Published : 08 Oct 2019 07:03 PM
Last Updated : 08 Oct 2019 07:03 PM

வெற்றிமாறனின் படங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன: நடிகர் பசுபதி பேட்டி

சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியபாளையத்தில் வசிக்கிறார் நடிகர் பசுபதி. தனக்கு கூட்டத்தைப் பார்த்தால் பதட்டமாகிவிடும் என்றும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழிலிலும் சரி தனக்கென ஒரு தனி இடம் வேண்டும் என்று விரும்புவாராம். தற்போது அசுரனில் முருகேசன் என்ற கதாபாத்திரத்தில் தனுஷின் தெய்வ மச்சனாக நடித்திருக்கும் பசுபதி விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.

இதற்கு முன் வெற்றிமாறன் 'பொல்லாதவன்' (கிஷோரின் கதாபாத்திரம்) மற்றும் 'வடசென்னை' (சமுத்திரக்கனி அல்லது டேனியல் பாலாஜியின் கதாபாத்திரம்) படங்களில் பசுபதியை நடிக்கக் கேட்டிருக்கிறார். ஆனால் அப்போது பசுபதியால் நடிக்க முடியாத நிலையில் தற்போது அசுரனில் தான் நடித்தது விதிக்கப்பட்டது.

இது குறித்து பசுபதி கூறுகையில், "'சுள்ளான்' படம் படுதோல்வியடைந்ததும் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. பொல்லாதவனில் வெற்றி சொன்னதும் சுள்ளானில் நான் நடித்திருந்த கதபாத்திரத்தை கிட்டத்தட்ட ஒத்திருந்தது. வெற்றி, கதை சொல்லும்போது நான் என் நிலையில் இல்லை. வெற்றி, புதியவர் என்பதால் அவரது பாணியும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

'பொல்லாதவன்' பார்த்த பிறகு வெற்றிமாறன் பற்றித் தவறாகக் கணித்துவிட்டது புரிந்தது. உடனேயே அவரை அழைத்து மன்னிப்பு கேட்டேன். எனக்குப் படம் எவ்வளவு பிடித்தது, நான் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் என்று அவரிடம் கூறினேன்.

வெற்றிமாறன், வசந்தபாலன் போன்ற இயக்குநர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. ஒவ்வொரு நாவலிலும் ஒரு வாழ்க்கைக்கான தேடல் இருக்கும். அதேபோல இந்த இயக்குநர்கள் நல்ல கதைக்கான தேடலில் இருக்கிறார்கள். அதனால்தான் இவர்களின் படங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன. வித்தியாசமாக இருக்கின்றன" என்றார் பசுபதி.

'பொல்லாதவன்' மட்டுமே பசுபதி தவறவிட்ட படம் அல்ல. தியாகராஜன் குமாரராஜவின் ஆரண்ய காண்டத்தில், சம்பத் நடித்த கதாபாத்திரமும் பசுபதி தவறவிட்டதுதான். "அந்தப் படம் எனக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. ஆனால் குமாரராஜா அந்தக் கதாபாத்திரத்துக்கு பசுபதி என்ற எனது பெயரை வைத்திருந்தார்" என்கிறார் பசுபதி.

பசுபதி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தது தற்செயலே. அதற்கு நடிகர் நாசர்தான் முக்கியக் காரணம். 1984லிருந்து 1997 வரை கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றவர் பசுபதி. இயக்குநராக ஆசைப்பட்டு அது குறித்து நாசரிடம் கேட்டிருக்கிறார். அவர் பசுபதியை நடிக்கச் சொல்லியிருக்கிறார்.

"இப்போதெல்லாம் மக்கள் கூத்துப்பட்டறை / நாடகக் குழுக்களில் சேர்வதே சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான். ஆனால் எங்கள் காலத்தில் நிலை வித்தியாசமாக இருந்தது. நாடகக் கலை மீது பெரிய வியப்பு இருந்தது" என்கிறார் பசுபதி.

நாசர் மீது அதிக மரியாதை கொண்டவர் பசுபதி. நாசரும் நாடகக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர். நாசர் மூலமாகத்தான் 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் பசுபதிக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு முன்னரே கமல்ஹாசனின் அறிமுகம் கிடைத்து, அவருடன் 1997ல் மருதநாயகத்தில் ஆரம்பித்து மூன்று படங்களில் பசுபதி வேலை செய்திருந்தார். ஆனால் 2004-ல்தான் 'விருமாண்டி' வெளியானது. அதுதான் பசுபதிக்கு புகழ் வெளிச்சத்தைக் கொண்டு வந்தது.

2003-ல் 'தூள்' படத்தில் நடித்து அதற்காக பலரின் பாராட்டைப் பெற்ற பிறகும் பிறகு எட்டு மாதங்கள் வாய்ப்பின்றி இருந்திருக்கிறார் பசுபதி. 'விருமாண்டி' படம் அறிவிக்கப்பட்டு, கமல்ஹாசன், நெப்போலியனுடன் இருக்கும் போஸ்டர் வெளியானதுமே பல வாய்ப்புகள் பசுபதியைத் தேடி வர ஆரம்பித்துவிட்டன.

