Published : 09 Oct 2019 11:12 AM
Last Updated : 09 Oct 2019 11:12 AM

'முஃப்தி' கைவிடப்படுகிறதா? சிம்புவுக்குத் தொடரும் சிக்கல்!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'முஃப்தி' படம் கைவிடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து ஹன்சிகாவின் 50-வது படமான 'மஹா' மற்றும் 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. இடையே 'மாநாடு' படத்திலிருந்து சிம்புவை நீக்கியது படக்குழு. தற்போது 'முஃப்தி' தமிழ் ரீமேக்கிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'முஃப்தி'. ஷிவ ராஜ்குமார், ஸ்ரீமுரளி நடித்த இந்தப் படத்தை நார்தன் இயக்கியிருந்தார். இதற்குக் கிடைத்த வரவேற்பால், இதன் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. ஸ்ரீமுரளி நடித்த கதாபாத்திரத்தில் கெளதம் கார்த்திக்கும், ஷிவ ராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவும் நடிக்கப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இதன் படப்பிடிப்பு பெங்களூருவைத் தாண்டி தொடங்கப்பட்டது. கன்னடப் படத்தை இயக்கிய நார்தனே தமிழ் ரீமேக்கை இயக்கி வந்தார். அங்கும் சிம்பு சரியாகப் படப்பிடிப்பு வருவதில்லை, வந்தாலும் 4 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் இருந்துள்ளார் எனப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் சில நாட்களிலேயே முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு.

இதற்குப் பிறகு அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக எப்போது தேதிகள் கொடுப்பார் சிம்பு என்று காத்திருந்தது படக்குழு. தேதிகள் தராமல் படத்துக்காகக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்திலும் சிம்பு கையெழுத்திட்டுத் தராமல் இழுத்தடிப்பதாகவும் கூறுகிறார்கள். இந்தப் படம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இணைத்து புகார் கடிதமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ளார் ஞானவேல் ராஜா.

சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதால், இந்தப் படத்தைக் கைவிடவும் ஆலோசனை நடைபெற்றுள்ளது. ஏனென்றால், தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே வந்ததால் இயக்குநர் நார்தனும் புதிய படத்தின் பணிகளைத் தொடங்கிவிட்டார். ஆகையால், இனி 'முஃப்தி' தமிழ் ரீமேக் நடப்பது சந்தேகமே என்கிறார்கள் திரையுலகில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x