Published : 01 Nov 2019 03:00 PM
Last Updated : 01 Nov 2019 03:00 PM

தாய்மொழியில் நடிப்பது எளிது! - நடிகை ஷிவானி நேர்காணல்

‘காலையில் 9 மணிக்கு ஷூட்டிங் வந்தால் மாலையில் வீடு திரும்பும் வரை வேலை பற்றிய எண்ணம் மட்டும்தான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும். எப்போதுமே எனது வேலை மட்டும்தான் எனக்கு ரோல் மாடல்!’’ என்கிறார் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இரட்டை ரோஜா’ தொடரின் நாயகி ஷிவானி. அவருடன் தொடர்ந்து உரையாடியதில் இருந்து..

இளம்வயதில் இரட்டை கதாபாத்திரம் சுமக்கும் அளவுக்கு எப்படி தைரியம் வந்தது உங்களுக்கு?

அனு, அபி என்கிற பாத்திரங்களில் ஒருவர் தையல் தொழிலாளி. இன்னொருவர் வழக்கறிஞர். ஒரே காட்சியில் இரு கதாபாத்திரங்களையும் சுமக்கும் இடங்கள் நிறைய இருக்கும். இது சவாலானதுதான். ஆனாலும், வேலையை ரசித்து செய்வதால் சாத்தியமாகிறது. தவிர, இது
போன்ற பாத்திரங்கள் அமைந்தால் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

அனு, அபி இருவரில் உங்களுக்கு யாரை பிடிக்கும்?

யாரை நான் விட்டுக்கொடுக்க முடியும்? ஒருவர் பாசத்தில் உச்சம் தொட்டால், இன்னொருவர் திமிரில் அவரை மிஞ்சுவார். எனவே, இருவரையும் பிடிக்கும். அபிரொம்ப பாவம். அனு அதற்கு நேர்மாறு. ஆனால், இரண்டையுமே மக்கள் ரசிக்கிறார்கள். இந்த வரவேற்பை சமூக வலைதளங் களில் நன்கு உணர முடிகிறது. சேனல் வட்டத்துக்குள் வந்த சில ஆண்டுகளிலேயே 11 லட்சம் ஃபாலோயர்ஸ் இருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி!

தொடர் தொடங்கி சில வாரங்களிலேயே நடிப்பில் ‘ஜீ தமிழ்’குடும்ப விருதுகள் வரைக்கும் கவனத்தை ஈர்த்திருக்கிறீர்களே?

‘இரட்டை ரோஜா’ தொடர் ஆரம்பித்து 30 அத்தியாயங்கள் கடப்பதற்குள்ளாகவே மக்களுக்குப் பிடித்துப்போய், அதிகம் பேர் வாக்களித்துள்ளனர். ஒரு நல்ல தொடர், நல்ல கதாபாத்திரத்துக்கு கிடைத்த கவுரவமாக இதை பார்க்கிறேன். தொடரின் தயாரிப்பாளர் நாராயணன், இயக்குநர் மணிகண்ட பிரபு உள்ளிட்ட பல பேரும் இதற்காக உழைக்கிறார்கள். அதற்கான பெரும் பரிசு, அங்கீகாரம்தான் ‘ஜீ தமிழ்’ குடும்ப விருது!

தொலைக்காட்சி தொடர்களில் பரவலாக மற்ற மொழி நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறதுதானே?

மொழி மாறி நடிப்பது தவறு அல்ல. எனக்கும்கூட தெலுங்கு தொலைக்காட்சிகளில் நல்ல வாய்ப்புகள் வந்தன. ஆனால், ‘இரட்டை ரோஜா’வில் முழு கவனம் செலுத்துவோம் என்று, அந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டேன். நம் தாய்மொழியில் பேசி நடிக்கும்போது எளிதாக உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். நம்மை நடிக்க வைத்து வேலை வாங்குவதும் இயக்குநர்களுக்கு எளிதாக இருக்கும். இதை அறியாமல் சிலர் மற்ற மொழிகளில் இருந்து நடிக்க வருகிறார்கள்.

எதிர்காலத் திட்டம்?

விஜய் டிவியில் ‘பகல் நிலவு’ தொடரில் நடித்தேன். இப்போது நடிப்புக்கு நடுவே தொலைதூரக் கல்வியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். இன்ஸ்டாகிராமில் என் புகைப்படங்களை வெளியிட்டதால்தான் நடிப்பு வாய்ப்பு கிடைத்தது. திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் கனவு. இப்போதே நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஓரிரு ஆண்டுகள் ஆகட்டும் என்று காத்திருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x