Published : 20 Oct 2019 11:08 AM
Last Updated : 20 Oct 2019 11:08 AM

‘’நன்றிக்காக அந்த தயாரிப்பாளருக்கு ‘உதிரிப்பூக்கள்’ பண்ணினார் மகேந்திரன்!’’ - 'யார்’ கண்ணன் நெகிழ்ச்சிப் பேட்டி

வி.ராம்ஜி


‘’நன்றிக்காக அந்த தயாரிப்பாளருக்கு ‘உதிரிப்பூக்கள்’ பண்ணினார் இயக்குநர் மகேந்திரன்’’ என்று நடிகரும் இயக்குநருமான ‘யார்’கண்ணன் தெரிவித்தார்.


1979ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி ‘உதிரிப்பூக்கள்’ ரிலீசானது. படம் வெளியாகி, இது 40ம் வருடம். இந்தப் படத்தை இயக்கி, மிகப்பெரிய சாதனை புரிந்திட்ட, தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய இயக்குநர் மகேந்திரன் இன்று நம்மிடையே இல்லை.


அவரிடம் ‘உதிரிப்பூக்கள்’ உள்ளிட்ட பல படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவரும் நடிகரும் இயக்குநருமான ‘யார்’ கண்ணன், ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்காக, பிரத்யேக வீடியோப் பேட்டி அளித்தார்.


அதில் அவர் கூறியதாவது:


’’மகேந்திரன் சாரின் முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தை எடுத்து முடிக்க அவர் பட்ட சிரமங்கள், அவருக்கு வந்த பிரச்சினைகள் ஆகியவற்றை அருகில் இருந்து பார்த்தவன் நான். ‘முள்ளும் மலரும்’ வெளியாகி, முதல் ஒருவாரத்துக்கு தியேட்டரில் கூட்டமே இல்லை. இரண்டாவது வாரத்தில் இருந்து, கூட்டம் வர ஆரம்பித்தது. அந்தத் தயாரிப்பாளர், அதற்குப் பிறகுதான் மகேந்திரனை மதிக்கத் தொடங்கினார்.
இதையடுத்து, ‘எங்களுக்கு படம் செய்யுங்கள்’ ‘எங்களுக்குப் படம் செய்யுங்கள்’ என்று கூட்டம் தேடி வரத் தொடங்கியது. கையில் செக்கைக் கொடுக்க, பலரும் முன்வந்தார்கள். ஆனால், பணத்தின் மீது எப்போதுமே ஆசைப்படாதவர் மகேந்திரன் சார்.


அந்த சமயத்தில்தான், தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவர், மறைந்தார். அப்போது, மகேந்திரன் உடனே அஞ்சலி செலுத்துவதற்கு கிளம்பிச் செல்ல, வாகன வசதி அவரிடம். மகேந்திரன் சார் மீது, மிகுந்த அன்பு வைத்திருந்தார் தேவர். அதேபோல் அவர் மீது மகேந்திரன் சார் மிகப்பெரிய மரியாதை வைத்திருந்தார். இன்னும் சொல்லப்போனால், அவருக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் தேவர்.
இதையெல்லாம் அறிந்த தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன் என்பவர், தேர்ட்டி ஃபார்ட்டி என்கிற அம்பாசிடர் கார் வைத்திருந்தார். உடனே மகேந்திரன் சாரின் மனதைப் புரிந்தவராக, காரில் ஏற்றிக் கொண்டு, தேவருக்கு அஞ்சலி செலுத்த அழைத்துச் சென்றார். இதைக் கண்டு நெகிழ்ந்து போனார் மகேந்திரன்.


பிறகு எத்தனையோ தயாரிப்பாளர்கள் படம் பண்ணச் சொல்லி வந்த போது, அவர்களையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, தேவர் இறந்த சமயத்தில் ஈரமனதுடன் வந்து உதவி செய்த பாலகிருஷ்ணனை அழைத்து, ‘உங்களுக்கு படம் பண்ணுகிறேன். நீங்கதான் தயாரிப்பாளர்’ என்று சொன்னார். அதை அறிவிக்கவும் செய்தார். அந்தப்படம்தான் ‘உதிரிப்பூக்கள்’.

எந்தத் தயாரிப்பாளரும் கதை என்ன என்று மகேந்திரனிடம் கேட்கவே இல்லை. அதேபோல், பாலகிருஷ்ணனும் கதைப் பற்றியெல்லாம் கேட்கவில்லை. ‘மகேந்திரன் படம் பண்ணினால், அது மிகச்சிறந்த படமாக இருக்கும்’ என்பதில் உறுதியாக இருந்தார்.
அப்போது, எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ எனும் கதையைப் படித்தார் மகேந்திரன். ஒரேயொரு முறைதான் படித்தார். பிறகு அந்தப் புத்தகத்தை அப்படியே வைத்துவிட்டு, அதில் இருந்து சினிமாவுக்கான கதையை உருவாக்கினார். திரைக்கதையை அமைத்தார். அதுதான் ‘உதிரிப்பூக்கள்’.


இவ்வாறு ‘யார்’ கண்ணன் தெரிவித்தார்.

‘யார்’ கண்ணன் ‘இந்து தமிழ்திசை’ இணையதளத்துக்கு அளித்த பிரத்யேக வீடியோ பேட்டியைக் காண :

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x