Published : 16 Oct 2019 03:42 PM
Last Updated : 16 Oct 2019 03:42 PM

’திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் ;  40 கேள்விகள்... 40 பதில்கள்

- கே.பாக்யராஜின் பிரத்யேகப் பேட்டி

வி.ராம்ஜி

மழையால் குளிர்ந்த ஓர் ஞாயிற்றுக்கிழமை அது. ‘இன்னிக்கி ஞாயித்துக்கிழமை. மழை வேற. வர்றீங்கதானே’ என்று உறுதி செய்வதற்காக ஒரு போன்கால். ‘ஆமாம் சார். 40 வருடங்கள்... 40 கேள்விகள். நிச்சயமா வந்துருவோம் சார்’ என்றேன்.

1979ம் ஆண்டு, நடித்து இயக்கிய ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படம் வெளியானது. பாக்யராஜுக்கு இது 40வது வருடம். அதற்குத்தான் 40 கேள்விகள். ‘’அப்ப சரி... காலைல 11 மணிக்கு வந்துருங்க’ என்றார்.

லேக் ஏரியாவின் பிரசித்தி பெற்ற பாக்யராஜ் சாரின் வீடு. வீடியோ டீமுடன் அங்கே இறங்கிய போது 10.55. அங்கிருந்த உதவியாளர்களில் ஒருவர், விவரம் கேட்டார். ‘இந்து தமிழ்தானே’ என்று கேட்டுக்கொண்டார். ’ஆமாம்மா. வந்துட்டாங்கம்மா’ என்று இண்டர்காமில் தகவல் சொன்னார். முன்னதாக வேறொரு சேனலில் இருந்தும் வந்திருந்தார்கள்.

மீண்டும் இண்டர்காமில் அழைப்பு. ‘சார், டீ சாப்பிடலாமா?’ என்றார். சேனலில் இருந்து வந்தவர்கள் சரியென்றார்கள். எங்கள் டீமில் நண்பர்கள் இரண்டுபேர் சொன்னார்கள். ஆனால் ... அடுத்த ஐந்தாவது நிமிடம், எல்லோருக்கும் டீ வந்தது. ‘நான் கேக்கல. அவங்கதான் கேட்டாங்க’ என்றேன். ‘அம்மா எல்லாருக்கும் டீ குடுத்து வுட்ருக்காங்க சார். சாப்பிடுங்க’ என்று சொல்லி, டீக் கோப்பையை , கையில் திணித்தார்.

இன்னொரு இண்டர்காம் அழைப்பு .’சரி சார், சரி சார்’ என்றார் உதவியாளர். அந்த சேனல்காரர்களிடம், ‘அந்த ரூம்ல கேமிராவெல்லாம் செட் பண்ணி ரெடியா இருக்கச் சொன்னார் சார்’ என்றார். அவர்கள் தரைத்தளத்தில் உள்ள பாக்யராஜ் சாரின் அறை நோக்கிச் சென்றார்கள்.

பத்து நிமிடங்கள். லிப்ட் கதவு திறந்தது. வழக்கமான யதார்த்தச் சிரிப்புடன் வெளியே வந்தார் பாக்யராஜ். ‘வாங்க ராம்ஜி. டீ சாப்பிட்டீங்களா. நாம செகண்ட் ப்ளோர்ல வைச்சிக்குவோம். ஒரு பத்து நிமிஷம் மட்டும்தான் இந்தப் பேட்டி. அதுக்குள்ளே, சோபாவை இடம் மாத்தணுமா, கேமிராவை எங்கே வைக்கணும்னு பாத்து செட் பண்ணி ரெடியாகிக்கோங்க’ என்றார்.

அடுத்த இருபது நிமிடங்கள் தடதடவென ஓடின. அந்த அறையை கண்களால் துழாவிப் படமெடுத்துக் கொண்டது வீடியோ குழு. சோபாக்கள் நகர்த்தப்பட்டன. இப்படியும் அப்படியுமாக திருப்பி வைக்கப்பட்டன. புத்தர் சிலை, சைக்கிள் பொம்மையுடன் கடிகாரம், மனைவியுடன் போஸ் கொடுத்த பூரிப்பில் பாக்யராஜ் சார் புகைப்படம். இசைக்கும் கலைஞர்களின் ஓவியம் என அந்த அறை அழகு கொட்டிக்கிடந்தது.

