Published : 25 Oct 2019 08:56 PM
Last Updated : 25 Oct 2019 08:56 PM

முதல் பார்வை: கைதி 

10 ஆண்டுகளை சிறையில் கழித்த ஒரு கொலைக் குற்றவாளி காவல் துறையில் ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகளைக் காப்பாற்றினால் அதுவே 'கைதி'.

ரூ.840 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைப் பறிமுதல் செய்கிறார் காவல்துறை அதிகாரி நரேன். அதற்குக் காரணமான கும்பலைப் பிடிக்க முயல்கிறார். இதனிடையே போதைப்பொருளைப் பறிமுதல் செய்யும் நோக்கத்துடன் வில்லன் கும்பல் கமிஷனர் அலுவலகத்தைத் தகர்க்கப் பார்க்கிறது. இதுவரை பார்த்திராத தன் மகளைப் பார்ப்பதற்காக சிறையிலிருந்து வெளியே வரும் கார்த்தி போலீஸ் பிடியில் எதிர்பாராதவிதமாக சிக்குகிறார். ஐஜி வீட்டில் பார்ட்டியில் மது விருந்து நடக்க, அதில் போதைப்பொருளை வில்லன் கும்பல் கலக்க, அனைத்து உயர் அதிகாரிகளும் உயிருக்குப் போராடுகின்றனர்.

இந்த சூழலில் நரேன் என்ன செய்கிறார், கார்த்தி அவருக்கு எப்படி, ஏன் உதவுகிறார், கமிஷ்னர் அலுவலகம் என்ன ஆனது, அங்கு இரவுப் பணியில் இருந்த போலீஸார் என்ன முடிவெடுத்தார்கள், வேலையில் சேர வந்த ஜார்ஜின் நடவடிக்கை என்ன, மது அருந்தி மாட்டிக்கொண்ட கல்லூரி இளைஞர்கள் கதி என்ன, கார்த்தி தன் மகளைப் பார்த்தாரா, கார்த்தி செய்த குற்றம் என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து 'மாநகரம்' படத்தைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் ஓரிரவில் நடக்கும் கதைக் களத்தில் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். சினிமாவில் இயக்குநருக்கு இரண்டாவது படம் என்றால் அது ஆசிட் டெஸ்ட் என்று சொல்வார்கள். அந்த டெஸ்ட்டையெல்லாம் தாண்டி லோகேஷ் தன்னை நிரூபித்துள்ளார்.

நாயகி இல்லை, பாடல் இல்லை. ஆனால், கார்த்தி அதற்காக கவலைப்படவில்லை. கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்திருக்கிறார். அமுதாவின் அப்பாவாக, விஜியின் காதலனாக, சொன்ன வாக்கைக் காப்பாற்றும் மனிதராக, உடன் பயணிக்கும் தம்பியின் நலனில் அக்கறை செலுத்தும் நல்ல அண்ணனாக பல்வேறு விதங்களில் பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். படத்தில் கார்த்திக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பில்டப் காட்சிகள் எதுவும் சோடை போகவில்லை. அவ்வளவு பொருத்தமாக இருக்கின்றன.

நரேன் மிகச்சிறந்த குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் மேம்பட்ட நடிப்பை நல்கியுள்ளார். கான்ஸ்டபிளாக நடித்த ஜார்ஜுக்கு தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய வாய்ப்புகள் வரக்கூடும். மனிதர் அநாயசமாக நடித்துள்ளார். அன்பு கதாபாத்திரத்தில் அர்ஜுன் ராஜ் மிரட்டியுள்ளார். ஹரீஷ் பெராடி, ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர். மனோகர், ரமணா, அம்ஜத்கான் ஆகியோர் சிறந்த வார்ப்புகள். நகைச்சுவையும் குணச்சித்திரமும் கலந்த பாத்திரத்தில் தீனா வெளுத்து வாங்குகிறார். தேர்ந்த நடிப்பால் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

மலை, குவாரி, நகரம் என்று எல்லாவற்றிலும் சுற்றிச் சுழன்றுள்ளது சத்யன் சூர்யனின் கேமரா. ஒளிப்பதிவால் படத்தின் தரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறார். சாம் சி.எஸ்.பின்னணி இசையில் இன்னும் தெறிக்க விட்டிருக்கலாம். அந்த குவாரி சண்டைக் காட்சி மட்டும் அலுப்பூட்டுகிறது. மற்றபடி தொய்வில்லாத விதத்தில் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்ற எடிட்டர் பிலோமின் ராஜ் பாராட்டுக்குரியவர்.

ஒரு படத்தின் முதல் பாதியில் நாயகன் அறிமுகம் என்பது 15 நிமிடங்கள் தாண்டி வருவது பெரிதில்லை. ஆனால், முதல் காட்சியிலேயே கதை தொடங்குவது பெரிது. மேலும், நாயகன் பற்றிய எந்தப் பின்புலமும் காட்சிப்படுத்தப்படவில்லை. முதல் பாதியில் 2 வரிகளில் அவரின் முன்கதை சொல்லப்படுகிறது. பின்பாதியில் கார்த்தி தான் யார் என்பதை தீனாவிடம் ஒரு கதை போலச் சொல்கிறார் (ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மாதிரி). அதில் எந்த ஜோடனையும் ஃபிளாஷ்பேக் உத்தியும் இல்லை. இந்த அம்சங்களே இயக்குநரின் திறமையை, துணிச்சலை, புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

தொடக்கத்தில் இருக்கும் பரபரப்பு இறுதிவரை தொற்றிக்கொள்கிறது. அடைக்கலம் என்ற போதைப்பொருள் சப்ளை செய்யும் கும்பல் தலைவனுக்குக் கொடுக்கப்படும் பில்டப்பும் குறிப்பிடத்தகுந்தது.

ஊரை விட்டுக் கிளம்புகிறேன் என்று மெசேஜ் அனுப்பிவிட்டுச் செல்லும் நரேனின் ஆள் ஏன் மீண்டும் ரமணாவிடம் சென்று சிக்குகிறார்? லாரியில் வரும் ஒரு போலீஸ் அதிகாரி மட்டும் கறுப்பு ஆடு என்பதை கடைசி வரை கண்டுபிடிக்காதது நம்பும்படியில்லை. சம்பிரதாயத்துக்காக சண்டைக்காட்சிகள் சேர்க்கப்படவில்லை என்பது உண்மை. ஆனால், அந்த குவாரி சண்டைக்காட்சி மட்டும் தேவையற்றதாகவும் செயற்கையாகவும் இருந்தது.

இதைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு மாபெரும் அனுபவத்தைத் தந்த விதத்தில் 'கைதி' தரமான படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x