Published : 11 Oct 2019 08:53 PM
Last Updated : 11 Oct 2019 08:53 PM

ஆக்‌ஷன் கலந்த குடும்பப் படமாக இருக்கும்: 'தலைவர்168' படம் குறித்து இயக்குநர் சிவா பேட்டி

'தலைவர்168' ஆக்‌ஷன் கலந்த குடும்பப் படமாக இருக்கும் என்று இயக்குநர் சிவா பேட்டியளித்துள்ளார்.

'விஸ்வாசம்' படத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் நாயகன் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கு முன்பு போட்ட ஒப்பந்தத்தின்படி சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க சிவா கையெழுத்திட்டார்.

ஆனால், 'தர்பார்' படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவும் சிவாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஏனென்றால், 'விஸ்வாசம்' படம் பார்த்துவிட்டு சிவாவை அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்தக் கூட்டணியின் படத்தைத் தயாரிக்க சன் பிக்சர்ஸும் பேச்சுவார்த்தையில் இறங்கியது.

இறுதியில், இன்று (அக்டோபர் 11) ரஜினி - சிவா - சன் பிக்சர்ஸ் கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் சிவா அளித்த பேட்டியில், "ரொம்ப சந்தோஷமாக நிறைவாக இருக்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்கிறேன். ரஜினி - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. வரும் வாரத்தில் ரஜினியுடன் நடிக்கவுள்ளவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது அறிவிக்கப்படும். அதற்கான தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில்தான் படப்பிடிப்பு நடக்கும்.

ரொம்ப ஜனரஞ்சகமான, சந்தோஷமான குடும்பப் படமாக இது இருக்கும். ரஜினி சாரை சின்ன வயதிலிருந்தே எனக்குப் பிடிக்கும். நான் அவரது தீவிரமான ரசிகன். அவரை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கண்டிப்பாக அனைவரும் சந்தோஷப்படும் படமாக இது இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எனக்கு குடும்ப உறவுகளும், அதைச் சுற்றியிருக்கக் கூடிய சந்தோஷங்களும் ரொம்பப் பிடிக்கும். ஆகையால், கண்டிப்பாக இது குடும்பப் படம்தான். ஆக்‌ஷன் அதிகமாக இருக்கும். ஆக்‌ஷன் கலந்த குடும்பப் படம் என்று சொல்லலாம். ரசிகர்கள் கொண்டாடக் கூடிய படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x