Published : 08 Oct 2019 07:18 PM
Last Updated : 08 Oct 2019 07:18 PM

பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: ராய் லட்சுமி

தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ராய் லட்சுமி கூறியுள்ளார்.

'கற்க கசடற' என்ற தமிழ்ப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி ராய். இவர், பிறகு தன் பெயரை ராய் லட்சுமி என்று மாற்றிக்கொண்டார். 'தர்மபுரி', 'தாம்தூம்', 'காஞ்சனா', 'அரண்மனை', 'சவுகார்பேட்டை' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் ராய் லட்சுமி நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் ராய் லட்சுமி நடித்துள்ளார். தற்போது தமிழில் 'சிண்ட்ரெல்லா' படத்திலும் கன்னடத்தில் 'ஜான்ஸி' படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ராய் லட்சுமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ''பெண்களுடன் பணிபுரிவது ஆண்களுக்கு சவுகரியமாக இல்லை என நினைக்கிறேன். உதாரணத்துக்கு, ஒரு பெண் ஒளிப்பதிவாளர் பணிபுரிவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இயக்குநர் ஆணாக இருந்தால் அவர் அந்த படப்பிடிப்புத் தளத்தில் பேசும் விஷயங்களில் பல கட்டுப்பாடுகள் இருக்கும்.

பெண்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இருக்க இன்னும் சில காரணங்கள் உள்ளன. அது பெரிய காரணம் அல்ல. ஆனால் துறையில் உள்ளவர்கள் எப்போதும் அவர்களுக்கு சவுகரியமான ஒரு சூழலிலேயே இருக்க விரும்புவார்கள். ஒரு பெண் அங்கு நுழைந்துவிட்டால் அவரைக் கட்டுப்படுத்த முடியாது என ஆண் நினைக்க ஆரம்பித்துவிடுவார். பிறகு அந்த வேலை செய்யுமிடம் யதார்த்தமாக இருக்காது.

ஆண்களின் சிந்தனையும் பெண்களின் சிந்தனையும் என்றும் ஒத்துப்போகாது. பல ஆண்களுக்கு பெண்கள் சரியென்று ஒப்புக்கொள்ள முடியாது. அது ஆண்களுக்குள் இயல்பாக இருக்கும் ஈகோ. இருந்தாலும் சில இயக்குநர்களுக்கு அவர்களின் மீதும், அவர்கள் கலையின் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் பெண்களுடன் பணிபுரிந்து அவர்களின் படத்துக்கு புதிய சுவையைச் சேர்க்க முடியும்'' என்றார் ராய் லட்சுமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x