Published : 23 Oct 2019 12:08 PM
Last Updated : 23 Oct 2019 12:08 PM

36 இரவுகள் படப்பிடிப்பு, பாடல்கள் இல்லை, யூகிக்க முடியாத திரைக்கதை: 'கைதி' அனுபவம் பகிரும் கார்த்தி

36 இரவுகள் படப்பிடிப்பு, பாடல்கள் இல்லாதது மற்றும் யூகிக்க முடியாத திரைக்கதை என்று தனது 'கைதி' அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார் கார்த்தி.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கைதி'. அக்டோபர் 25-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து கார்த்தி கூறியிருப்பதாவது:

''எனது முதல் படம் ’பருத்திவீரன்’ முடிய 2 வருடங்கள் ஆனது. அடுத்த படம் ’ஆயிரத்தில் ஒருவன்’ முடிய 3 வருடங்கள் ஆனது. படங்கள் எடுக்க இவ்வளவு தாமதம்தான் ஆகும் போல என்று நினைத்திருந்தேன். 2014-ல் ’மெட்ராஸ்’ படத்தில் நடிக்கும் போதுதான் 50 நாட்களிலும் படங்களை முடிக்கலாம் என்று புரிந்தது.

’கைதி’ படத்துக்காக 36 இரவுகள் படப்பிடிப்பு நடந்தது. மிகக் கடுமையாக இருந்தது. நினைத்துப் பாருங்கள், காலை 3 மணிக்கு எழுந்து சண்டைக் காட்சிகளில் நடிக்க உடல் தயாராக இருக்க வேண்டும். கடும் குளிர் வேறு இருந்தது. ’கைதி’ படத்தின் திரைக்கதை இந்தப் படத்தை வெற்றிபெறச் செய்யும் என்பதில் நம்பிக்கையாக இருக்கிறேன். இது ஒரு பயணம் பற்றிய படம்.

ஓர் இரவில் நடக்கும் கதை. அடுத்த என்ன நடக்கும் என்பதை யூகிக்கவே முடியாது. இப்படி நடந்தால் என்ன ஆகும் என்பது மாதிரியான படம். லோகேஷ் இதை எழுதியுள்ளது அவ்வளவு விறுவிறுப்பான முறையில் இருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது இது போன்ற படங்களைத்தான் விரும்பிப் பார்ப்பேன். அதனால் எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நான்கு மணிநேரத்தில் நடக்கும் கதை. ’ஸ்பீட்’, ’டை ஹார்ட்’ போன்ற படங்களைப் பார்க்கும்போது அதில் பாடல்களுக்கு எங்கு நேரம் இருக்கும்?. 2-3 வருடங்கள் நடக்கும் கதை என்றால் அதில் பாடல் இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். ’தீரன் அதிகாரம் ஒன்று’ தீவிரமான படம். அதை சரிக்கட்டக் காதல் காட்சிகள் தேவைப்பட்டன. அது இல்லையென்றால் ’தீரன் அதிகாரம் ஒன்று’ பயங்கரமான படமாகத் தெரிந்திருக்கும். ஆனால் ’கைதி’யில் அது தேவைப்படவில்லை. படத்தில் பரபரப்பு இருந்தாலும் மக்கள் ரசிக்கும் வகையில் லேசான தருணங்களும் இருக்கும்''.

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x