Published : 23 Sep 2019 11:37 AM
Last Updated : 23 Sep 2019 11:37 AM

பெண்களுக்கும் பிடித்த  சிலுக்கு!  - இன்று சில்க் ஸ்மிதா நினைவுநாள்

வி.ராம்ஜி

கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே மார்க்கெட் வேல்யூ உண்டு. படத்தில் நடிக்கும் நாயகிக்கு இணையாக சம்பளம் வாங்கும் கவர்ச்சி நடிகைகள், படத்தில் ஒரு பாடலுக்கோ, அல்லது கிளாமராகவோ வந்து நிற்பார்கள். ஆனால் என்ன... பொதுவாகவே, ரசித்துக் கைத்தட்டும் ரசிகர்கள் கூட, பெரிய மரியாதையையோ கெளரவத்தையோ கவர்ச்சி நடனமாடும் நடிகைகளுக்குக் கொடுப்பதில்லை. மாடர்ன் தியேட்டர்ஸ் காலத்தில் இருந்தே, காபரே டான்ஸ் நடிகைகளும் கவர்ச்சி நடிகைகளும் இருந்திருக்கிறார்கள்தான். ஆனாலும் இந்த நடிகைக்குத்தான் இவ்வளவு பெரிய மரியாதையும் கெளரவமும் கொடுத்துக் கொண்டாடினார்கள்... கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இதில் பெண் ரசிகர்களும் ஏராளம் என்பதுதான் சுவாரஸ்யம். அப்படியொரு கெளரவம் மிக்க கவர்ச்சி நாயகி... சில்க் ஸ்மிதா!


விஜயலட்சுமிக்கு ஆந்திராதான் சொந்த ஊர். ஆனாலும் கரூர்தான் பூர்வீகம். சிறுவயதிலேயே அப்படியொரு அழகு. உடல், வனப்பு, அழகு என்பதையெல்லாம் தாண்டி, எல்லோரும் டிக் அடித்த விஷயம்... அவரின் கண்களுக்குத்தான்! அந்தக் கண்கள்... அப்படிப் பேசும். ‘சிலுக்கோட கண்ணு காந்தம் மாதிரிப்பா. என்னவோ செய்யுது. எப்படியோ இழுக்குது’ என்று திணறித் தவித்தது ரசிகர் கூட்டம்.


விஜயலட்சுமி சினிமாத்துறைக்குள் வந்தது மேக்கப் கலைஞராகத்தான். ஒப்பனைக் கலைஞர். ஆனால் அதிசய ஆச்சர்ய விநோதம்... ‘எந்த ஒப்பனைகளுமே இல்லாதவர்’ என்று சில்க்கைக் கொண்டாடி வியந்தது சினிமா உலகம்.


மேக்கப் உமன் விஜயலட்சுமியை, வினுசக்ரவர்த்திதான் நடிகையாக அடையாளம் கண்டுகொண்டு அறிமுகப்படுத்தினார். ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் விஜயலட்சுமியை ஸ்மிதா என பெயர் மாற்றி அறிமுகப்படுத்தினார். படத்தில் சாராயக் கடை நடத்தும் ‘சில்க்’ என்ற கேரக்டரில் அவர் நடித்தார். படம் வெளியானதும் சில்க் ஸ்மிதா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். ‘வா மச்சான் வா... வண்ணாரப் பேட்டை’ என்ற பாடலில் வருவார் சில்க் ஸ்மிதா. அதன் பின்னர்... ‘வா சிலுக்கு வா’ என சிகப்புக்கம்பளமிட்டு வரவேற்றது கோடம்பாக்கம்.


பிறகு வரிசையாகப் படங்கள்.பல படங்களில் ஒரு பாட்டுக்கு டான்ஸ். காபரே டான்ஸ். அப்போதுதான், பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் ராதாவுக்கு அண்ணியாக, அடக்க ஒடுக்கப் பெண்ணாக நடித்தார். ‘சகலகலாவல்லவன்’, ’மூன்றுமுகம்’ முதலான படங்களும் அவரின் பேர் சொல்லின.


