Published : 02 Nov 2019 04:20 PM
Last Updated : 02 Nov 2019 04:20 PM

சில சம்பவங்கள் நம்மை வாயடைக்கச் செய்யும்: பிரதமருடன் பாலிவுட் பிரபலங்கள் எடுத்த செல்ஃபி நிகழ்வில் எஸ்.பி.பி பகிரும் ஆச்சர்யம்

பிரதமருடன் பாலிவுட் பிரபலங்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டது குறித்து பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மாவின் 150 வது ஆண்டு கொண்டாட்டத்தில் காந்திஜிக்குச் சிறப்பு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சி பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் ஷாரூக் கான், ஆமிர்கான், சோனம் கபூர், கங்கனா, ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, நிதேஷ் திவாரி மற்றும் தயாரிப்பாளர்கள் ஏக்தா கபூர், போனி கபூர் மற்றும் ஜெயந்திலால் கடா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தென்னிந்தியத் திரையுலகிலிருந்து தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் கலந்து கொண்டார். இது தொடர்பான தனது வருத்தத்தை ராம் சரணின் மனைவி உபாசனா தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் இந்தச் சந்திப்பில் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் கலந்து கொண்டுள்ளார். இதை தற்போது தனது ஃபேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாகத் தனது பதிவில், "ஈநாடு நிறுவனர் ராமோஜி ராவ்ஜிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவரால்தான் அக்டோபர் 29-ம் தேதி பிரதமர் மோடி தனது இல்லத்தில் அளித்த விருந்தில் நான் கலந்து கொள்ள இயன்றது.

பிரதமர் இல்லத்துக்குள் நுழையும் முன் எங்கள் அனைவரின் செல்போனும் வாங்கிவைக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியிலிருந்தவர்கள் அதற்கான டோக்கனை அளித்து உள்ளே அனுப்பினர். ஆனால் நான் உள்ளே சென்று பார்த்தபோது எனக்கு ஒரே அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. காரணம் அங்கிருந்த பிரபலங்கள் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். சில சம்பவங்கள் நம்மை வாயடைக்க வைக்கும். அப்படித்தான் இதுவும்" என்று தெரிவித்துள்ளார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

இவரது இந்தப் பதிவின் மூலம் பாலிவுட் பிரபலங்கள் அனைவருக்குமே செல்போன் அனுமதிக்கப்பட்டதை மறைமுகமாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சுட்டிக் காட்டியிருப்பது தெளிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x