’என்ன ரெடிங்களா? எங்கே உக்கார்றோம்?’ என்று கேட்டபடியே வந்தார் பாக்யராஜ். இங்கே, அங்கே, பிறகு இந்தப் பக்கம், அப்புறம் கொஞ்ச நேரம் நின்றுக்கொண்டு... என்றெல்லாம் எடுக்கலாம் சார் என்றதும் ‘அப்படீங்கறீங்க?’ என்று வியந்து கேட்டார். எத்தனையெத்தனை படங்கள் மூலமாகவோ நம்மை வியக்க வைத்த எண்பதுகளின் எல்லார் வீட்டின் ‘எங்கவீட்டுப்பிள்ளை’ வியப்பது ஆச்சரியம்தான்.

‘அப்புறம் சார்... ஒவ்வொரு தடவை இடம் மாறும் போதும் நீங்க ஷர்ட்ஸை மாத்திக்கிட்டா நல்லாருக்கும் சார்’ என்றோம். யோசித்தார். சரியென்றார். ‘நான் ரெடிங்க.... நீங்க ஓகேயா?’ என்றார். ஓகே சார் என்றோம்.

அந்த நிமிடம் தொடங்கி, அடுத்த நான்கரை மணி நேரங்கள், ‘இந்து தமிழ் திசை’க்காக முழுவதுமாக ஒப்படைத்தார் பாக்யராஜ்.

‘அவரு போன் பண்ணினாரு’, ‘இவரு லைன்ல இருக்காரு’, ‘உங்களைப் பாக்கணும்னு அவங்க வந்திருக்காங்க’ என்கிற எந்தக் குறுக்கீடுகளும் இல்லை. எவருடனும் போன் பேச்சு, குடும்பத்தாருக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் என எதுவுமில்லை. அவரிடம் இருந்து இதையும் கற்றுக்கொள்ளவேண்டும். ’வணக்கம் சார்... முதல் படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ டைரக்ட் பண்ணி 40வது வருஷம் சார். ‘இந்து தமிழ் திசை’ சார்பா, ஓர் சின்ன நினைவுப்பரிசு’ என்று வழங்கினோம். அதை ஆர்வத்துடன் வாங்கி, ஆசையுடன் பார்த்தார்.

‘’சார்... ‘16 வயதினிலே. உங்கள் டைரக்டர் பாரதிராஜாவுக்கு முதல் படம். அதேபோல் உதவி இயக்குநராக உங்களுக்கும் முதல் படம். ஆனால், ‘ஏழை பணக்காரன்’ என்ற படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்து பணியாற்றினீர்கள். அந்தப் படம் எடுக்கப்படவே இல்லை. ஒருவேளை, அந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தால், வேற ரூட் பிடித்து, வேறொரு ஸ்டைல் இயக்குநராகி இருப்பீர்களா சார்?’ என்று கேட்டேன்.

‘அப்படின்னு சொல்லமுடியாது. நாம வரணும்னு நினைச்சு, நமக்கு எழுதப்பட்டிருந்தால், நாம சின்சியரா உழைக்கிறோம்னு சொன்னா, அதுதான் நடக்கும். சிலசமயங்கள்ல, நாம எந்த டைரக்டர்கிட்ட போய்ச் சேர்றோமோ அந்த டைரக்டரோட சாயல் வர்றதுக்கான வாய்ப்பு இருக்கு. ஆனா எங்க டைரக்டரோட சாயல் என் படங்கள்ல இல்ல.
அதுல பாத்தீங்கன்னா... அவரோட டேஸ்ட் வேற. எங்க டைரக்டர் (பாரதிராஜா) எதையும் சீரியஸாச் சொல்லணும்னு நினைப்பாரு. ஆனா நான் எல்லாத்தையுமே லைட்டா சொல்லணும்னு விரும்புறவன்.

* இயக்குநர் பாரதிராஜாவிடம் இருந்து வந்து படமெடுத்த முதல் டைரக்டர் நீங்கள். அவரிடம் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?

‘’ஒரு காட்சியை எப்படிஎடுக்கணும், எங்கே கேமிரா வைக்கணும். எப்படி நகர்த்திக்கிட்டுப் போகணும்னு டெக்னிக்கலா கத்துக்கிட்டது அவர்கிட்டத்தான். நமக்கு சீன் கன்சீவ் பண்ணத்தெரியும். அந்தக் காட்சிக்கு எப்படியெல்லாம் ஷாட் பிரிச்சு, சீன் எடுக்கமுடியும்னு அவர்கிட்டேருந்துதான் கத்துக்கிட்டேன்.

