Published : 20 Sep 2019 11:20 AM
Last Updated : 20 Sep 2019 11:20 AM

விளையாட்டை மையப்படுத்திய படங்களின் பாகுபலியாக 'பிகில்': இசை வெளியீட்டு விழாவின் 25 சிறப்பு அம்சங்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு, இந்துஜா, வர்ஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

தீபாவளி வெளியீடு என்பதால் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னைக்கு அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சியும், விஜய்யின் அம்மா ஷோபாவும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடைபெற்ற சிறப்பம்சங்களின் தொகுப்பு:

* 3 மணிக்கு விழா என்று அழைப்பிதழில் குறிப்பிட்டிருந்தனர். ஆகையால், 2 மணியிலிருந்தே விழா நடைபெறும் கல்லூரிக்கு உள்ளேயும், வெளியேயும் ரசிகர்கள் கூடினர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால், நிகழ்ச்சியோ 6 மணியளவில் தான் தொடங்கியது.

* விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்குமே, 'பிகில்' டி-ஷர்ட்டுக்ளும், விசிலும் அளிக்கப்பட்டன. விழா தொடங்கும் வரையில் விஜய் நடித்த படங்களின் ஹிட் பாடல்களும், விஜய்யின் முந்தைய விழா பேச்சுகளும் ஒளிபரப்பப்பட்டன.

* நடிகர் சிவாவும், ரம்யாவும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.

* முதல் நபராக மேடையேறிய ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரங்கராஜன் தனது பேச்சில் "'பிகில்' படக்குழுவினர் 400 பேருக்கு விஜய் தங்க மோதிரம் அளித்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது" எனக் குறிப்பிட்டார்.

* ஆனந்த்ராஜ் பேசும் போது, "முன்பு விஜய்யுடன் நடிக்கும் போது அண்ணா என்று அழைப்பார். இப்போது நெருங்கிய நண்பர்களாகி விட்டதால் நண்பா என்று அழைக்கிறார். படத்தின் தலைப்பு தான் 'பிகில்'. ஆனால், இந்தப் படம் பலருக்கும் திகிலை உண்டாக்கும். இந்தப் படம் அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பணம்" என்று பேசினார்.

* ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு பேசும் போது, "ஒரு சிலர் மட்டுமே சமூகத்தில் பெரிய உச்சத்தை அடைய முடியும். அதனை விஜய் சார் அடைந்துள்ளார். இந்தப் படத்தில் அவருடைய ஆட்டம், வேற லெவல். அவர் தான் இந்தத் தலைமுறையின் பிரதிபலிப்பாக இருக்கிறார். வெளியே பேசுபவர்கள் ஆயிரம் பேசட்டும். ஆனால், அட்லீயின் வளர்ச்சி தனித்துவமானது" என்று குறிப்பிட்டார்.

* எடிட்டர் ரூபன் பேசும் போது, "எனக்கு கால்பந்து விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் 'பிகில்' மூலமாக அதைப் பற்றித் தெரிந்து கொண்டேன்" என்று பேசினார்.

* எழுத்தாளர் ரமணகிரி வாசன் பேசும் போது, "விஜய்க்கு வசனங்கள் எழுதும்போது மட்டும் அதிகப் பொறுப்புடன் எழுதுவேன். ஏனென்றால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள் அவரது வசனத்தைக் கவனிக்கிறார்கள். 'மெர்சல்' படத்தின் வசனங்கள் இந்தியா முழுக்க பேசுபொருளாக மாறியது. இதில் அப்பா மற்றும் கல்லூரி மாணவன் என விஜய் பிரமாதமாக நடித்துள்ளார். இயக்குநர் அட்லீ தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார். அவரைப் பற்றிய மீம்ஸை அவரே எனக்கு அனுப்பி வைப்பார்" என்று தெரிவித்தார்.

* கலை இயக்குநர் முத்துராஜ் பேசும் போது, "உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக இந்தப் படத்துக்காகக் கால்பந்தாட்ட அரங்குகள் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

* பாடலாசிரியர் விவேக் பேசும்போது, "அரங்கிற்கும் வருவதற்கு 3 மணி நேரமானது. விஜய் ரசிகர்கள் சிலர் தான் அதற்கு உதவினார்கள். விஜய் சாரிடம் ஒரு காந்த சக்தி இருக்கிறது. அதனால் தான் அவருடைய ரசிகர்கள் இந்தச் சமூகத்துக்குப் பல நல்ல விஷயங்கள் பண்ணுகிறார்கள்" என்றார்.

* விஜய் படம் என்றால் ஒரு காட்சி என்றில்லை, ஒரு ஷாட்டில் கூட நடிக்கத் தயாராக இருப்பதாக நடிகர் மற்றும் இயக்குநர் மனோபாலா தெரிவித்தார்.

* நடிகர் கதிர் பேசும் போது, "விஜய் அண்ணா அன்பின் சின்னம். அதனால் மட்டுமே அவரது ரசிகர்கள் மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். அட்லீ அண்ணா ஒவ்வொரு படத்திலும் தனது 200% உழைப்பைக் கொடுத்துப் பணிபுரிவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை மிகவும் சோர்வாக அவருடைய காரில் படுத்துத் தூங்குவதைப் பார்த்திருக்கிறேன். அவர் பணிபுரிவதைப் போல் நான் 10% பணிபுரிந்தால் போதுமானது" என்று குறிப்பிட்டார்.

* நடிகர் விவேக் பேசும் போது, "அத்திவரதர் தரிசனத்துக்குப் பிறகு இங்கு தான் அதிக கூட்டத்தைப் பார்க்கிறேன். இந்தப் படத்தின் கால்பந்தாட்டக் காட்சிகள், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கும்" என்று பேசினார்.

