Published : 14 Oct 2019 01:04 PM
Last Updated : 14 Oct 2019 01:04 PM

மக்களைத் திரையரங்குக்கு வரவழைக்கும் யுக்தி: சீனு ராமசாமி யோசனை

மக்களைத் திரையரங்குக்கு வரவழைக்கும் யுக்தி தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமி யோசனை தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சீனு ராமசாமி. 2007-ம் ஆண்டு 'கூடல் நகர்' படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

'நீர்ப்பறவை', 'தர்மதுரை', 'கண்ணே கலைமானே' ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தை இயக்கியுள்ளார். இதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே தனது அடுத்த படத்துக்கான முதற்கட்டப் பணிகளையும் கவனித்து வருகிறார் சீனு ராமசாமி.

நேற்று (அக்டோபர் 13) சீனு ராசாமியின் பிறந்த நாளாகும். இதற்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சீனு ராமசாமியை நேரில் சந்தித்து தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து தனது பிறந்த நாள் பகிர்வாகத் தனது ட்விட்டர் பதிவில், "ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம், பாதி விலைக்கு பாப்கார்ன், இலவச பார்க்கிங் என சிறிய பட்ஜெட், புதுமுகங்கள் நடிக்கும் படங்களுக்கு சலுகைகள் அறிவித்தால் அது பெரும்பாலான மக்களைத் திரையரங்குக்கு வரவழைக்கும். நல்ல ஆரம்ப வசூல் கிடைக்கும். நல்ல சினிமாவும், நல்ல திறமைகளும் வளர இது உதவியாக இருக்கும். இன்றைய நாளில் எனது விருப்பம் இது" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x