ஸ்கிரிப்ட் நாலெட்ஜ்ங்கறது, நாம சினிமா பாக்கறதுலயும் யோசிக்கறதுலயும் வந்துரும். ஆனா, ஒரு சீன்... அதுக்கு எப்போ க்ளோஸப், எதுக்காக லாங் ஷாட்னெல்லாம் பார்த்துப் பார்த்துப் பண்ணனும். ஒரு டைரக்டருக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும்.

இது தெரியாமப் போச்சுன்னா, நல்லாருக்காது. நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க... ‘அவரு கதை சொல்லும் போது பிரமாதமாத்தான்யா சொன்னாரு. ஆனா, படமா எடுக்கும் போது சொதப்பிட்டாருய்யா’ன்னு சொல்லுவோம். இதான் காரணம். டெக்னிக்கல் நாலெட்ஜ் கொஞ்சமாவது இருக்கணும். அதை எங்க டைரக்டர்கிட்டதான் கத்துக்கிட்டேன்.
என்னோட படங்கள்ல, ஒரு சீன் எல்லாருக்கும் பிடிச்சதுன்னா அதுக்கு என்ன காரணம். நான் நினைச்ச ஒரு சீன்... அதை ஷாட்டா டிவைட் பண்ணி, ஆடியன்ஸுக்கு சரியா கன்வே பண்ணினதுதான் காரணம். இந்த இடத்துல சிரிப்பாங்க. இந்த சீனுக்கு கைத்தட்டுவாங்க. இந்த சீன்ல ‘அச்சச்சோ’ன்னு சொல்லுவாங்கன்னு நினைச்சு, அதைக் காட்சியா கொண்டு வந்தேன். ஜனங்களும் ரசிச்சாங்க. அதுக்கெல்லாம் காரணம் எங்க டைரக்டர்தான்’’.

’’குரு மரியாதைக்கு உதாரணமாக உங்களைச் சொல்லலாம். பாரதிராஜா மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கிறீர்களோ அந்த அளவுக்கு இயக்குநர் பிவி.பாலகுரு மீதும் அப்படியொரு மரியாதை வைத்திருக்கிறீர்கள். அதை நிறைய முறை உணர்ந்திருக்கிறோம்’’

‘’பாலகுரு சார்தான் என்னை பாரதிராஜா சாரிடம் சேர்த்துவிட்டார். சினிமால சேரணும்னு வந்தப்ப, அழகுராஜ்ங்கறவர் மூலமா தூயவன் சார் பழக்கம் கிடைச்சிச்சு. தேவர் பிலிம்ஸ் கதை இலாகால இருந்தவர் இவர். அங்கேதான் கலைஞானம் உட்பட பல பேர் இருந்தாங்க. அவங்களையெல்லாம் தேவர், புது சினிமா ரிலீஸாகும் போது கூட்டிட்டுப் போவார். இங்கிலீஷ் படம், இந்திப்படம்னு பாப்பாங்க. ‘என்னடா... இந்தப் படத்துலேருந்து நம்ம ஊருக்குத் தகுந்த மாதிரி ஏதாவது சீன் வைக்கமுடியுமா, நல்லாருக்கா?ன்னு கேப்பார்.

ஆக அங்கே இருந்த தூயவன் பழக்கமானார். தூயவன் மூலமா ஜி.ராமகிருஷ்ணன் சார் பழக்கம் கிடைச்சிச்சு. இவர்தான் ‘ஏழை பணக்காரன்’ படத்தோட டைரக்டர். அவரோட படத்துக்கு தூயவனைத்தான் வசனகர்த்தாவா போட்ருந்தார். அப்போ, தூயவன் பிஸியாவே இருந்தார். தேவர் பிலிம்ஸ், முக்தா பிலிம்ஸ்னு கதை, டிஸ்கஷன்னு பிஸியாவே இருந்தார் தூயவன். இதைத் தவிரவும் பல படங்கள்... பல கம்பெனிகள்.

அந்த சமயத்துலதான் ஒருநாள்... ‘இந்த சீனுக்கு டயலாக் எழுதுய்யா. அவங்க அவசரம்னு கேக்கறாங்க. நீதான் சினிமா ஆசைல இருக்கறவனாச்சே... எழுது’ன்னு கொடுத்தார். எழுதி நீட்டினேன். ‘நல்லாருக்குய்யா. ஜி.ராமகிருஷ்ணன் வந்து கேட்டார்னா, நான் தான் எழுதி வைச்சிட்டு, கொடுக்கச் சொன்னேன்னு சொல்லிரு’ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

ஜி.ராமகிருஷ்ணன் வந்தார். தூயவன் கொடுக்கச் சொன்னார்னு சொல்லி, டயலாக்கை வாசிச்சுக் காட்டினேன். தூயவனுக்கு போன் போடச் சொன்னார். ‘இது யார் எழுதினது?’ன்னு கேட்டார். ‘யார் எழுதினா என்ன? நல்லாருக்குல்ல... வைச்சுக்கோ’ன்னார் தூயவன். ‘அட... அது இல்லய்யா. நீயோ பிஸியா இருக்கே. உன் உதவியாளர் தெளிவாத்தான் இருக்கார். ‘ஏழை பணக்காரன்’ படத்துக்கு கூடவே இருந்தார்னா, பெரிய உதவியா இருக்கும்’ என்றார்.

