Published : 27 Sep 2019 12:50 PM
Last Updated : 27 Sep 2019 12:50 PM

சமூக வலைதளங்களில் பரவும் கடவுள், மதம் தொடர்பான செய்திகள்: நடிகர் சிவகுமார் பதில் 

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் சிவகுமார் பற்றியும் அவர் குடும்பத்தினர் பற்றியும் - கடவுள், மதம் சம்பந்தமாக வெளியான சில செய்திகளுக்கு அவர் பதிலளிக்கும் வகையில் , வீடியோ செய்தி ஒன்றை சிவகுமார் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

‘‘நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவனா?. சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், விநாயகன், லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி, மீனாட்சி என சாமி கும்பிடுபவர்கள் நம் நாட்டில் பல கோடி பேர் இருக்கிறார்கள். அல்லாவையும், ஏசுவையும் கும்பிடுபவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள். கடவுளுக்கு வடிவம் இல்லை; ஆண், பெண் என்ற பேதம் இல்லை!

‘கடவுள் என்பது உணரக்கூடிய விஷயம்; விவாதம் செய்யக்கூடிய விஷயமல்ல’என்று சொன்னவர் மகாத்மா காந்தி. ஆனால், அவரே உயிர் துறக்கும்போது ‘ஹேராம்’என்று சொன்னதாக வரலாறு சொல்கிறது. அதாவது, அவர் ராமனை வணங்கியிருக்கிறார்.

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். என்னுடைய அப்பா முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும், உபவாசம் இருந்து, பழனி மலைக்குச் சென்று, திருப்புகழ் மொத்தப் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்லி சாமி கும்பிட்டுத் திரும்பி வருவார். நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன். இப்பொழுதும் எங்கள் வீட்டுப் பூஜையறையில் எல்லா சாமி படங்களும் இருக்கின்றன.

இந்திய மண்ணுக்கு பெருமை சேர்ப்பது ராமாயணம், மகாபாரதம். அந்த மாபெரும் காவியங்களின் முழுக்கதையையும் பாடல்களுடன், இரண்டு மணி நேரம் 5000 பேருக்கு முன்னிலையில் உரையாக நிகழ்த்தியிருக்கிறேன். யூ டியூபில் இப்பொழுதும்கூட அதை நீங்கள் பார்க்கலாம். உண்மையான பக்தி என்பது... அடுத்தவரை நேசித்தல், அவர்களைச் சமமாக மதித்தல், இல்லாதவர்கள், முடியாதவர்களுக்கு ஓடிச்சென்று உதவி செய்தல். இதைச் செய்பவன்தான் உண்மையான பக்திமான்; உயர்ந்த பக்திமான்! எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன.’’

இவ்வாறு சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மகாபாரதச் சொற்பொழிவு போலவே, உலகப் பொதுமறையான திருக்குறளையும் அனுபவக் கதைகள் மூலம் எளிய மொழியில் சொல்லும் முயற்சியில் நடிகர் சிவகுமார் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x