Published : 08 Oct 2019 02:30 PM
Last Updated : 08 Oct 2019 02:30 PM

மோகனுக்கு சான்ஸ் கேட்டு அலைந்த மனோபாலா; மனோபாலாவுக்கு டைரக்‌ஷன் வாய்ப்பு தந்த மோகன்! 

வி.ராம்ஜி


நடிகர் மோகனின் ஆரம்பகாலத்தில் அவரை அழைத்துக்கொண்டு, வாய்ப்பு தேடி அலைந்தார் மனோபாலா. அதேபோல், படங்கள் குவியத் தொடங்கிய பிறகு, மனோபாலாவுக்கு டைரக்‌ஷன் வாய்ப்பு வழங்கினார் மோகன்.


நடிகர் மோகன் நடித்த முதல் படம் ‘கோகிலா’. இது கன்னடப்படம். கமல்ஹாசன், ஷோபா, ரோஜாரமணி ஆகியோர் நடித்த இந்தப் படத்தை பாலுமகேந்திரா இயக்கியிருந்தார். 1977 ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ம் தேதி இந்தப் படம் வெளியானது. கிட்டத்தட்ட, படம் வெளியாகி, 42 வருடங்கள் முடிந்து, 43ம் வருடம் தொடங்கிவிட்டது.


இதையடுத்து, மகேந்திரன் இயக்கத்தில் உருவான ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார் மோகன். இதையடுத்து ‘கிளிஞ்சல்கள்’, ‘பயணங்கள் முடிவதில்லை’ என மெல்ல மெல்ல படங்கள் வந்தன. அதன் பின்னர், மிகப்பெரிய ஹீரோவானார் மோகன்.
’கோகிலா’ கன்னடப் படம் பண்ணிய பிறகு, அவருக்கு பட வாய்ப்புகள் அப்படியொன்றும் வரவில்லை. தமிழிலும் படங்கள் பண்ணுவதற்கு வாய்ப்புத் தேடி வந்தார். அப்போது, மனோபாலாவும் ஸ்டில்ஸ் ரவியும் மோகனுக்குப் பழக்கமானார்கள்.


ஒரு கையில் மோகனைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் அவரின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, படக்கம்பெனி ஒன்றுவிடாமல் வாய்ப்பு கேட்டு அலைந்தார்கள் மனோபாலாவும் ஸ்டில்ஸ் ரவியும்! கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் வரத்தொடங்கின. பிறகு மோகன் படங்கள் வரிசையாக வெற்றி அடையத் தொடங்கிற்று.


அந்த சமயத்தில், தன்னை நாடி வரும் தயாரிப்பாளர்களுக்கு மோகன் ஒரு நிபந்தனையை விதித்தார். மனோபாலாவை டைரக்டராகப் போடுவதாக இருந்தால், நான் தொடர்ந்து அந்தப் படத்துக்கு கால்ஷீட் தருகிறேன் என்று தெரிவித்தார். இப்படியொரு ஓபன் ஸ்டேட்மென்ட்டை, மோகன் விடுத்தது குறித்து மனோபாலா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.


அதன் பின்னர், மனோபாலா இயக்குநரானார். அடுத்து, மோகனை ஹீரோவாக்கி, ‘பிள்ளைநிலா’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.


அதேபோல் ஸ்டில்ஸ் ரவி.


திரைப்படங்களில் ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றிய ஸ்டில்ஸ் ரவி, தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்ததை மோகன் மறக்கவில்லை. மோகனுக்கு என தனி மார்க்கெட் திரையுலகில் வரத்தொடங்கிய போது, ஸ்டில்ஸ் ரவியை அழைத்து, ‘நீங்கள் ஒரு படம் தயாரியுங்கள் . மனோபாலா இயக்கட்டும். நான் நடித்துக் கொடுக்கிறேன்’ என்றார்.


அதன்படி, ஸ்டில்ஸ் ரவி படத்தைத் தயாரித்தார். மனோபாலா இயக்கினார். மோகன் நடித்துக் கொடுத்தார். அந்தப் படம்தான் ‘நான் உங்கள் ரசிகன்’.


எல்லோரிடமும் மென்மையாகப் பழகக் கூடியவர் மோகன் என்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு, இயக்குநர்களுக்கு, சக நடிகர்களுக்குப் பிடித்த நடிகராகத் திகழ்ந்தவர் என்று கொண்டாடுகிறார்கள். திரையுலகிற்கு வந்து 42 ஆண்டுகள் நிறைவுற்று, 43ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் மோகன். இன்றைக்கும் ரசிக மனங்களில் நிறைந்திருக்கிறார் மோகன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x