Published : 30 Oct 2019 05:10 PM
Last Updated : 30 Oct 2019 05:10 PM

‘தெறி’ ரீமேக்கில் ஸ்ருதி ஹாசன்

‘தெறி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதி ஹாசன் நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய்யை வைத்து அட்லி முதன்முதலாக இயக்கிய படம் ‘தெறி’. 2016-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி இந்தப் படம் வெளியானது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படம், 75 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டு, 175 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர். மறைந்த இயக்குநர் மகேந்திரன், ராதிகா சரத்குமார், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா, அழகம் பெருமாள் என ஏராளமானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்தப் படத்துக்கு, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியால், ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து அட்லி இயக்கத்தில் நடித்தார் விஜய்.

இந்தப் படம், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அப்போது வெளியானது. இருந்தாலும், தெலுங்கில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய ஏகப்பட்ட போட்டி நிலவியது. விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கப் போவதாகப் பல நாட்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ருதி நடிக்கலாம் எனத் தெரிகிறது. இன்னொரு ஹீரோயின் யார் எனத் தெரியவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மது தயாரிக்கும் இந்தப் படத்தை, கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். ஆனந்த் இயக்கத்தில் ‘டிஸ்கோ ராஜா’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரவி தேஜா. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘தெறி’ ரீமேக்கில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

ஸ்ருதி ஹாசன் தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கிவரும் ‘லாபம்’ படத்தில், விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x