Published : 14 Oct 2019 10:10 AM
Last Updated : 14 Oct 2019 10:10 AM

'டெடி' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடக்கம்

ஆர்யா - சயீஷா இணைந்து நடித்து வரும் 'டெடி' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

'டிக்:டிக்:டிக்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கத் தொடங்கினார் இயக்குநர் சக்தி செளந்தரராஜன். திருமணத்துக்குப் பிறகு ஆர்யா - சயீஷா இருவரும் நாயகன் - நாயகியாக நடித்து வரும் படம் இது. முன்பாக, 'காப்பான்' படத்தில் இருவரும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதில் சூர்யாவுக்கு ஜோடியாக சயீஷா நடித்தார்.

'டெடி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சதீஷ், கருணாகரன் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். டி.இமான் இசையமைக்க, யுவா ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி சரவணன் ஸ்டண்ட் மாஸ்டராகவும், சிவநந்தீஸ்வரன் எடிட்டராகவும் பணியாற்றுகின்றனர்.

மே 23-ம் தேதி படத்துக்குப் பூஜை போடப்பட்டு, ஐரோப்பாவில் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது. அதற்குப் பிறகு அவ்வப்போது படப்பிடிப்பு நடைபெற்றாலும், எப்போது படப்பிடிப்பு நிறைவடையும் என்பதே தெரியாமல் இருந்தது.

தற்போது, படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதை சயீஷா தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக, "உயர்ந்த மனிதரும் அற்புதமான இயக்குநருமான சக்தி சௌந்தரராஜனுடன் 'டெடி' படத்தின் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் படத்தை நீங்கள் அனைவரும் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார் சயீஷா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x