Published : 13 Oct 2019 01:09 PM
Last Updated : 13 Oct 2019 01:09 PM

’ஒற்றர் மூலமா தகவல் வந்துச்சுன்னு கமல் சொன்னார்’  - பாக்யராஜின் ‘கைதியின் டைரி’ அனுபவங்கள்; பிரத்யேகப் பேட்டி

வி.ராம்ஜி

’ஒற்றர் மூலமா தகவல் வந்துருச்சுன்னு கமல் சொல்லிட்டார்’ என்று எங்கள் டைரக்டர் சொன்னார் என இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், முதலில் இயக்கிய படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’. இந்தப் படம் வெளியாகி 40 வருடங்களாகிவிட்டன.
இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ சார்பில், கே.பாக்யராஜுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
மேலும் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு பாக்யராஜ் பிரத்யேகமாக வீடியோ பேட்டி அளித்தார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:

’ஆக்ரி ரஸ்தா’ படத்தின் தயாரிப்பாளர் பூர்ணசந்திர ராவ், எனக்கு நல்ல நண்பர். என்னுடைய ‘மெளனகீதங்கள்’ உள்ளிட்ட பல படங்களின் உரிமைகளை வாங்கி, இந்தியில் படமெடுத்தார். என்னிடம் நீண்டகாலமாகவே, இந்தியில் ஒரு படம் இயக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
ஆனால் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. நாம் குடும்பப் படமாக எடுக்கிறோம். அங்கே, வெற்றி பெறுவதெல்லாம் ஆக்‌ஷன், சஸ்பென்ஸ், த்ரில்லர் படங்களாகத்தான் இருக்கின்றன. என்னுடைய ‘மெளன கீதங்கள்’ மாதிரியான படங்களும் வெற்றி பெற்றன என்றாலும் எனக்கொரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.
இந்த சமயத்தில்தான் என் இயக்குநர் (பாரதிராஜா) கொஞ்சம் அப்செட்டில் இருந்தார். கமல் நடித்து, அவர் எடுத்த படம் ‘டாப்டக்கர்’ என டைட்டில் வைத்து ஆரம்பித்ததாக ஞாபகம். அந்தப் படம் வளர்ந்துகொண்டிருக்கும் போதே, டைரக்டர் சாருக்கும் கமலுக்கும் ஒரு சந்தேகம். ’இந்தப் படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’ மாதிரியே இருக்கிறது’ என்று யோசித்தார்கள். இதனால் படத்தை அப்படியே நிறுத்திவிட்டு, வேறொரு கதை பண்ணச் சொல்லியிருந்தார் கமல்.
இதேகாலகட்டத்தில், டைரக்டர் சார், ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தைஇந்தியில் எடுக்கும் வேலையில் இருந்தார். தர்மேந்திராவின் மகன் சன்னி தியோல் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென தர்மேந்திரா, ‘இந்தப் படம் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார். ’படத்தில் மொட்டையடிக்க வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொள்ளவேண்டும்’ என்றெல்லாம் இருக்கிறது. என் மகன், இப்போது ஒரு படத்தில் நடித்து, மிகப்பெரிய வெற்றிப்படமாகி, ஆக்‌ஷன் ஹீரோவாகிவிட்டான். இந்த சமயத்தில் இது நன்றாக வராது. கதையை வேண்டுமானால் மாற்றுங்கள். நடிப்பது குறித்து பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார். ’இதுவரை என்ன பணம் தேவையோ அதை எல்லோருக்கும் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டார்.
ஆக, இங்கே கமல் படமும் நிற்கிறது. அங்கே, சன்னி தியோல் படமும் நிற்கிறது. இதில் ரொம்பவே அப்செட்டாக இருந்தார் டைரக்டர் சார். அந்த சமயத்தில் டைரக்டரை மும்பையில் பார்த்தேன். அப்போது பிரவீணா இறந்திருந்த தருணம். ‘முந்தானை முடிச்சு’ ரிலீசாகி, வெற்றிப் படமாக ஓடிக்கொண்டிருந்த நேரம்.
விஷயத்தையெல்லாம் சொன்னார். ‘சரி விடுங்க சார். ஊருக்கு வந்து பார்க்கிறேன்’ என்றேன். ‘ உன் படம் எங்கேயோ போயிருச்சு. இனிமே நீ ப்ரியாகவே இருக்கமாட்டாயே’ என்றார். ‘பரவாயில்ல சார்... வரேன்’ என்றேன்.
அதன்படியே, அப்போது அவர் இருந்த எல்லையம்மன் காலனி வீட்டுக்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டார்கள். பெருங்கூட்டமாகிவிட்டது. பிறகு ஹோட்டலில் ரூம் போட்டு பேசினோம். கதையைக் கேட்டேன். ‘சிகப்பு ரோஜாக்கள்’ மாதிரிதான் கதை இருந்தது.
அன்றிரவு முழுக்க கதை யோசித்துக் கொண்டிருந்தேன். மறுநாள்... ஒரு ஒன்லைன் பிடித்தேன். டைரக்டர் சாரை அழைத்து, கதையைச் சொன்னேன். ரொம்பவே பிடித்துவிட்டது அவருக்கு. கமலுக்கு போன் செய்தார் டைரக்டர். உடனே கமல், ‘நேற்றே எனக்கு ஒற்றர் மூலமாக பாக்யராஜ் கதை பண்ணும் தகவல் வந்துவிட்டது. பாக்யராஜ் கதை பண்ணுகிறார் என்றதுமே இது சரியா வரும் என்று தெரிந்துவிட்டது. அவரை முழுக்கதையும் பண்ணச் சொல்லுங்க. ஷூட்டிங் போவதற்கு ஒருவாரம் முன்பு, கேரக்டரை எப்படிச் செய்யலாம் என்பதற்காக கதையைக் கேட்கிறேன் என்றார்.
கமல் சொன்னதை டைரக்டர் சொன்னார். உடனே கதையும் திரைக்கதையும் ரெடி செய்தேன். அதுதான் ‘ஒரு கைதியின் டைரி’. டைரக்டர் சார் இயக்கி, கமல் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தக் கதை படமாகிக்கொண்டிருக்கும் போதே, நான் இந்தக் கதையை இந்தியில் இயக்கத் தயாரானேன். அதில் அமிதாப் நடித்தார். அதுதான் ‘ஆக்ரி ரஸ்தா’.
இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்தார்.


கே.பாக்யராஜின் வீடியோ பேட்டியைக் காண:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x