Published : 15 Sep 2019 10:17 AM
Last Updated : 15 Sep 2019 10:17 AM

’’சண்முகமணி வாத்தியாரை மறக்கவே முடியாது’’ - கே.பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டி

வி.ராம்ஜி


‘’சண்முகமணி வாத்தியாரை மறக்கவே முடியாது. அதனால்தான் படத்தில் கூட வாத்தியார் கேரக்டருக்கு அவர் பேரையே வைத்தேன்’’ என்று கே.பாக்யராஜ் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.


நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் இயக்கிய முதல் படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’. 1979ம் ஆண்டு திரைக்கு வந்தது இந்தப் படம். இந்த வருடத்துடன் கே.பாக்யராஜ் இயக்குநராகி, 40 வருடங்களாகிவிட்டன.


இதையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ சார்பில், அவருக்கு நினைவுப்பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.


மேலும் கே.பாக்யராஜ், தன் 40 ஆண்டு கால அனுபவங்களை வீடியோ பேட்டியாகப் பகிர்ந்துகொண்டார்.


கே.பாக்யராஜ் அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்ததாவது:


எட்டாவது வரைக்கும் எங்கள் வகுப்பில் பெண்கள் கிடையாது. அப்போதிருந்துதான் ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து வகுப்பில் இருந்தோம். ‘பார்க்காதே, பேசாதே’ என்றெல்லாம் சொல்லி வைத்திருந்ததாலேயே, ஒரு குறுகுறுப்பு இருந்தபடியே இருந்தது.


ஆனால், ஆணும்பெண்ணும் சேர்ந்து படிப்பதுதான் நல்லது. அப்போதுதான் ஆண் பற்றிய பிரமிப்பு பெண்ணுக்கும் பெண்ணைப் பற்றிய பிரமிப்பு ஆணுக்கும் விலகும் என்பது என் அபிப்ராயம்.


அந்த வயதுக்கே உண்டான குறும்பு எனக்கும் இருந்தது. கேலியும் கிண்டலுமாகத்தான் இருந்தேன். அப்படிக் கிண்டல் செய்து ஆசிரியர்களிடம் மாட்டிக்கொண்டதும் நடந்திருக்கிறது. சில வாத்தியார்கள் தண்டிப்பார்கள். சில வாத்தியார்கள், ‘இந்த வயசுல இப்படிலாம் இருப்பதுதானே’ என்று மன்னித்து, அறிவுரை சொல்லியும் இருக்கிறார்கள்.


இதில் சண்முகமணி சார், ரொம்பவே வித்தியாசமானவர். அவர் பாடம் நடத்தும் விதமே ஸ்டைலாக இருக்கும். வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டு வரவில்லையென்றால், திட்டுவதோ அடிப்பதோதானே நடக்கும். ஆனால் சண்முகமணி சார், ‘எங்கே வீட்டுப்பாடம் எழுதாத பிரகஸ்பதிகள் எழுந்திருங்க பாக்கலாம்’ என்பார். ‘சரி... ஏன் வீட்டுப்பாடம் எழுதலைங்கறதுக்கு ஆளாளுக்கு ஒரு கதை வைச்சிருப்பீங்களே. சொல்லுங்க, கேப்போம்’ என்பார்.


ஒவ்வொருத்தரும் ஒரு விஷயம் சொல்லுவோம். உடனே சண்முகமணி சார், ‘இந்தக் கதை சுமாரா இருக்குப்பா’, ‘இந்தக் கதை நம்பவே முடியலியே’,’அட... இந்தக் கதை உருக்கமா இருக்குப்பா’ என்றெல்லாம் கமெண்ட் பண்ணுவார். இதெல்லாமே சுவாரஸ்யமாக இருக்கும்.
அதேபோல், ஒரு ஆங்கில வாசகம் சொல்லி, ‘இதனாலதான் வெள்ளைக்காரன் இப்படிச் சொன்னான்’ என்று சொல்லிவிட்டு, அதற்கு தமிழ் அர்த்தமும் சொல்லுவார். இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லிக்கொண்டே இருப்பார். அவருடைய இந்த விஷயங்கள் எல்லாமே என்னை ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருந்தது. அதனால்தான், நான் வாத்தியாராக நடிக்கும் படங்களில், அதுபோன்ற காட்சிகளையெல்லாம் வைத்து, காமெடி செய்தேன்.


‘சுந்தரகாண்டம்’ படத்தில், நான் நடித்த வாத்தியார் கேரக்டருக்கு ‘சண்முகமணி’ என்றே பெயர் வைத்தேன். இதெல்லாம் பார்த்துவிட்டு, அவர் ரொம்பவே சந்தோஷப்பட்டார். இன்றைக்கும் கூட நானும் அவரும் தொடர்பில் இருக்கிறோம். சண்முகணி சார், இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். அடுத்த மாதம் அவர் பெண்ணுக்கு திருமணம். வந்து பத்திரிகை வைத்தார். அற்புதமான ஆசிரியர் சண்முகமணி சார்’.


இவ்வாறு கே.பாக்யராஜ் தன் பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


கே.பாக்யராஜின் வீடியோ பேட்டியைக் காண :

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x