உடனே தூயவன், ‘தாராளமா. அவனும் வேலையில்லாமத்தான் இருக்கான். பயன்படுத்திக்கோங்க’ என்று சொல்ல... ஜி.ராமகிருஷ்ணன் படத்தில் வேலை செய்யச் சென்றேன்.

முத நாள் ஷூட்டிங் நடந்துச்சு. ரெண்டாம் நாள்... சில காரணங்களால ஷூட்டிங் நின்னுருச்சு. பொசுக்குன்னு போச்சு மனசு.

அங்கேதான், பி.வி.பாலகுரு அண்ணனை முதன் முறையாப் பாத்தேன். உதவி டைரக்டரா இருந்தார். நான் பேசுறது, டிஸ்கஷன்ல சொல்றதெல்லாம் பிடிச்சுப் போச்சு அவருக்கு.

படம் டிராப் ஆகிட்டதால, எங்க டைரக்டர்கிட்ட சேர்ந்துட்டாரு பாலகுரு அண்ணன். அப்புறம்... ‘என்னையும் சேர்த்துவிடுங்கண்ணே’ன்னு பாலகுரு அண்ணன் வீட்டுக்கு நடையாய் நடந்துகிட்டிருந்தேன். அப்புறம் அவரும் டைரக்டர்கிட்ட சொல்லிருந்தார்.

ஒருநாள்... பாலகுரு அண்ணனைப் பாக்க போயிருந்தேன். அப்போதான் டைரக்டரை முதன்முதலா சந்திச்சேன். அப்போ, எனக்கு அவர்தான் டைரக்டர்னு தெரியாது. சரி... இங்கிலீஷ்ல பேசினாத்தான் ஸ்டைலா இருக்கும்னு பேசினேன். டைரக்டரும் இங்கிலீஷ்ல பேசினார். எல்லாம் பேசி முடிச்சதும்... ‘யாரோ ஒரு பையன், அவனை அஸிஸ்டெண்ட் டைரக்டரா சேத்துக்குங்கன்னு பாலகுரு சொன்னாரே...’ன்னு டைரக்டர் சொல்ல... உடனே பதறிப் போன நான்... ‘அது நான் தான் சார்... நான் தான் சார்’ என்றேன்.

நான் பேசியது, தயக்கம் இல்லாமல் பழகியது எல்லாமே டைரக்டருக்குப் பிடிச்சிருச்சு. என்னை உதவி டைரக்டரா சேர்த்துக்கிட்டார். ‘படிச்ச பயலா இருக்கான். இங்கிலீஷ் வேற பேசுறான்’ன்னு டைரக்டர் சொல்லிட்டிருந்தார்.

ஆனா, நான் வெறும் பியுசிதான்னு அவருக்குத் தெரியாது. அதேபோல, எங்க டைரக்டர் பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கார்னு நான் நினைச்சேன். ஆனா அவரும் பெரிய படிப்பெல்லாம் படிக்கல. ரெண்டுபேருக்குமே இங்கிலீஷ் கேள்விஞானம்தான்னு அப்புறம்தான் தெரிஞ்சுக்கிட்டோம்’’ என்று சொல்லிச் சிரித்தார் பாக்யராஜ்.

*தமிழ் சினிமாவில், கண்ணாடி போட்ட முதல் ஹீரோ, அநேகமாக நீங்களாகத்தான் இருப்பீர்கள். இந்த தைரியம் எப்படி வந்தது?
* கண்ணாடி என் பிராண்டாவே ஆகிருச்சு.
*சண்டைக் காட்சின்னா, கண்ணாடி, வாட்ச்சையெல்லாம் கழற்றி... அதுக்கு கைத்தட்டல்
* அந்த ‘ஆர்’ மோதிரம்...?
இன்னும் கேள்விகளும் பாக்யராஜின் பதில்களும்...
18.10.19 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும்.

கே.பாக்யராஜ் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு அளித்த வீடியோ பேட்டியைக் காண:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x