Published : 20 Sep 2019 12:03 PM
Last Updated : 20 Sep 2019 12:03 PM

தன் மீதான வெறுப்புகளுக்குப் பதிலடி கொடுத்த அட்லீ

இயக்குநர் அட்லீ | கோப்புப் படம்

சமூக வலைதளத்தில் பரவும் தன் மீதான வெறுப்புகளுக்கு, 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் பதிலடி கொடுத்துப் பேசினார் இயக்குநர் அட்லீ.

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பிகில்’. மகளிர் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (செப்டம்பர் 19) நடந்தது.

இந்த விழாவில் இயக்குநர் அட்லீ பேசியதாவது:

''நான் கதை சொல்லும்போது எப்போதுமே எனது பழைய க்ரே நிற சட்டையைத் தான் போட்டுக் கொண்டு போவேன். அது எனக்கு அதிர்ஷ்டம் என்று நினைத்தேன். 'ராஜா ராணி', 'தெறி' வரை அதுதான் அணிந்தேன். ஆனால் அது 'மெர்சல்' சமயத்தில் எனக்குப் பொருந்தவில்லை. அதனால் வருத்தமாக இருந்தேன். ஆனால் விஜய் சார் அந்தப் படம் செய்ய ஒப்புக்கொண்டார். அப்போதுதான் சட்டை எனது அதிர்ஷ்டம் இல்லை, விஜய் சார் தான் என் அதிர்ஷ்டம் என்று புரிந்தது.

விஜய் சார் நிலையில் இருக்கும் ஒருவர் எளிதாக ஒரு மாஸ் படம் செய்ய ஒப்புக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர் இப்படி பெண்கள் உரிமைக்கான படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எழுத்து, இயக்கம் என இரண்டு விதத்திலும் ’பிகில்’ இதுவரை நான் எடுத்ததில் சிறந்த படமாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியும்.

மற்ற ஹீரோக்களுடன் பணியாற்ற வேண்டும் என்று விஜய் சார் எப்போதும் என்னிடம் சொல்வார். ஆனால் என்னால் முடியவில்லை. இந்த தேசத்திலேயே சிறந்த நடனம் ஆடுபவர், முன்னணி நடிகர் உங்களிடம் இருக்கும் போது வேறு யாரும் மனதில் வர மாட்டார்கள். அவரை நான் வேறொரு தளத்தில் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். அதை நான் என் அண்ணனுக்காகச் செய்வேன். யாராலும் தடுக்க முடியாது. பொதுவாக இயக்குநர்கள் ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், நான் மிகப்பெரிய விஜய் ரசிகன்.

ஆங்கிலம், இந்தி ஆகியவை வெறும் மொழிகள் மட்டுமே. அவற்றை வைத்து ஒரு மனிதனின் புத்திசாலித்தனத்தை எடை போடக்கூடாது. அதே போலக் கருப்பு, வெள்ளை எல்லாம் வெறும் நிறங்களே. ஒருவரின் தோல் நிறத்தை வைத்து அவரை எடை போடக்கூடாது. என்னை வெறுப்பவர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பதால் தான் எப்போதும் என்னைப் பற்றியே பேசுகின்றனர். அவர்களை வெற்றி பெறுவதுதான் இங்கு உண்மையான ஆட்டம். நான் காப்பி அடிப்பவன், எனக்கு அழகான மனைவி கிடைத்திருக்கக்கூடாது என்றெல்லாம் பேசுகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவே இல்லை.

நான் மீண்டும் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். நயன்தாரா எனக்கு மூத்த சகோதரியைப் போல. திரையில் அவரது இருப்பு கம்பீரமானது. இந்தப் படத்தில் நான் பெண்களைப் போற்றக் காரணம், அவர்கள் இல்லையென்றால் இங்கு யாரும் இல்லை. எனது எல்லா படங்களின் பின் கதைகளுமே பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டதுதான்.

நான் அதிகம் செலவிடுகிறேன் என்கிறார்கள். என்ன சொன்னாலும், சர்வதேச கால்பந்து ஆட்டங்களுக்கு இணையாகப் பிரம்மாண்டத்துடன் 'பிகில்' படத்தின் கால்பந்தாட்டக் காட்சிகள் இருக்கும். பார்சிலோனா ஆட்டத்தைப் பார்க்கும் அனுபவத்தை என் ரசிகர்களுக்குத் தர வேண்டும் என விரும்புகிறேன். அதைச் செய்திருக்கிறோம். என் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

'பிகில்' படத்தின் ட்ரெய்லர் முடிவாகிவிட்டது. சென்சார் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சாத்தியப்பட்டால் அக்டோபர் முதல் வாரம் ட்ரெய்லர் வெளியாகும்''.

இவ்வாறு இயக்குநர் அட்லீ பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x