"கொத்தாளத் தேவராக யாரும் நடித்திருக்கலாம். ஆனால் கமல் என்னை நம்பி நடிக்க வைத்தார். இத்தனைக்கும் அவர் என்னிடம் நிறைய விவரிக்கவில்லை. கதையைக் சொல்லி என் கருத்தைக் கேட்டார். நான் நன்றாக இருக்கிறது என்று சொன்னதும், 'சரி அடுத்த வாரம் படப்பிடிப்புக்கு வந்துவிடுங்கள்' என்று பதில் சொன்னார்.

அவருடன் வேலை செய்வது நடிப்புக்கான வகுப்பில் இருப்பதைப் போல. வழக்கமாக காட்சியை ஆழமாக விளக்கிவிட்டு நம்மிடம் விட்டுவிடுவார். நடிகர்களை அதிகம் நிர்பந்திப்பவர் அல்ல. அவர்களுக்கான இடத்தைக் கொடுப்பார். ஆனால் சரியான நடிப்பு வரும்வரை நம்மை விடவும் மாட்டார்" என்கிறார் பசுபதி.

'விருமாண்டி'யால் பசுபதிக்கு எதிர்மறையான தாக்கமும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரே மாதிரியான வில்லனாகவே 'அருள்', 'மதுர', 'சுள்ளான்' போன்ற வாய்ப்புகள் வந்தன.

"ஒரு கட்டத்துக்குப் பிறகு அது சோர்வாக இருந்தது. 'விருமாண்டி'க்குப் பிறகு கமல் சாரை சந்தித்து சினிமாவை விட்டுவிட விரும்புவதாகக் கூறினேன். கண்டிப்பாக எல்லாம் சரியாகும் என்று அவர் உறுதியளித்தார். பத்து நாட்களுக்குப் பிறகு 'மும்பை எக்ஸ்பிரஸ்' வாய்ப்பைக் கொடுத்தார்" என்றார் பசுபதி.

வில்லனான கொத்தாளத் தேவனிலிருந்து நகைச்சுவையான 'மும்பை எக்ஸ்பிரஸ்' சிதம்பரம் கதாபாத்திரம் என பசுபதியின் இந்த வழக்கத்துக்கு மாறான பாத்திரத் தேர்வும் நடிப்பும் தான் வசந்தபாலனை ஈர்த்துள்ளது. இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நடுவில் இருக்கும் நிலை அவருக்குத் தேவைப்பட்டது. அப்போதுதான் 'வெயில்' வாய்ப்பு பசுபதிக்கு வந்திருக்கிறது. அந்தப் படம் தனக்குப் புதிய பரிமாணத்தைத் தந்ததாகக் கூறும் பசுபதி, தன்னை பிரதானப் பாத்திரத்தில் நடிக்க வைக்க வசந்தபாலன், தயாரிப்பாளர் ஷங்கருடம் பெரும் போராட்டம் நடத்தினார் என்று கூறுகிறார்.

"'வெயில்' வெற்றி பெற்றாலும் தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. அப்போதுதான் என் நண்பர் ஒருவர் சொன்னார். நீ நாயகனும் அல்ல, வில்லனும் அல்ல, குணச்சித்திர நடிகனும் அல்ல. அதனால் இயக்குநர்களுக்கு உன்னைக் கையாளத் தெரியவில்லை என்றார். ஆனால் விஜய் சேதுபதி நல்ல உதாரணம். அவர் சாதித்துவிட்டார். தன்னை எந்த வகையிலும் அடக்கிவிட முடியாத ஒரு நடிகராக நிரூபித்திருக்கிறார்" என்றார் பசுபதி.

பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் நடித்தும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையா என்று கேட்டால் சிரிக்கும் பசுபதி, "எனது தொழில் நடிப்பது. நான் என் வேலையைச் செய்கிறேன். ரசிகர்கள் அதைக் கொண்டாடவில்லை என்றால் அது அவர்கள் பிரச்சினை. என்னுடையது அல்ல." என்கிறார்.

மலையாள சினிமாவை ஆச்சரியமாகப் பார்க்கிறார் பசுபதி.

"மலையாள இயக்குநர்கள் அவர்களின் சினிமா என்ன என்பதைக் இனம் கண்டுகொண்டுவிட்டார்கள். தமிழ் இயக்குநர்கள் இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். 'உண்டா', 'சுடானி ஃப்ரம் நைஜீரியா' போன்ற படங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. தமிழில் 'சூப்பர் டீலக்ஸ்', 'பரியேறும் பெருமாள்', 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆகியவை பிடித்திருந்தன"

தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடிக்கவுள்ள பசுபதி நடிப்பில் தமிழில் 'அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா' என்ற படம் வெளியாகவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x