Published : 18 Oct 2019 04:52 PM
Last Updated : 18 Oct 2019 04:52 PM

நடிகர் திலக நாயகனே பாராட்டிய உலக நாயகனே! - திரையுலகில் கமலின் 60-வது ஆண்டுக்குப் பிரபு வாழ்த்து மடல்

திரையுலகில் அறிமுகமாகி 60 ஆண்டுகள் ஆனதையொட்டி கமலுக்கு விருந்து அளித்து, நினைவுப் பரிசு வழங்கியுள்ளார் பிரபு.

தமிழ்த் திரையுலகில் உலக நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் கமல். 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஆகஸ்ட் 12, 1960-ல் இந்தப் படம் வெளியானது.

இதன்படி பார்த்தால், கமல் தற்போது திரையுலகில் 60-வது ஆண்டில் இருக்கிறார். இதற்காகப் பலரும் கமலுக்கு வாழ்த்துச் சொல்லி வருகிறார்கள். மறைந்த நடிகர் சிவாஜிக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன்.

இதனால், கமலை அன்னை இல்லத்துக்கு அழைத்து தடபுடலாக விருந்து கொடுத்துள்ளார் பிரபு. அவருக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார். அதில் பிரபுவின் குடும்பம் சிறு கவிதை ஒன்றையும் பொறித்துப் பரிசளித்து.

அந்தக் கவிதை பின்வருமாறு:

அரிதாரம் முதல்தாரம் ஆன நடிப்பின் அவதாரம் சிவாஜி
அவர் வெள்ளித்திரை விஞ்ஞானி
அவரின் தலைமகன் நீ கலைஞானி!
நடிகர் திலக நாயகனே பாராட்டிய
உலக நாயகனே!
நீ நடிப்பை ஆண்டு, ஆனது அறுபது ஆண்டு!
நீ ஊரை ஆண்டு, உலகை ஆண்டு
வாழ்ந்திடுக நூறாண்டு!

அன்புடன்,
உங்கள் குடும்பத்தினர்,
அன்னை இல்லம்.

விருந்து முடிந்தவுடன் அன்னை இல்லத்தில் உள்ளவர்கள் அனைவரும் கமலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து. வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. தம்பி பிரபு வாசித்து அளித்த பாராட்டு மடலின் வாசகங்கள் என்னைக் கண் கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது" என்று தெரிவித்துள்ளார் கமல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x