Published : 16 Oct 2019 05:09 PM
Last Updated : 16 Oct 2019 05:09 PM

’வெற்றிலையில் சுண்ணாம்பு; வார்த்தைகளில் தேன்!’  - சிரிப்பு மருந்தின் இன்னொரு பெயர் கிரேஸி மோகன்


- இன்று கிரேஸி மோகன் பிறந்தநாள்

வி.ராம்ஜி

ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு விதமான வசனகர்த்தாக்கள் வந்து கைத்தட்டல்களை அள்ளிச் சென்றிருக்கிறார்கள். கருணாநிதியின் ‘பராசக்தி’ காலம் தொடங்கி, கலைவாணர் வசனத்துக்கும் கைத்தட்டினார்கள். ஆரூர்தாஸ், ஏ.எல்.நாராயணன், ‘வசந்தமாளிகை’ பாலமுருகன் என பட்டியல் நீண்டுகொண்டே போகும். அந்த வரிசையில் வார்த்தைக்கு வார்த்தை, சிரிக்கச் சிரிக்க நம்மை ரசிக்க வைத்தவர்... கிரேஸி மோகன்.


நாடக மேடைகளில் வெடித்த இவரின் சிரிப்புப் பட்டாசு, கோடம்பாக்கத்தையே செவி திறக்க வைத்தது. ‘அட... யாருப்பா இந்த டைமிங் காமெடிக்காரர்’ என்று கேட்க வைத்தது. இயக்குநர் கே.பாலசந்தர், இவரி நாடகத்தை சினிமாவாக்கினார். அதுதான் கிரேஸி மோகனின் ஆரம்பம்.
அவர் நுழைவதற்குள் அவரின் படைப்பு நுழைந்தது. அதன் பின்னர், குரு பாலசந்தரின் வழியில், சிஷ்யன் கமல், கிரேஸி மோகனைப் பார்த்து கைகுலுக்கினார். குலுக்கின கையை விடவே இல்லை. அப்படியே கைப்பிடித்து, சினிமாப் பட்டறைக்குள் அழைத்து வந்தார்.

‘அபூர்வசகோதரர்கள்’ படத்தின் வசனங்கள், ரசிகர்களுக்கு மனப்பாடமானது. அந்த அளவுக்குப் பார்த்தார்கள். மீண்டும் மீண்டும் பார்த்தார்கள்.
‘அப்பா, இவர் என் கூடப் படிச்சவர்’
‘நீ ஏம்மா, குறைச்சலாப் படிச்சே’

***********************************************
‘எங்க அப்பாவைக் கொன்னதுக்கு நெத்திப்பொட்டுலதான் சுடணும்னு நினைச்சேன். குத்தத்தை ஒப்புக்கிட்டதால, தொப்புள்ல சுடட்டுமா?’

**********************************************
‘சேதுபதிக்குப் பொறந்தது ரெட்டை. அதுல ஒண்ணு குட்டை’

**********************************************************************
‘ஏம்பா. உனக்கு இது எத்தனாவது பிறந்தநாளு. 44ஆ?’
‘அதுல ஒண்ணு சேர்த்துக்கங்க’
‘441ஆ?’

************************************
‘யாருப்பா அது குள்ளமா?’
‘ஆனா வயசு 27 ஆச்சுங்க’
‘எது... அந்த 26க்கு அப்புறம் வருமே அந்த 27ஆ?’

*****************************************************
இப்படி படம் முழுக்க, சிரிப்புப் பூக்களைத் தூவிக்கொண்டே இருந்ததுதான் கிரேஸி ஸ்டைல் என்றானது.


தொடர்ந்து நாடகம், சினிமா என இரண்டு பக்கமும் போய் வந்து கபடி விளையாடினார். அவை, அவருக்கு ஒன்றும் கடினமாக இல்லை. இரண்டு துறைகளிலும் இவர் எழுதிய காமெடி வசனங்கள், நமக்கு மட்டுமின்றி அவரையே இன்னும் இளமையாயாக்கின.


‘இந்திரன் சந்திரன்’, ‘தேடினேன் வந்தது’, ‘சின்ன மாப்ளே’, ‘சின்ன வாத்தியார்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘மகளிர் மட்டும்’, ‘ஆஹா’ என இவர் எழுதிய படங்களும் வசனங்களும் ஆஹா ரகம்தான்.


