Published : 14 Sep 2019 02:11 PM
Last Updated : 14 Sep 2019 02:11 PM

‘நின்னு கோரி’ தமிழ் ரீமேக்கில் அதர்வா

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம், தெலுங்குப் படத்தின் ரீமேக் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அதர்வாவை வைத்து ‘பூமராங்’ படத்தை இயக்கியவர் ஆர்.கண்ணன். மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், கடந்த மார்ச் 8-ம் தேதி வெளியானது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின்போதே, மறுபடியும் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜூலை 29-ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. காதலை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்துக்கு, கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். எம்.கே.ஆர்.பி. புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மசாலா பிக்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கில் வெளியான ‘நின்னு கோரி’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப் படம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிவா நிர்வனா இயக்கத்தில், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான படம் இது.

நானி, நிவேதா தாமஸ், ஆதி பின்னிசெட்டி உள்ளிட்ட பலர் இதில் நடித்தனர். இதில், ஆதி நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் அமிதாஷ் நடிக்கிறார். தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் வில்லனாக நடித்த இவர், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘வானம் கொட்டட்டும்’ படத்திலும் நடித்து வருகிறார்.

அதர்வா படத்தைத் தொடர்ந்து, சந்தானம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஆர்.கண்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x