்கமாக எல்லா படங்களுக்கும் நடப்பதுதான்" என்று தெரிவித்துள்ளார் சுந்தர் ஆறுமுகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x