Published : 01 Nov 2019 21:44 pm

Updated : 01 Nov 2019 21:44 pm

 

Published : 01 Nov 2019 09:44 PM
Last Updated : 01 Nov 2019 09:44 PM

விஜய்யின் எளிமை, அஜித்தின் அன்பு, கார்த்தியின் பாராட்டு: மனம் திறக்கும் ஜார்ஜ் மரியான்

george-mariyan-interview-about-kaithi-and-bigil

விஜய், அஜித், கார்த்தி ஆகியோருடன் நடித்த அனுபவங்கள் குறித்து ஜார்ஜ் மரியான் பேட்டியளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் 'கைதி'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் முதல் வாரத்திலே போட்ட முதலீட்டை எடுத்துவிட்டது படக்குழு. வரும் வாரம் கிடைக்கும் வசூல் அனைத்துமே லாபமாகத் தான் இருக்கும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், தினா, ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்துள்ளனர். இதில் ஜார்ஜ் மரியான் நடிப்புக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். 'கைதி' படம் மட்டுமன்றி 'பிகில்' படத்திலும் சர்ச் ஃபாதராகவும் ஜார்ஜ் மரியான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு படங்களுமே தனக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுத்திருப்பது குறித்து ஜார்ஜ் மரியான் அளித்துள்ள பேட்டி

'கைதி' படத்தில் ஹீரோயிசமான காட்சிகளில் நடித்த அனுபவம் குறித்து..

லோகேஷ் கனகராஜ் சார் கதை சொல்லும்போதே இந்தப்படத்துல உங்களுக்கு முக்கியமான ரோல் சார். நல்லா வரும் பாருங்கன்னு சொன்னார். எல்லா படத்திலும் இப்படி தான் சொல்லுவாங்க, எல்லாப் படம் போல தான் இந்தப் படத்திலும் வேலை பார்த்தேன். ஆனா இப்போ பெரிய வெற்றிப்படமா அமைஞ்சிடுச்சு. இந்த டீமே பிரமாதமான டீம். எல்லோருமே கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்காங்க. இப்படி ஒரு வெற்றிப்படத்தில நானும் ஒரு அங்கமா இருக்கறதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். நிறையப் பேர் போன் பண்ணி பாராட்டுறாங்க. நெப்போலியன் கேரக்டர் பத்தி பேசுறாங்க. சொந்தக்காரங்க நிறையப் பேர் சூப்பரா பண்ணிருக்கீங்கனு சொன்னாங்க.

இதுவரை காமெடி போலீஸ் கேரக்டரில் தான் நடித்துள்ளீர்கள். மாஸான போலீஸாக மாற்றம் எப்படி இருந்தது?

சுந்தர் சி சார் படங்கள்ல காமெடி போலீஸா நடிச்சிருக்கேன் எல்லோரும் கொண்டாடுவாங்க. நம்மள பார்த்து சிரிப்பாங்க. ’தடம்’ படத்தில தான் முதல் முறையா மகிழ் திருமேனி சார் கொஞ்சம் சீரியஸான ரோல் தந்தாரு. ஆனா ’கைதி’ல ரொம்பவும் கனமான கதாபாத்திரம். எனக்கே கொஞ்சம் சந்தேகம் இருந்தது. என்னடா மக்கள் இதுவரைக்கும் நம்மள காமெடியனதான் பார்த்திருக்காங்க இதுல இவ்வளவு சீரியஸான பாத்திரத்தில எப்படி ஏத்துப்பாங்க சிரிச்சிட்டா தப்பாயிடுமேனு யோசிச்சேன். ஆனா லோகேஷ் சார் தான் தைரியம் தந்தார். பண்ணுங்க சார் மக்கள் ஏத்துப்பாங்கனு சொன்னார். அவருக்கு கதை மேல பயங்கர நம்பிக்கை. அவர் கொடுத்த தைரியத்தால் தான் பண்ணினேன். காமெடில இருந்து நம்மள இப்படிபட்ட பாத்திரத்தில மக்கள் ஏத்துகிட்டதே பெரிய சந்தோஷம் தான்.

கார்த்தி படம் பார்த்துவிட்டு என்ன சொன்னார்?

