Published : 17 Oct 2019 12:27 PM
Last Updated : 17 Oct 2019 12:27 PM

'கோடீஸ்வரி' நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக மாறினார் ராதிகா

'கோடீஸ்வரி' நிகழ்ச்சி மூலம், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் மாறியுள்ளார் ராதிகா சரத்குமார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் உருவான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் ராதிகா சரத்குமார். அதற்குப் பிறகு முன்னணி நாயகியாக வலம் வந்தார். டிவி நாடகங்கள், படத் தயாரிப்பு, டிவி நிகழ்ச்சிகளில் நடுவர் என அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

'மார்க்கெட் ராஜா MBBS' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இவருக்கு 'நடிகவேள் செல்வி' என்ற பட்டத்தை அளித்தது படக்குழு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை 300-க்கும் அதிகமான படங்களில் ராதிகா நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் மாறியுள்ளார் ராதிகா. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் 'கோடீஸ்வரி' நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்குகிறார். முழுக்க பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் போட்டி இதுவாகும்.

இதில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் அக்டோபர் 28-ம் தேதி முதல் இரவு 8 மணிக்கு ஒரு கேள்வி கேட்கப்படும். அவ்வாறு தினமும் கேட்கப்படும் கேள்வியில் ஒரே ஒரு கேள்விக்கு, சரியாகப் பதில் சொன்னால் கூட இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகவுள்ள ராதிகாவுக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x