Published : 27 Sep 2019 07:36 PM
Last Updated : 27 Sep 2019 07:36 PM

முதல் பார்வை: நம்ம வீட்டுப் பிள்ளை

அப்பா இல்லாத மகன், தன் தங்கையின் மீது அதிக பாசம் வைத்துள்ளார். அந்த தங்கையின் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை வரும் போது என்ன செய்கிறார் என்பதே 'நம்ம வீட்டுப் பிள்ளை'.

சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் சிவகார்த்திகேயன். அம்மா அர்ச்சனா, தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ், தாத்தா பாரதிராஜா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். தன் அப்பாவுடன் பிறந்தவர்களான வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு, ஆதிரா ஆகியோரின் ஆதரவில்லாமல் இருக்கிறார். தங்கை ஐஸ்வர்யா ராஜேஷை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க நினைக்கும் போது நின்று விடுகிறது. அப்போது சிவகார்த்திகேயனுடன் இருக்கும் முன்பகையை மனதில் வைத்து ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து பழிவாங்க நினைக்கிறார் நட்டி. அது என்ன பகை, சிவகார்த்திகேயன் தன் குடும்பப் பிரச்சினைகளை எப்படிச் சரி செய்கிறார், தங்கைக்குப் பிரச்சினை என்றவுடன் சிவகார்த்திகேயன் எடுக்கும் முடிவு என்ன என்பதே படத்தின் கதை.

தனது முந்தைய படமான 'கடைக்குட்டி சிங்கம்' பாணியிலேயே படத்தின் துவக்கம் இருந்தாலும், அதன் பின் அண்ணன் - தங்கை பாசம் என தடம் மாறுகிறது. அண்ணன் - தங்கை பாசம், பெரியப்பா, சித்தப்பா குடும்ப உறவுகளுக்குள் வரும் சிக்கல்கள், தங்கை கணவருக்கு வரும் சிக்கல் என கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். ஆனால், இன்னும் கொஞ்சம் கூடுதம் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு முழுமையான படம் பார்த்த திருப்திக் கிடைத்திருக்கும்.

கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்துக்குச் சரியாக பொருந்தியுள்ளார் சிவகார்த்திகேயன். அப்பா இல்லாததால் குடும்பத்தை கவனித்துக் கொள்வது, அம்மாவின் மனம் நோகாமல் எடுத்துச் சொல்வது, தங்கையின் மீதிருக்கும் அளவு கடந்த பாசம், பெரியப்பா உறவுகளுக்காக ஏங்குவது, மாமன் மகள் மீது காதல், தங்கையை அடித்த அவர் கணவரிடம் கோபம் கொள்வது, தங்கை கணவர் செய்த தவறுக்காக எடுக்கும் முடிவு என சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த இடத்துக்கு நகர்ந்துள்ளார்.

தங்கையாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இது முக்கியமான படம். அண்ணன் மீது பாசம், கணவரை நம்பி ஏமாறுவது, அண்ணனுக்காகக் கணவரிடம் சண்டையிடுவது என நடித்து அப்ளாஸ் அள்ளுகிறார். வழக்கமாகத் தமிழ் சினிமாவில் உள்ள அண்ணன் - தங்கை காட்சிகள் தான் இந்தப் படத்திலும் உள்ளது. ஆனால், சிவகார்த்திகேயன் - ஐஸ்வர்யா ராஜேஷின் எதார்த்தமான நடிப்பு நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு தாத்தாவாக பாரதிராஜா. பேரனுக்காக ஏங்குவது, மகன் திட்டியவுடன் பேரனுடன் கோபமாகக் கிளம்புவது என பொருத்தமான தேர்வு. 'சொந்தத்துகிட்டயே தோத்து போகணும்னு நினைக்கிறவனை யாராலயும் ஜெயிக்க முடியாது' என்ற பேரனுக்காக பேசும் வசனம் எதார்த்தம்.