கார்த்தி சாருக்கும் எனக்கும் படத்தின் கடைசில தான் ஸீன் வரும். அதுவும் பயங்கரமா வந்திருக்கு. கார்த்தி சார் நடிப்பில பிரமாதப்படுத்தியிருக்கார். லாரி ஓட்டுறது எல்லாம் அவ்வளவு ஈஸி கிடையாது ஆனா அவரே தான் படம் முழுக்க ஓட்டியிருக்கார். பின்னிட்டார். க்ளைமாக்ஸ்ல நாங்க ரெண்டு பேரும் வருவோம். கார்த்தி சார் தன்னோட வேலையில சரியா இருப்பார். படம் பார்த்து கார்த்தி சார் கூப்பிட்டு பாராட்டுனாரு அவருக்கு பெரிய மனசு.

'காஞ்சிவரம்’ படம் தான் உங்களுக்கு ஒரு அடையாளம் கொடுத்தது. அதைப் பற்றி..

அந்தப்படத்தில் என்னை பலரும் அடையாளம் கண்டு சொன்னார்கள். அந்தப் படத்தில் பிரியதர்ஷன் சாரிடம் அசிஸ்டெண்ட்டாக ஏ.எல்.விஜய் சார் வேலை பார்த்தார். அவர் தான் என்னை அந்தக் கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்தார். அப்போது ஏற்பட்ட பழக்கம் அவர் படங்களில் எனக்கு வாய்ப்பு தருவார். 'பொய் சொல்லப் போறோம்' எனக்கு முக்கியமான படம். அதன் கதையே நாடகம் போட்டு ஏமாற்றுவது மாதிரி நாசர் சாரும் நானும் நடிச்ச காட்சி எல்லோருக்கும் பிடித்திருந்தது. . அதைத்தொடர்ந்து ’மதராசப்பட்டினம்’, ’சைவம்’ என எனக்கு நல்ல கதாபாத்திரங்களாக அமைந்தன.

'பிகில்' படத்தில் நடித்த அனுபவம்..

விஜய் அருமையான நடிகர். எனக்கு அவரை திட்டுவது போல் ஃபாதர் கேரக்டர். கொஞ்சம் பயமாகிவிட்டது. அவரிடம் முன்னாடியே 'சார் இந்த மாதிரி தப்பா எடுத்துக்காதீங்க' என்றேன். அவர் 'அதெல்லாம் ஒன்றுமில்லை இது காட்சிதான் நீங்கள் நன்றாகச் செய்யுங்கள்' என்றார். எனக்குக் கூச்சம் போகக் காட்சி எடுக்கும் நேரத்தில் எங்களுடனே தான் இருப்பார். எங்களுடன் தான் சாப்பிடுவார். அவ்வளவு எளிமை.

அஜித்துடன் 'விஸ்வாசம்' படத்திலும் நடித்திருந்தீர்கள். அவர் எப்படி?

பெரும் அன்பானவர். தோளில் கைபோட்டுக் கட்டிப்பிடித்துக் கொள்வார். என்ன படமெல்லாம் நடிக்கிறேன் என விசாரிப்பார். படம் முடிந்த போது யூனிட்டுக்கே அவர் கையால் சமைத்து பிரியாணி செய்து தந்தார். அவருடன் நடித்தது மகிழ்ச்சியே.

’கைதி’ பார்த்து விட்டு உங்கள் குடும்பத்தில் என்ன சொன்னார்கள் ?

படம் எடுக்கும்போதே லோகேஷ் சொன்னார். அண்ணா வீட்டில் இப்போது எதுவும் சொல்லாதீர்கள்; படம் வந்த பிறகு கூட்டிப்போங்கள் என்றார். தீபாவளிக்குப் படத்திற்கு குடும்பத்தைக் கூட்டிப் போனேன். என் பையனும், மகளும் ஆச்சரியப்பட்டார்கள். ’அப்பா என்ன இவ்வளவு பெரிய ரோலில் நடித்திருக்கிறீர்கள் சொல்லவே இல்லையே’ என்றார்கள். அவர்களின் நண்பர்கள் எல்லாம் உங்கள் அப்பா பிரமாதமாக நடித்திருப்பதாகப் பாராட்டியிருக்கிறார்கள் அவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இதை விட வேறென்ன வேண்டும். சினிமாவில் வந்து இத்தனை வருடத்தில் மிகப்பெரிய சந்தோஷம் இது தான்.


கைதிபிகில்விஜய்கார்த்திஜார்ஜ் மரியான் பேட்டிவிஸ்வாசம்அஜித்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author