Published : 30 Sep 2019 06:17 PM
Last Updated : 30 Sep 2019 06:17 PM

'பிகில்' கொண்டாட்டம்: விஜய் ரசிகரின் சீண்டல், திரையரங்க நிர்வாகம் பதிலடி

'பிகில்' படத்துக்கான கொண்டாட்டம் தொடர்பாக விஜய் ரசிகரின் சீண்டல் பதிவுக்கு திரையரங்க நிர்வாகம் பதிலடி கொடுத்துள்ளது.

எப்போதுமே தங்களுடைய நடிகரின் படம் வெளியாகும் நாளன்று, திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள். இதற்கு பல்வேறு திரையரங்குகள் ரசிகர்களைக் கவர்வதற்காகப் பல வழிகளைக் கையாளும். தற்போது இதில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராம் சினிமாஸ் முதலாவதாகத் திகழ்கிறது. ரசிகர்களுக்காக பிரத்யேக வீடியோ, நடிகர்களின் முந்தைய ஹிட் படங்களின் பாடல்கள் என ரசிகர்களை மகிழ்விக்க பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகிறது.

தற்போது தீபாவளிக்கு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பிகில்' வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் 'வெறித்தனம்' பாடலை தங்களுடைய திரையரங்கில் திரையிட்டு, அதற்கான ரசிகர்கள் கொண்டாட்டத்தை சிறு வீடியோவாக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது.

இதற்கு ராம் திரையரங்கின் ட்விட்டர் தளத்தைப் பின் தொடரும் விஜய் ரசிகர் ஒருவர் "படம் வெளியாகும் நாளன்று ஸ்கிரீனைப் பத்திரமாக பாத்துக்கோங்க. நாங்க பொறுப்பில்லைங்க” என்று தெரிவித்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் "நீங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடுங்கள். அதையே நாங்களும் விரும்புகிறோம்.

ஆனால், திரையரங்கு உரிமையாளருக்கு எதிராக நீங்கள் விளையாட்டாகக் கூறும் இந்த வார்த்தை உகந்தது அல்ல. நீங்கள் எப்படி இதற்கு நாங்கள் பொறுப்பாக இயலாது எனக் கூறுகிறீர்களோ அதேபோல் நாங்களும் பொறுப்பாக இயலாது. உற்சாகக் கொண்டாட்டங்களில் கொஞ்சம் கவனம் தேவை பிள்ளைகளே.." என்று ராம் சினிமாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அதிரடிப் பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இதர திரையரங்க உரிமையாளர்களோ இந்தப் பதிவுக்கு வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.

ராம் சினிமாஸ் நிறுவனத்தின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, மற்றொரு ரசிகர், "உங்களுக்குத் தைரியமிருந்தால் ஒரு ரசிகர் மீது கை வைத்துப் பாருங்கள். அப்புறம் திரையரங்கம் என்னவாகும் என்று நாங்கள் காண்பிப்போம்" என்று தெரிவித்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக ராம் சினிமாஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் "யாரோ சிலர் உங்களின் உடைமைகளைச் சேதப்படுத்தப்போவதாகக் கூறுகின்றனர் என வைத்துக் கொள்ளுங்கள்... உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

நாங்கள் எங்களின் ரசிகர்களை நேசிக்கிறோம். அவர்கள் எங்களைக் கொண்டாட முழு சுதந்திரம் அளிக்கிறோம். ஆனால், அதேவேளையில் செல்போனுடன் கொண்டாட வேண்டாம் என்கிறோம். கடந்த மூன்று வாரங்களாக உங்கள் திரைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் போன்ற விமர்சனங்களை அடிக்கடி காண முடிகிறது. இதுவே ஒரு பாணியாகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. ஒரு சில்வர் ஸ்க்ரீனின் விலை பலமடங்கு அதிகம். அதை இறக்குமதி செய்கிறோம்.

ஒரு சின்னக் கீறல் விழுந்தாலும்கூட ஒட்டுமொத்த ஸ்க்ரீனையும் மாற்ற வேண்டும். தளபதி ரசிகர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்களால் இதுவரை இத்தகைய சேதம் வந்ததில்லை. சமூக வலைதளங்களில் கூட அவர்கள் எங்களுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர். ஆதலால் நான் அவர்களைக் குற்றம் சொல்லவில்லை. அந்த மாதிரியான மனப்பாங்கு கொண்ட அந்தக் குறிப்பிட்ட நபர் மீது மட்டுமே என் விமர்சனம். எனது பதில்கள் எல்லா கேள்விகளுக்கும் தீர்வாகியிருக்கும் என நம்புகிறேன்" என்று ராம் திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x