அம்மாவாக அர்ச்சனா, காதலியாக அனு இம்மானுவேல், பெரியப்பாவாக வேலராமமூர்த்தி, சித்தப்பாவாக சுப்பு பஞ்சு, மாமாவாக சண்முகராஜன், வில்லனாக நட்டி, 'ஆடுகளம்' நரேன், ஷீலா, அருந்ததி எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. அனைவருமே தங்களது கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள். சிவகார்த்திகேயனுக்கு அண்ணனாக சூரி, சூரியின் மகனாக நடித்துள்ள பாண்டிராஜின் மகன் அன்புக்கரசு இருவருமே காமெடிக்கு உதவியிருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் - சூரி இருவருடனே பயணிக்கும் அன்புக்கரசு அடிக்கும் ஒன்லைனுக்கு தியேட்டரில் அவ்வளவு சிரிப்பு. அதிலும் ஒவ்வொரு காட்சியிலும் அவரை சரியான இடத்தில் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.

இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும் படத்தின் மைனஸ் என்னவென்றால், பிரதான கதாபாத்திரங்களுக்கான பிரச்சினை என்பது கடைசி 30 நிமிடங்களுக்கு முன்பு தான் திரையில் திடீரென வருகிறது. பரபரவென உடனடியாகத் தீர்வு சொல்லி சுபம் போட்டு முடித்துவிடுகிறார்கள். அதிலும் அந்தப் பிரச்சினையைச் சரி செய்ய சிவகார்த்திகேயன் எடுக்கும் முடிவு பெரிதாக ஈர்க்கவில்லை. அதே போல் தேவையின்றி படத்தில் வரும் காதல் காட்சிகளும், பாடல்களும் ஒட்டவே இல்லை. சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்துள்ள சமுத்திரக்கனி தொடர்பாக ப்ளாஷ்பேக் காட்சிகளும் பெரிதாக எடுபடவில்லை. சிவகார்த்திகேயனின் தாத்தா, அம்மா, தங்கை, பெரியப்பா பையன், அவரது மகன் தவிர மற்ற அனைவருமே கெட்டவர்கள் எனக் காட்டுவது ஒரு கட்டத்துக்கு மேல், அவர்கள் என்ன பேசுவார்கள் என்பது வரை பார்வையாளர்களால் யூகிக்க முடிகிறது.

ஆனால், படம் கொஞ்சம் போரடிப்பது போல் இருக்கும் போது சில காமெடி காட்சிகள் மூலம் அதை மறக்கடித்துவிடுகிறார் இயக்குநர் பாண்டிராஜ். 'நல்லது செய்தாலே அரசியலுக்கானு கேட்கிறாங்க. அதனாலயே நல்லது செய்யவே பலர் யோசிக்கிறாங்க', '100 ரூபாய் வெச்சு இருக்கிறவன் நிம்மதியாக தூங்கினா 100 கோடி வெச்சு இருப்பதற்கு சமம். 100 கோடி வெச்சு இருக்கிறவன் நிம்மதியாகத் தூங்காவிட்டால் 100 வெச்சு இருப்பதற்குச் சமம்', ’சொந்தம் மாதிரி யாரும் சந்தோஷப்படுத்தவும் முடியாது. சொந்தம் மாதிரி யாரும் கஷ்டப்படுத்தவும் முடியாது’ என்று பல இடங்களில் வசனகர்த்தா பாண்டிராஜும் கவனம் பெறுகிறார். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு கிராமத்து அழகைக் கச்சிதமாகப் படம்பிடித்துள்ளது. இமான் இசையில் 'எங்க அண்ணன்', 'உன் கூடவே பிறக்கணும்' ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

படத்தில் சில குறைகள் இருந்தாலும், அதனை மறந்து போராடிக்காமல் பார்க்க வைத்த விதத்தில் சபாஷ் பெறுகிறது 'நம்ம வீட்டுப் பிள்ளை'.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x