Published : 27 Sep 2019 04:12 PM
Last Updated : 27 Sep 2019 04:12 PM

மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை; பிரதமர் மோடி பேச்சுகளின் மொழிமாற்ற உரிமையை வாங்க ஆசை- தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா

கோவை

மத்திய அரசு இந்தியைத் திணிக்கவில்லை எனவும் பிரதமர் மோடி உரைகளின் மொழிமாற்ற உரிமையை வாங்க விரும்புகிறேன் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று கோவையில் நடைபெற்ற விழாவொன்றில் பேசிய அவர், ''மத்திய அரசு ஏழைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை நமக்கு வந்து சேர்வதில்லை. 90% தமிழர்களுக்கு இந்தி தெரியாது.

எல்லோரும் இந்தியைத் திணிக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். நாட்டுக்குள் பொதுவாக இருக்கும் ஒரு மொழி, குறிப்பாக ஆங்கிலம் வேண்டாம் என்றால் ஒப்புக் கொள்வோமா?

இன்னொரு மொழியைத் தெரிந்துகொள்வதில் எந்தத் தவறும் கிடையாது. அதை அரசியலாக்குகிறார்கள். குழந்தைகள் புரிந்துகொள்ளும் அளவுக்காவது மூத்த அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

தனிப்பட்ட வகையில் அவர்களுக்கு பயம் இருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தியை எல்லோரும் கற்றுக்கொண்டால் நாமும் கற்க வேண்டிவரும்; பிரதமரின் பேச்சைக் கேட்டு நாமும் மாறிவிடுவோமா என்ற பதற்றமும் பயமும் அவர்களுக்கு இருக்கிறது. தமிழ்ப் படங்களை தெலுங்கு, இந்தி மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ததில் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறோம்.

பிரதமர் மோடி பேச்சுகளின் மொழிமாற்ற உரிமைகளை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறேன். அதைத் தமிழக மக்களுக்குப் போட்டுக் காட்டுவேன். மொழியே தெரியாமல் மோடியின் பேச்சை ரசித்திருக்கிறேன். எனக்கு இந்தி தெரியாது; கற்றுக்கொள்ள வேண்டும்.

இதை இந்தித் திணிப்பாகக் கருதாதீர்கள். பொதுவான ஒரு மொழி வளரும்போது இன்னொரு மொழி அழிந்துவிடும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இது சரியல்ல. கீழடி அகழாய்வும் தமிழர்களுக்குப் பெருமையான விஷயமே. ஆராய்ச்சியை யாருமே தடுக்கவில்லை. ஒரு குழு அதில் அரசியல் செய்துகொண்டிருக்கிறது. அது அவர்களின் வேலையாக இருக்கலாம். நாளைய சமுதாயத்தினர், நாட்டுக்கு எது நல்லது என்று உணர்ந்து செயல்பட வேண்டும்'' என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x