Published : 24 Sep 2019 08:26 PM
Last Updated : 24 Sep 2019 08:26 PM

நடிகையானதில் அப்பாவுக்கே ரொம்ப ஆச்சரியம்: 'நடிகவேள் செல்வி' ராதிகா நெகிழ்ச்சி

நான் நடிகையானதில் அப்பாவுக்கே ரொம்ப ஆச்சரியம் என்று 'நடிகவேள் செல்வி'ராதிகா நெகிழ்ச்சியுடன் பேசினார்

'ஆயிரத்தில் இருவர்' படத்தைத் தொடர்ந்து 'மார்க்கெட் ராஜா MBBS' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார் சரண். இதில் ஆரவ், ராதிகா, காவ்யா தாப்பர், நிகிஷா படேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (செப்டம்பர் 24) நடைபெற்று வருகிறது. இதில் படக்குழுவினருடன் சரத்குமார், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகை ராதிகாவுக்கு 'நடிகவேள் செல்வி' பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது படக்குழு. இதனைத் தொடர்ந்து ராதிகா சரத்குமார் பேசியதாவது:

''இந்தப் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவுக்கு வரணும் என்றார் சரண் சார். அதில் பட்டம் கொடுக்கப் போகிறோம் என்றார். ஆனால் இந்த அளவுக்கு எல்லாம் எதிர்பார்க்கவில்லை. இதில் என் தந்தை நடிகவேளைப் பாராட்டியது தான் பெரிய விஷயம். அந்தப் பட்டம் ரொம்ப கனமாக இருந்தது. அவரது பெயர் மாதிரியே ரொம்ப கனமான விஷயத்தைக் கையில் கொடுத்துள்ளீர்கள்.

நான் முதலில் நடிக்க வந்தபோது, பாரதிராஜா சாருக்கு நான் எம்.ஆர்.ராதா பொண்ணு என்பது தெரியாது. என்னைப் பார்த்து இந்தப் பெண் வித்தியாசமாக இருக்கிறார் என்றுதான் 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் நடிக்க வைத்தார். நான் நடிப்பது எல்லாம் உறுதியானவுடன்தான், அவருக்கே எம்.ஆர்.ராதா பொண்ணு என்பதே தெரியவந்தது. உடனே பயந்துவிட்டார். அப்பா துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிடுவாரோ என்று. என்னம்மா இது என்றார். உடனே எங்கம்மா வந்து இல்ல நீங்கள் ஒரு முறை அவரை வந்துப் பாருங்கள் என்று கூறினார்.

அப்போது எங்கப்பாவை பாரதிராஜா சார் வந்து பார்த்தார். ராதிகாவா நடிக்கப் போறா என்று எங்கப்பாவுக்கு ஒரே சிரிப்பு. எங்க வீட்டிலேயே சினிமா ஆசையில்லாமல், எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டே இருப்பேன். என் தங்கையைத் தான் பலரும் நடிகையாவாள் என்று நினைத்தார்கள். இதனால் எங்கப்பாவுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.

முதல் நாள் ஷுட்டிங் போகும்போது, அவர் வாழ்க்கையில் செய்யாத காரியம் ஒன்றைச் செய்தார். வீட்டில் மேக்கப் போட ஆரம்பிக்கும் போது, அதைத் தொட்டு என் நெற்றியில் வைத்து 'என் தொழில் உன் கையில் இருக்கட்டும்' என்றார். அப்போ நான் ரொம்ப சின்னப் பொண்ணு. அதோட ஆழம் அப்போது புரியவில்லை. இப்போது அதை நினைக்கும்போது, அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அப்பா, இயக்குநர் பாரதிராஜா, அம்மா ஆகியோரின் ஆசீர்வாதத்தால்தான் இவ்வளவு தூரம் வந்துள்ளேன்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆண்டு கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம் என்று நினைப்பேன். ஆனால், வெவ்வேறு பணிகள் வந்து அமையும். 'மார்க்கெட் ராஜா MBBS' படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. வித்தியாசமாகச் சிந்திக்கக்கூடியவர் இயக்குநர் சரண். இந்தப் படத்தின் கேரக்டரால்தான் எனக்கு இந்தப் பட்டத்தைக் கொடுத்துள்ளார்கள் என நினைக்கிறேன். அதில் என் அப்பா சாயல் இருக்கும்''.

இவ்வாறு ராதிகா சரத்குமார் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x