Published : 15 Oct 2019 06:00 PM
Last Updated : 15 Oct 2019 06:00 PM

விஜய்யைத் தொடர்ந்து ஷாரூக் கான்: இயக்குநர் அட்லீ முடிவு

'பிகில்' படத்தைத் தொடர்ந்து ஷாரூக் கான் நடிக்கும் படத்தை இயக்க அட்லீ முடிவு செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

விஜய் நடித்துள்ள 'பிகில்' படத்தை இயக்கியுள்ளார் அட்லீ. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. தற்போது இந்தப் படத்தின் தணிக்கைப் பணிகள் முடிவடைந்துவிட்டாலும், என்ன சான்றிதழ் என்ற விவரம் வெளியாகவில்லை.

நயன்தாரா, இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப், கதிர், வர்ஷா பொல்லாமா, டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். முழுக்க பெண்கள் ஃபுட்பால் அணியை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே, அட்லீயின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்துப் பேசினார் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் ஷாரூக் கான். அந்தச் சமயத்தில் 'பிகில்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் ஷாரூக் கான். அதனால்தான் சந்தித்தார் என்று தகவல் வெளியானது. ஆனால், படக்குழு அதனை மறுத்தது.

மேலும், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஷாரூக் கானின் கொல்கத்தா அணி விளையாடியபோது ஷாரூக் கானுடன் அமர்ந்து அட்லீ அந்தப் போட்டியைக் கண்டு ரசித்தார். இந்தச் சந்திப்பு அனைத்துமே ஷாரூக் கான் அடுத்த படத்துக்கானது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

'ஜீரோ' படத்தின் படுதோல்விக்குப் பிறகு, எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார் ஷாரூக் கான். அந்தச் சமயத்தில் அட்லீ ஒரு கதையைக் கூற, அவருக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. உடனடியாக அடுத்ததாக இந்தப் படம் இருக்கட்டும் என்ற முடிவெடுத்துள்ளார் ஷாரூக் கான்.

'பிகில்' பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டு, சில நாட்கள் ஓய்வெடுக்கவுள்ளார் அட்லீ. அதனைத் தொடர்ந்து ஷாரூக் கான் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படம் அவரது 'தெறி' மற்றும் 'மெர்சல்' ஆகிய படங்களில் ஏதேனும் ஒன்றின் ரீமேக்காக இருக்கும் என சிலர் தகவல்களை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரித்த போது, இந்தக் கதை ஷாரூக் கானுக்காகவே அட்லீ எழுதியது என்று தெரிவித்தார்கள்.

ஷாரூக் கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. அடுத்த ஆண்டு இந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டு, ஆண்டு இறுதியில் படத்தை வெளியிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x