Published : 29 Sep 2019 02:59 PM
Last Updated : 29 Sep 2019 02:59 PM

எனது அனுபவத்தால் ரஜினி, கமலுக்கு அறிவுரை கூறினேன்; உணர்ச்சிகரமான நடிகர்களுக்கு அரசியல் சரிவராது: சென்னையில் நடிகர் சிரஞ்சீவி கருத்து

சென்னை

உணர்ச்சிகரமான நடிகர்களுக்கு அரசியல் சரியாக இருக்காது என்று நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

விரைவில் வெளிவர உள்ள ‘சை ரா நரசிம்மரெட்டி’ படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண், நடிகை தமன்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேசியதாவது:

தமிழகத்தில் கட்டபொம்மன் போல ஆந்திராவில் நரசிம்மரெட்டி. இந்த படம் தேசிய அளவில் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்பதால்தான் அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், விஜய் சேதுபதி என பல்வேறு நட்சத்திரங்களை நடிக்க வைத்தோம். உண்மையான வரலாற்றில், நரசிம்மரெட்டிக்கு ராஜ பாண்டி என்ற தமிழர் உதவி செய் துள்ளார். அதனால்தான் விஜய் சேதுபதியை அதில் நடிக்க வைத்தோம்.

1847-ல் பல போராட்டங்கள் நடந்தாலும் ஆங்கிலேயரை எதிர்த்து முதலில் போர் அறிவித்தது நரசிம்ம ரெட்டிதான். 1857-ல்தான் முதல் சுதந் திரப் போராட்டம் நடந்தது. அதனால் தான் அவரை முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என்கிறோம்.

‘அரசியலில் இருப்பது மதிப்புக்கு உரியது அல்ல. எனவே, ரஜினி, கமல் அதில் இருக்க வேண்டாம்’ என்று சமீபத்தில் கூறினேன். அது என் தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து சொன்னதுதான். நாமெல்லாம் நடிகர்கள். மிகவும் உணர்ச்சிகரமான வர்கள். அதுபோன்றவர்களால்தான் கலைத் துறையில் தொடர்ந்து சிறப்பான படைப்புகளைக் கொடுத்து நிலைத்து இருக்க முடியும்.

அரசியலில் நன்றி என்பதே கிடையாது. தவறே செய்யாமல் இருந்தாலும் நம் மீது சேற்றை வாரி இரைப்பார்கள். நம் நற்பெயரைக் கெடுப்பார்கள்.

திருப்பதி தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்தேன். ஆனால், எதிர்க்கட்சியில் இருந்த ஒரு பெண்மணி, கேமராவை பார்த்தால் என்னைப் பற்றி தவறாகப் பேசி திட்டி, கத்த ஆரம்பித்துவிடுவார். கேம ராவை அணைத்துவிட்டால் என்னிடம் வந்து, ‘‘சார் நான் உங்க ரசிகை. ஒரு ஃபோட்டோ எடுக்க வேண்டும்’’ என்பார். சினிமாவில் ராஜா மாதிரி வாழ்ந்துவிட்டு, அரசியலுக்குப் போக வேண்டுமா என்று யோசனை வந்தது.

இப்போது அரசியல் வியாபாரம் போல ஆகிவிட்டது. பணத்தைச் சுற்றிதான் எல்லாம் நடக்கிறது. யார் வர வேண்டும், வரக்கூடாது என்பதை பணம்தான் முடிவு செய்கிறது.

இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x