Published : 05 Oct 2019 05:54 PM
Last Updated : 05 Oct 2019 05:54 PM

'சங்கத்தமிழன்' வெளியீடு: விவசாயிக்கு உதவி செய்த விஜய் சேதுபதி ரசிகர்கள்

'சங்கத்தமிழன்' வெளியீட்டை முன்னிட்டு, விவசாயிக்கு உதவி செய்து நெகிழ்ச்சியடைய வைத்துள்ளனர் விஜய் சேதுபதி ரசிகர்கள்.

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நாசர், சூரி, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சங்கத்தமிழன்'. விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தீபாவளிக்கு லிப்ரா நிறுவனம் வெளியிடவுள்ளது. தற்போது இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.

சுபஸ்ரீ மரணத்துக்குப் பிறகு பல்வேறு நடிகர்களும், பட வெளியீட்டின் போது பேனர் வைக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி ரசிகர்களும் பேனர் வைக்காமல் போஸ்டர்கள் அடித்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் தங்களது நடிகரின் பட வெளியீட்டைக் கொண்டாடி வருகிறார்கள். அந்த வரிசையில், விஜய் சேதுபதி ரசிகர்கள் வட்டிக்குப் பணம் கேட்ட விவசாயிக்கு உதவி செய்துள்ளனர்.

சங்கராபுரம் அருகே உள்ள சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப் பணம் இல்லாமல் பிரகாஷ் தவித்து வந்துள்ளார். அப்போது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஜெயமுருகன் என்ற சைக்கிள் கடை உரிமையாளரிடத்தில் தனது விவசாய நிலத்தில் பயிர் செய்ய வட்டிக்குப் பணம் கேட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி விஜய் சேதுபதி ரசிகர் மன்ற இளைஞர்களோ விதைப் பந்துகள், மரச்செடிகள் வழங்கத் திட்டமிட்டனர். அப்போது விவசாயம் செய்யப் பணமில்லாமல் வட்டிக்குப் பணம் கேட்டு வரும் பிரகாஷ் குறித்த தகவல் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற இளைஞர்களுக்குக் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரகாஷை நேரில் சந்தித்து விவசாயத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

அவருக்கு உதவும் வகையில் முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கியுள்ளனர். காய்ந்து கிடந்த நிலத்தை உழவு செய்து, பூஜை நடத்தி, ஏர் உழுது நாற்று நட்டுள்ளனர். மேலும், நெல் பயிரிடத் தேவையான உரம் உள்ளிட்டவற்றையும் விஜய் சேதுபதி ரசிகர்களே வாங்கிக் கொடுத்துள்ளனர். இதனால் விவசாயி பிரகாஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்தச் செயலுக்கு விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x