* 'பிகில்' படம் உருவான விதம் வீடியோவாக திரையிடப்பட்டது. அதில் யோகி பாபுவிடம் விஜய், "உன் கூட நடிச்சதை விட, உன் டூப் கூட ரொம்ப நாள் நடிச்சேன்பா" என்று பேசியிருப்பது இடம்பெற்றிருந்தது.

* நடிகர் யோகி பாபு பேசும் போது, "எப்பவும் சொல்ற மாதிரி விஜய் அண்ணன் எப்போதுமே வேற லெவல் தான்" என்று தெரிவித்தார்.

* இந்தப் படத்தில் நிஜ கால்பந்தாட்ட வீராங்கனைகள் மேடையேறினார்கள். அவர்கள் தங்களது பேச்சில் இந்தப் படத்துக்குப் பிறகு நிறையப் பெண்கள் கால்பந்தாட்டத்துக்கு முன்னுரிமை அளிப்பார்கள் என்றனர்.

* நடிகை வர்ஷா பேசும்போது, "கால்பந்தாட்டக் காட்சிகளுக்காக 2 மாதங்கள் பயிற்சி எடுத்து நடித்துள்ளோம். விஜய் சார் மிகவும் ஸ்டைலாக இதில் விளையாடியுள்ளார். எனது பள்ளி நாட்களில் இப்படியொரு கோச் இல்லையே என்று வருந்தினேன்" என்றார்.

* நடிகை இந்துஜா பேசும்போது, "விஜய் சாரைப் பார்த்தாலே சுத்திப் போடணும் எனத் தோன்றும். நிஜ கால்பந்தாட்ட வீரர் போல் இதில் நடித்துள்ளார்" என்றார்.

* இந்தப் படத்தில் ரோபோ ஷங்கரின் மகள் இந்தரஜா திரையுலகிற்கு அறிமுகமாகிறார். டிக் டாக் வீடியோக்கள் மூலமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்பாவும், மகளும் மேடையேறினர். அப்போது பேசிய ரோபோ ஷங்கர், "’பிகில்’ படத்தில் என் மகளை மட்டுமல்ல அனைத்து கால்பந்தாட்ட வீராங்கனைகளையும் படக்குழு நன்றாகக் கவனித்துக் கொண்டது எனத் தெரிவித்தார். அதுமட்டுமன்றி இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க என் மகளை அனுப்பியதற்கு விஜய் பாராட்டினார்" என்று பேசினார்.

* 'பிகில்' படத்தின் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாக மேடையில் பாடினார். அதனைத் தொடர்ந்து பேசும் போது, "மகிழ்ச்சி, உணர்ச்சி, ஊக்கம் இவற்றின் கலவைதான் 'பிகில்'" என்று குறிப்பிட்டார்.

* தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் பேசும் போது, "விஜய்யுடன் பணிபுரிய ஆறு வருடங்கள் காத்திருந்தோம். விஜய் படங்களின் அனைத்து சாதனைகளையும் 'பிகில்' முறியடிக்கும். விளையாட்டை மையப்படுத்திய படங்களின் பாகுபலியாக பிகில் இருக்கும்" என்றார்.

* தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசும் போது, "என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் 'பிகில்'. விஜய் சாருடைய உழைப்பு இதில் தெரியும். ஒரு நாள் ப்ரேக் எடுத்தால் கூட தயாரிப்பாளர்களுக்குப் பாதிப்பு என்பதை உணர்ந்து அதிகாலை 2 மணி வரை எல்லாம் நடித்துக் கொடுத்தார்" என்றார்.

* இயக்குநர் அட்லீ பேசும் போது, "விஜய் அண்ணா எப்போதுமே மற்ற நடிகர்களுடன் பணிபுரியவேண்டும் என்று அட்வைஸ் பண்ணுவார். பெரிய நடிகர், சிறப்பாக நடனமாடக் கூடியவர். அதனால் எந்தவொரு கதை எழுதினாலும், அவர் தான் மனதில் வருகிறார். என் வாழ்க்கையில் பிடித்த நடிகர் யார் என்றால் அது விஜய் சார் தான். 'மெர்சல்' படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் அண்ணனை விட்டுப் போக மனசில்லை" என்று பேசினார். மேலும், தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்துக்குமே பதிலளித்துப் பேசினார்.

* இறுதியாக விஜய் பேசினார். முதலில் 'வெறித்தனம்' பாடலின் சில வரிகளைப் பாடினார். அதனைத் தொடர்ந்து பேசும் போது, "பெண்கள் ஜெயிக்கிற படத்தில் வாழ்க்கையில் ஜெயித்த நயன்தாரா இருக்கிறதும் சந்தோஷம். யோகி பாபுவால் அவருடைய வீட்டு கிரகப் பிரவேசத்துக்குக் கூட போக முடியவில்லை. இப்போது அவருக்குப் பெண் பார்த்து வருவதாகக் கேள்விப்பட்டேன். கரெக்ட்டா போயிடுங்க யோகி.... வீடு யார் வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால், தாலி...." என்று பேசினார். விஜய்யின் இந்தப் பேச்சுக்கு அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

* இதனைத் தொடர்ந்து சுபஸ்ரீயின் மரணம், ரசிகர்கள் மீதிருக்கும் அன்பு, 'ப்ரண்ட்ஸ்' படத்தின் போது கிடைத்த அனுபவம், சமூக வலைதளத்தில் நடக்கும் ஹேஷ்டேக் போட்டி என அனைத்தையும் பேச்சில் குறிப்பிட்டு, ரசிகர்களிடம் அப்ளாஸ் அள்ளினார் விஜய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x