‘ஆமாம்... இவரு ஏன் தூக்கமாத்திரை சாப்பிட்டாரு?’
‘இவர்தான் சாப்பிட்டாருன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?’
‘ஆனந்த் எதனால தூக்கமாத்திரை சாப்பிட்டாரு?’
‘இவர் ஆனந்த்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?’
‘இப்ப, உங்க பக்கத்துவீட்டுக்காரரை காப்பாத்தணுமா வேணாமா?’
‘இவர் ஒண்ணும் பக்கத்துவீட்டுக்காரரு இல்ல, என் புருஷன்’
’தெரியும். அப்படிச் சொல்லிருந்தா, எப்படித் தெரியும்னு கேப்பீங்க. அதான் இப்படி மாத்திச் சொன்னேன்’

- இது ‘பம்மல் கே.சம்பந்தம்’ எனும் இரண்டரை மணி நேர சினிமா வுக்குள் வந்த நாலே நாலு வரிகள். நாளெல்லாம் நினைத்துச் சிரிக்கவைக்கும் வரிகள்.

**********************************************

‘என்ன தைச்சிட்டிருக்கீங்க?’
‘சல்வார் கமீஸ்’
‘இது சல்வார் கம்மீஸ். இவ்ளோ குட்டையா தைக்கிறீங்க? இதை ஜப்பானுக்குதான் அனுப்பணும்’
*************************
கமலின் நடிப்புக்காக பார்க்கப்பட்ட படங்கள் கூட, கிரேஸியின் வசனங்களுக்காகவே கூடுதலாக பார்க்கப்பட்டன. ரசிக்கப்பட்டன.


இப்போதும் கூட, கமல் - கிரேஸி கூட்டணியில் வந்த படங்கள், டிவியில் ஒளிபரப்பினால், அன்றைக்கு எந்தச் சண்டையோ சச்சரவோ இல்லாமல், வீடு அமைதியாகிவிடும். ஆனந்தமாகிவிடும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை, எல்லோரும் பிடித்த ‘சாக்லெட் கிருஷ்ணா’ கிரேஸி மோகன். தித்திப்பு வசனங்களால், நம்மைத் திகைக்கச் செய்திருக்கிறாரே தவிர, திகட்டச் செய்ததே இல்லை.


கிரேஸி மோகனின் இன்னொரு ஸ்பெஷல்... அவர் எழுதிய படத்தை முதலில் பார்க்கும்போது, 38 இடங்களில் சிரித்திருப்போம். அடுத்த முறை 45 இடங்களாகியிருக்கும். மூன்றாவது முறை, 62 இடங்களில், சிரித்திருப்போம். அவ்வளவு ஏன்... முப்பது தடவைக்கு மேல் பார்த்து, 90 முறை சிரித்திருந்தாலும் முந்தநாள் அந்தப் படத்தைப் பார்த்தால், இன்னும் ஏழெட்டு முறை சிரித்து வைப்போம். அத்தனை நுணுக்கி நுணுக்கி, லேயர்லேயராக சிரிப்பு வலை பின்னுவதில் கில்லாடி கிரேஸி மோகன்.


வெற்றிலையும் பன்னீர்ப்புகையிலையின் மணமும், காமெடிக்குள்ளும் வீசும். வெற்றிலை போட்டுக்கொண்டே இருப்பார்.
‘அவர் இருந்தார்னா, அந்த ஏரியாவே கலகலன்னு ஆயிரும்’ என்போம். கிரேஸி மோகனும் அப்படித்தான். அவரின் எழுத்து எந்தப் படத்தில் இருக்கிறதோ... அங்கே படம் முழுவதும் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது.


சில பிரமுகர்களை நாம் நேரில் பார்த்திருக்க மாட்டோம். கைகுலுக்கியிருக்க மாட்டோம். ஆனாலும் நம் மனதில் மறக்க முடியாதவர்களின் பட்டியலில் அவர்கள் இடம்பிடித்துவிடுவார்கள். அந்தப்பட்டியலில் கிரேஸியும் இருக்கிறார். இருப்பார். இருந்துகொண்டே இருப்பார்.
வார்த்தையில் தேன் தடவிப் பேசவேண்டும் என்று உதாரணத்துக்குச் சொல்லுவார்கள். தான் போட்டுக்கொள்ளும் வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவினாலும் தன்னுடைய எழுத்துகளில் தேனான வார்த்தைகளையும் கிச்சுக்கிச்சு அர்த்தங்களையும் கலந்து கட்டி கொடுத்த, சிரிப்பு மருந்தை எப்படி மறக்கமுடியும்?


அந்தச் சிரிப்பு மருந்தின் இன்னொரு பெயர்தான்... கிரேஸி மோகன். காலம் முழுவதும் நம்மைச் சிரிக்க வைத்த கிரேஸி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு (ஜூன் 10ம் தேதி) ஒரேயொரு முறை அழவைத்தார் நம்மை! ஆனால்... அப்போதும் கூட அவரின் மூட்டிய சிரிப்பைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்கள் ரசிகர்கள். இதுதான் கிரேஸி மோகனின் தனித்துவமோ என்னவோ?

இன்று (16.10.19) கிரேஸி மோகன் பிறந்தநாள். இந்தநாளில், கிரேஸியை நினைவு கூர்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x