Published : 23 Oct 2019 05:36 PM
Last Updated : 23 Oct 2019 05:36 PM

'இந்தியன் 2' அப்டேட்: படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் லீக்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ராஜமுந்திரியில் உள்ள சிறையிலும் சில காட்சிகளைப் படமாக்கினார்கள்.

தற்போது போபாலில் படத்தின் முக்கியமான சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறார்கள். இதற்காக அங்குள்ள கட்டிடங்களுக்கு இடையே, படத்தின் காட்சிகளுக்குத் தகுந்தாற் போல் அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தி வருகிறார்கள்,

அங்குள்ள சாலைகளில் காவல்துறை வாகனங்களுக்கு இடையே கமல் குதிரை ஓட்டிக்கொண்டு போவது போல உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. மேலும், கமலின் வயதான கெட்டப்பும் முழுமையாக எப்படியிருப்பார் என்பது வெளியான புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் படக்குழுவினர் சிறு அதிர்ச்சியில் இருக்கிறார்கள். போபாலில் உள்ள முக்கியமான சாலையில் படப்பிடிப்பு என்பதால், புகைப்படம் எடுக்கப்படாமல் எப்படித் தடுப்பது என்று படக்குழு திணறி வருகிறது.

போபால் படப்பிடிப்பைத் தொடர்ந்து தைவானில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கவுள்ளது. இதில் கமல் - காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார்கள்.

'இந்தியன் 2' படத்தில் 90 வயது நிரம்பியவராக கமல் நடித்து வருகிறார். அந்த வயதைக் கணக்கில் கொண்டே சண்டைக் காட்சிகளை வடிவமைத்து வருகிறார் சண்டைப் பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன். அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 2021-ல் தான் இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x