கங்கை அமரன் இயக்கத்தில் ‘கோழி கூவுது’ படத்தில் இவரின் குணச்சித்திர நடிப்பு பேசப்பட்டது. இப்படி ஒருபக்கம் கேரக்டர் ரோல்களும் செய்தார். இன்னொரு பக்கம், கவர்ச்சியாட்டமும் போட்டார். சில்க் எப்படி வந்தாலும் அவரை ரசிக்க பெருங்கூட்டம் இருந்தது. ஆண்களையும் கடந்து பெண்களும் ரசித்துக் குதூகலித்தார்கள். காரணம்... அந்தக் கண்கள். பெண்ணின் மனதை பெண்கள்தான் அறிவார்கள் என்பார்களே. அதுபோல், அந்தக் கண்களுக்குள் இருண்டு வெளிப்பட்ட சோகத்தை, பெண்கள் அறிந்து கொண்டார்களோ என்னவோ?


அப்போதெல்லாம் பிலிம் ரோல்தான். ஒரு படத்துக்கு முதலில் பிலிம் ரோல் வாங்குகிறார்களோ இல்லையோ... சில்க்கின் கால்ஷீட்டைத்தான் முதலில் வாங்குவார்கள். ‘படத்தில் எந்தக் காட்சி, எந்தப் பாடல்’ என்பதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்வார்கள். இரண்டரை மணி நேர சினிமாவில், நாலரை நிமிடப் பாடலுக்கு வரும் சில்க் ஸ்மிதாவுக்கு சம்பளமும் அதிகம். போஸ்டரிலும் இடம் பிடித்துவிடுவார். அதான் சில்க் மேஜிக். அவரின் குரல் மட்டும் என்னவாம்... இழையும் குழையும். கொஞ்சிக்கெஞ்சிக்கொஞ்சும்.


பாலுமகேந்திராவின் ‘நீங்கள் கேட்டவை’ படமும் ‘மூன்றாம் பிறை’ படமும் சில்க் ஸ்மிதாவாலேயே மறக்க முடியாத படங்கள். அதிலும் ‘மூன்றாம் பிறை’ படத்தின் கேரக்டரை, சில்க்கைத் தவிர வேறு எவரும் செய்யவே முடியாது. கமலுடன் ஆடிய ‘நேத்து ராத்திரி யம்மா’வைப் போலவே, ‘பொன்மேனி உருகுதே’ பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது.


இப்படியொரு காலகட்டத்தில்தான், நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், ‘அவசர போலீஸ் 100’ திரைப்படத்தில் அற்புதமான கேரக்டரைக் கொடுத்தார். போலீஸ்கார பாக்யராஜின் மனைவியாக, அதுவரை தொடாத காமெடியிலும் புகுந்து, நம்மைச் சிறைப்பிடித்தார்.


திரையுலகில் அவர் ரவுண்டு கட்டி ஆடிய வருடங்கள் 17. இந்த 17 வருடங்களில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்தார். விதம்விதமான ரோல்களில் நடித்தார். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.


‘ஏன் இவ்வளவு வேகமாக, தடதடவென ஓடுகிறார் சில்க்’ என்று ரசிகர்கள் வியந்துகொண்டிருக்கும் போதே, சில்க் ஸ்மிதா எனும் ஆச்சர்யக்குறி, மரணத்தைத் தழுவியது... அவசரம் அவசரமாக! ஆச்சரியக்குறி... கேள்விக்குறியாகி, ‘ஏன்... எதனால்... நிஜம்தானா... தற்கொலைதானா... கொலையா...’ என்றெல்லாம் மனதில் இருந்து எழுந்த கேள்விகள்... இன்னமும் கேள்விகளாக, கேள்விக்குறிகளாக!


1960ம் ஆண்டு பிறந்த சில்க் ஸ்மிதா, இன்றைக்கு இருந்திருந்தால், இன்னும் 60 வயதைத் தொட்டிருக்கமாட்டார். 96ம் ஆண்டு இறந்தார். தமிழகத்தின் காற்று, அந்தச் சேதியைக் கேட்டு, ஒருநிமிடம் அசையாமல் அதிர்ந்து நின்று, அஞ்சலி செலுத்தியது. 36ம் வயதில் இறந்தார் சில்க். இப்போது இறந்து 23 வருடங்களாகிவிட்டன. ஆனாலும், சில்க் ஸ்மிதாவையும் அவரின் கண்களையும் முக்கியமாக அவரின் மர்ம மரணத்தையும் மறக்கவே இல்லை ரசிகர்கள்!


இன்று செப்டம்பர் 23ம் தேதி சில்க் ஸ்மிதா நினைவுநாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x